ஓகி புயலினால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவிதாங்கோடு சேவியர்புரம், அமராவதிகுளம், இலுப்பக்கோணம், முட்டைக்காடு, பன்னிபாகம், பெருஞ்சிலம்பு, கோட்டைக்காலவிளை, பெருஞ்சாணி, கமுகன்பாலம் ஆகிய பகுதிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் சஜ்ஜன்சிங் ரா.சவான் நேரில் ஆய்வு செய்து, அப்பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் சேதமுற்ற பகுதிகளில் கணக்கெடுக்கும் பணி வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சேதமடைந்த தென்னை, ரப்பர், வாழை ஆகிய மரங்கள் மற்றும் நெற்பயிற்கள், மிளகு, கிராம்பு ஆகிய பயிர்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருவிதாங்கோடு அமராவதி குளத்தில் கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள உடைப்பு உடன் சரி செய்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சேவியர்புரம் பகுதியில் கனமழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிற்களை உடன் கணக்கிடவும், இனிவரும் காலங்களில் இது போன்ற கனமழையினால் நெற்பயிர்கள் சேதமடையாமல் இருக்க வடிகால் வாய்க்கால்கள் அமைக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மின் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள பிற மாவட்டங்களிலிருந்து வருகை தந்துள்ள 7,200 மின் பணியாளார்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த 1,200 மின்பணியாளார்கள் என மொத்தம் 8,400 மின்பணியாளர்களும், மின்பகிர்மானம் மற்றும் மின் தொடரமைப்பு இயக்குநர்கள் இருவர் மற்றும் 17 மேற்பார்வை பொறியாளார்களின் தலைமையில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கைகளால் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிப்பகுதிகள் மற்றும் 55 பேரூராட்சிகளிலும் 100 சதவீதம் மின்சீரமைப்பு பணிகள் நிறைவுற்றுள்ளது.
மேலும், 95 ஊராட்சிகளில் 90 ஊராட்சிகளுக்கு முழுவதுமாக மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 ஊராட்சிகளில் உள்ள மலை பகுதியில் மின் பாதை முழுவதும் மிகுந்த சேதமடைந்துள்ளதால், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 1200 மின் பணியாளர்களுடன் இம்மாவட்ட மின்பணியாளர்கள் இணைந்து மின் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
கணக்கெடுக்கும் பணிகள் முடிவுற்ற பின்னர் நிவாரணத் தொகை அரசிடமிருந்து உடன்பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளபடும். பயிர்சேத கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
புயலினால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் சஜ்ஜன்சிங் ரா.சவான் நேரில் ஆய்வு! -கன்னியாகுமரி கள நிலவரம்.
News
December 15, 2017 11:52 am