கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்டு கரை திரும்பாத மீனவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார நிவாணத்தொகை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
நீரோடி, மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை, இரவிபுத்தன்துறை, சின்னதுறை, தூத்தூர், பூத்துறை, இரையுமன்துறை உட்பட கடலோர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் சஜ்ஜன்சிங் ரா.சவான் இன்று (22.12.2017) ஆய்வு செய்தார்.
பாதிக்கப்பட்ட மீனவ மக்களிடம் அரசு மேற்கொண்டு வரும் நிவாரண பணிகள் குறித்து எடுத்துரைத்து, கரை திரும்பாத மீனவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மீன்பிடித்தொழிலை செய்ய இயலாத நிலையினைக் கருத்திற்கொண்டு வாழ்வதாரம் இழந்த 30,778 மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,000/–வீதம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் விண்ணப்பங்கள் பெற்று அதன் அடிப்படையில் ரூ.5,000/– உதவித்தொகை வழங்கும் குறைந்த கால மீன்பிடி நிவாரணம் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு உதவிடும் வகையில் உடனடியாக முதற்கட்டமாக, கடந்த ஆண்டு பயனடைந்த 28,643 மீனவ பயனாளிகளுக்கு தலா ரூ.5,000/– வீதம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடம் புதிதாக சேர்ந்த 2,135 மீனவர்களுக்கும் உடனடியாக நிவாரணத்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஓகி புயலினால் பாதிக்கப்பட்டு இதுவரை கரை திரும்பாத கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களில், 188 மீனவர்கள் குடும்பத்திற்கு வாழ்வாதார நிவாரணத்தொகையாக தலா ரூ.5,000/– வீதம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள நபர்களின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகையினை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஓகி புயலால் படுகாயமடைந்த 20 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000/– வீதம் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, விளவங்கோடு வட்டம், இரவிபுத்தன்துறையில் ரூ.300 இலட்சம் செலவில் 750 மீ நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கடலரிப்பு தடுப்பு சுவர் புனரமைக்கப்படும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் இராஜகோபால் சுன்கரா, கடலரிப்பு தடுப்பு திட்டம் செயற்பொறியாளர் கிறிஸ்து நேசகுமார், உதவி செயற்பொறியாளர் தாணுமூர்த்தி, விளவங்கோடு வட்டாட்சியர் கண்ணன் உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.
-சி.வேல்முருகன்.
கரை திரும்பாத மீனவர்களின் குடும்பத்தினருக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் சஜ்ஜன்சிங் ரா.சவான் நேரில் ஆறுதல்!
News
December 22, 2017 9:44 pm