திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலையான திருவாரூர்- மயிலாடுதுறை சாலை, பாண்டிச்சேரி மற்றும் சென்னை வரை செல்லக்கூடியதாகும். இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் இரவு, பகல் பாராது சென்று கொண்டிருக்கிறது.
இந்த சாலையில் ஒரு முக்கியமான சந்திப்பு பேரளம் பேரூராட்சி பகுதியாகும். மிகவும் குறுகலான சாலை அமைப்பை கொண்ட இதில் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பேரளத்தில் இரயில் நிலையம் உள்ளதால் முக்கிய சாலையில் இரயில்வே கேட் மூடப்படும்போது மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் சொல்லில் அடங்காது. மேலும், ஒரு வழி சாலையாக இருப்பதால் அனைத்து பேருந்து போக்குவரத்தும் இந்த சாலையில்தான் நடக்கிறது.
பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக கடந்த 2015 ஆம் ஆண்டு இரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு பணிகள் துவங்கப்பட்டது. நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க போகிறது என்று அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், மேம்பாலத்திற்கான இரண்டு பிரமாண்ட தூண்கள் மட்டும் இருப்பு பாதையின் இருமருங்கும் எழுப்பப்பட்டது. அதற்கு பிறகு எந்த பணியும் நடைபெறவில்லை. தற்போது “பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் போல” உலக அதிசயங்களில் ஒன்றாக மக்கள் இதனை மிகுந்த ஏக்கத்தோடு பார்த்து செல்கின்றனர்.
வளர்ந்து வரும் நவீன தொழிற்நுட்ப சூழலில் வாகன போக்குவரத்து என்பது அதிகரித்துவரும் வேலையில் முன்பைவிட அதிக நெருக்கடி பேரளம் மக்களுக்கு எற்பட்டு வருகிறது.
சரக்கு இரயில் மூலமாக இரயில் நிலையத்தில் இறக்கப்படும் அரிசி மூட்டைகள், லாரிகளில் ஏற்றப்பட்டு காரைக்கால் குடோன்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகள் லாரிகள் மூலமாக இரயில் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு இங்கிருந்து வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகிறது.
சில சமயங்களில் இரயில்கள் நின்று இருப்பு பாதைகளில் மாறி செல்லும் சூழலில் கேட் மூடப்படுவதால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து காத்திருக்கின்றன. அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை என்ற நிலையில் அபாய கட்டத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படும் நோயாளிகளுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் “நித்ய கண்டம் பூரண ஆயுசுதான்”. கேட் திறக்கப்படும்போது போக்குவரத்து காவலர்கள் இல்லாததால், வாகனங்கள் ஒழுங்கற்ற முறையில் வாகனங்கள் ஒன்றை, ஒன்று முந்தி செல்ல முயல்வதால் விபத்துக்களும் ஏற்படுகிறது.
என்ன நோக்கத்திற்காக இரயில்வே மேம்பாலம் கட்டும்பணி தொடங்கப்பட்டதோ அது இன்றளவும் நிறைவேறவில்லை. தமிழக அரசுக்கும் நெடுஞ்சாலை துறைக்கும் இதில் எந்த பொறுப்பும் இல்லை என்று எண்ணுகிறார்கள்போலும். அரசுகள் உறங்குவதால் தென்னக இரயில்வேயும் தன் பங்கிற்கு உறங்கி கொண்டிருக்கிறது. சம்மந்தப்பட்ட மத்திய, மாநில அமைச்சர்கள் மனது வைப்பார்களா?
-ஜி. ரவிச்சந்திரன்.
இரயில்வே மேம்பாலம் பணி நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பேரளம் பேரூராட்சி மக்கள்!
News
December 23, 2017 9:14 pm