நவம்பர் 21, 1955-ல் வடகலை ஐயங்கார் குடும்பத்தில், இந்திய சுதந்திர போராட்ட வீரரான கே.ஆர். வாசுதேவன் மற்றும் அவரது மனைவி மங்கா வாசுதேவன் ஆகியோருக்கு மைத்ரேயன் பிறந்தார்.
மைத்ரேயன் பள்ளிப்படிப்பை சென்னையில் பயின்றார். நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றார். மைத்ரேயன் தனது பட்டப்படிப்பை முடித்தவுடன், சென்னை மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் மருத்துவத்திற்கான தனது எம்.டி படிப்பைத் தொடர்ந்தார்.
அதன் பின் சென்னை பல்கலைக்கழகத்தில் புற்று நோய் மருத்துவத்திற்கான டி.எம். படிப்பை முடித்தார்.
மைத்ரேயன் படிப்பை முடித்ததும், சிறிது காலம் புற்றுநோய் சிகிச்சைக்கான பயிற்சி பெற்றார். அவர் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மருத்துவ பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
மைத்ரேயன் ஆரம்ப நாட்களில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவா சங்கத்தில் (ஆர்எஸ்எஸ்) உறுப்பினராக இருந்தார்.
1991 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பிரிவின் செயற்குழு உறுப்பினர் ஆனார். 1995 முதல் 1997 வரை பி.ஜே.பி யின் தமிழ்நாடு பொதுச் செயலாளராகவும், 1997 முதல் 1999 வரை துணைத் தலைவராகவும் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டில் அவர் பாரதிய ஜனதா கட்சி பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.
அதன் பின் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் (AIADMK) இணைந்தார்.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் ஜெ.ஜெயலலிதா தன்னை ஏன் சேர்த்துக்கொண்டார் என்ற ரகசியத்தை இன்று மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இதோ அதை நமது வாசகர்களின் பார்வைக்காக அப்படியே இங்கு பதிவு செய்துள்ளோம்.
டிசம்பர் மாதம் பிறந்து விட்டது. வரும் 5 ம் தேதி அம்மா அவர்கள் மறைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. நான் எனது நினைவுகளை 21 ஆண்டுகளுக்கு பின்னோக்கி எடுத்துச் செல்கிறேன். 1996 ம் ஆண்டு நான் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர். டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி வழக்கம் போல் விடிந்தது. அனைவரும் அவரவர் வேலைகளில் இருந்தனர்.
திடீரென்று தொலைக்காட்சிகளில் ப்ரேக்கிங் நியூஸ்.
திமுக அரசின் காவல்துறை அம்மா அவர்களின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு சென்று அம்மா அவர்களை கைது செய்தது. தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் அதை வரவேற்றனர்.
வைகோ, சுப்ரமணியன் சுவாமி ஆகியோர் அம்மா அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கூட அறிக்கை விட்டனர்.
அப்போது அம்மா அவர்களின் கைதைக் கண்டித்து முதல் அறிக்கை கொடுத்தது நான் தான். அம்மா அவர்களின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கண்டன அறிக்கை வெளியிட்டேன்.
அன்று இரவு தொலைக்காட்சி செய்திகளிலும் 8 ஆம் தேதி நாளிதழ்களிலும் எனது கண்டன அறிக்கை முக்கிய செய்தியாக வந்தது.
7 ம் தேதி இரவு பாஜக தேசியத் தலைவர் அத்வானி அவர்களிடம் கூறினேன். அவரும் எனது அறிக்கை சரியானது என்று ஆமோதித்தார்.
8 ஆம் தேதி காலை திருமதி சுலோசனா சம்பத் அவர்கள் அம்மா அவர்களை சென்னை மத்திய சிறையில் சந்தித்த போது அம்மா அவர்கள் “மைத்ரேயன் அறிக்கையை படித்தேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அவரை சந்திக்கிறேன் “என்று என்னிடம் தெரிவிக்குமாறு சொன்னார்.
1996 டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கை வரும் காலங்களில் எனது அரசியல் வாழ்க்கையை புதிய பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று அன்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
அது சரி, இன்றைய தங்களின் இந்த அறிக்கை, தங்களை மறுபடியும் பாரதிய ஜனதா கட்சிக்கே அழைத்துச் சென்று விடுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
மைத்ரேயனின் மலரும் நினைவுகள்….!- அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே…!
News
December 1, 2017 11:19 pm