சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து TN-43 A 2379 என்ற பதிவு எண் உள்ள லாரி, அளவிற்கதிகமாக மரக்கட்டைகள் ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை சேலம் சென்றுக்கொண்டிருந்தது.
இந்த லாரியை ஏற்காட்டை சேர்ந்த அருணா கவுண்டர் மகன் செட்டி (வயது 56) என்பவர் ஓட்டி வந்தார்.
ஏற்காடு மலைப்பாதையின் 9 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே லாரி சென்றுக்கொண்டிருந்தபோது, மரக்கட்டைகளை தாங்கிக்கொண்டிருந்த ஓரக்கட்டை விலகியதால், மரகட்டைகள் சரிந்து கீழே விழுந்தன. இதனால் லாரி கவிழ்ந்தது. இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார்.
சாலையில் சரிந்த மரக்கட்டைகள் அனைத்தையும் உடனடியாக வேறு லாரிக்கு மாற்றி அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டன. இதனால் அவ்வழியே வந்த வாகனங்கள் அரை மணி நேரம் காத்திருந்து சென்றன.
இது போன்று மரலோடு லாரிகள் மலைப்பாதைகளில் அடிக்கடி கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன. ஏற்காடு – சேலம் மலைப்பாதை துவக்கத்திலேயே வனத்துறையின் சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டு, அனைத்து லாரிகளும் சோதனை செய்யப்பட்ட பின்னரே அங்கிருந்து புறப்படும்.
இவ்வாறு அளவிற்கு அதிகமாக மரக்கட்டைகளை ஏற்றி வரும் லாரிகளை வனத்துறையினர் கண்டுகொள்ளாமல் அனுப்பி விடுகின்றனர். இதனால், மலைப்பாதையில் மரலோடு லாரிகள் கவிழும் நிகழ்வு அடிக்கடி ஏற்படுகின்றன.
எனவே, வனத்துறையினர் ஏற்காட்டில் லாரி புறப்படும்போது, உரிய அளவில் மரக்கட்டைகள் ஏற்றி செல்லப்படுகின்றனவா? என உறுதி செய்த பின்னரே, லாரிகளை அனுமதிக்க வேண்டும்.
சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதை கண்காணிப்பாளர்களா?
-நவீன் குமார்.