தலைமை நீதிபதி உள்ளிட்ட பலரின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறைத்தண்டனை அனுபவித்த முன்னாள் நீதிபதி கர்ணன், கொல்கத்தா பிரசிடென்சி சிறையில் இருந்து இன்று விடுதலையானார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், தலைமை நீதிபதி உள்ளிட்ட பலரின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
நீதிபதி கர்ணனின் இத்தகைய நடவடிக்கை சம்மந்தமாக, மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மாலனி 11.03.2017 அன்று அவருக்கு கடிதம் ஒன்றை எழுதினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகும் நீதிபதிகளை பற்றி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறியதால், கர்ணன் மீது அவதூறு வழக்கு பதிவு செய்த உச்சநீதிமன்றம் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த மே மாதம் 09 ஆம் தேதி தீர்ப்பளித்தது.
நீதித்துறையை உலுக்கி எடுக்கும் நீதிபதி கர்ணனை உடனே கைது செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!-உத்தரவின் உண்மை நகல்.
இதையடுத்து கர்ணன் தலைமறைவானார். நீதிபதியாக இருந்த கர்ணன் தலைமறைவான நிலையிலேயே ஓய்வும் பெற்றார். 1 மாத கால தேடுதலுக்கு பின் ஜூன் 20 ஆம் தேதி கொல்கத்தா காவல்துறையினர் அவரை கோவையில் கைது செய்து கொல்கத்தா அழைத்துச் சென்றனர்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கொல்கத்தா பிரசிடென்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே இவர் பலமுறை ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால் நீதிமன்றம் இவருக்கு ஜாமின் தர மறுத்தது. இந்நிலையில், அவர் உடல்நல குறைவால் சில நாட்கள் காவல்துறை கண்காணிப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனாலும், இவரது ஜாமின் கோரிக்கை நீதிமன்றம் ஏற்கவில்லை. தற்போது இவரது தண்டனை காலம் டிசம்பர் 19 ஆம் தேதியுடன் முடிந்த நிலையில் இன்று கொல்கத்தா பிரசிடென்சி சிறையில் இருந்து விடுதலையானார்.
வெள்ளையர்களுக்கு எதிராக போராடிய மகாத்மா காந்தி இதே கொல்கத்தா பிரசிடென்சி சிறையில் தான் அடைக்கப்பட்டார். பிறகு 1938-ல் விடுதலையானார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
மகாத்மா காந்தி அடைக்கப்பட்ட பிரசிடென்சி சிறையில் இருந்து முன்னாள் நீதிபதி கர்ணன் விடுதலை!
News
December 20, 2017 9:10 pm