தச்சு தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒரு சட்டக்கல்லூரி மாணவர் கைது!

கோபாலகிருஷ்ணன்.

கடந்த ஆகஸ்ட் 6 அன்று சேலம் குரும்பட்டி பூங்கா சாலையில், கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த தச்சுத்தொழிலாளி பாபு (வயது-34) கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இவரை ஒரு மர்ம கும்பல் கொலை செய்து சாலையில் வீசி சென்றதாக கூறப்பட்டது.

இது சம்பந்தமாக பாபுவின் வீட்டருகே வசிக்கும் பொன்னுசாமி மகன் கொல்லப்பட்டி குமார் (வயது-47), கேசவன் மகன் பிரேம் குமார் (வயது-24), ரங்கசாமி மகன் ரமேஷ் (வயது-35), தியாகராஜன் (வயது-23), ரஞ்சித் குமார் (வயது-24) ஆகிய ஐந்து நபர்களை ஏற்காடு போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

பின்னர் கடந்த 12 அன்று சேலம் சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் அருப்புக்கோட்டையை சேர்ந்த ரவி மகன் வினோத்குமார்(வயது-20) என்பவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த மேலும் மூன்று நபர்களில் சேலம் சட்டகல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் தஞ்சாவூர் பட்டுக்கோட்டையை சேர்ந்த கோபு மகன் கோபாலகிருஷ்ணன் என்பவரை ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் இன்று கைது செய்து சிறையிலடைத்தார். இந்த வழக்கில் மேலும் இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

நவீன் குமார்.