திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் திருகோயிலில் சொர்க்க வாசல் திறப்பு!

DSC07358 DSC07349

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் திருகோயிலில் இன்று வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

விஷ்ணுவை வேண்டி வழிப்படும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது “ஏகாதசி விரதம்“ ஆகும். இந்த விரதத்தினை கடைப்பிடிப்பது அஸ்வமேத யாகம் செய்த பலனை கொடுக்கும் என்கிறது புராணங்கள். காயத்திரிக்கு ஈடாக மந்திரமில்லை, ஏகாதசிக்கு சமமான விரதமில்லை“ என்று ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி அக்னி புராணம் கூறுகிறது.

ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வருவதுண்டு, வருடத்திற்கு 24 ஏகாதசிகள், இதில் மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வருகின்ற ஏகாதசி  வைகுண்ட ஏகாதசியாக மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணு ஆலயங்களை சொர்கவாசல் திறப்பு விழா நடத்தபடுகிறது.

இறைவனை தொழும் ஜீவாத்மா வைகுண்ட வாசல் வழியாக பரமாத்மாவை சேருகின்றது என்பது ஐதீகம், அதன்படி, ஆழ்வார்களினால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்யதேசங்களில் 27-வது திருத்தலமாக விளங்க கூடிய பஞ்ச கிருஷ்ண தலங்களுள் ஒன்றான திருக்கண்ணமங்கை அபிஷேகவல்லி உடனுறை பக்தவச்சலபெருமாள் ஆலயத்தில் சொர்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.

பகல்ப்பத்து முடிந்து,  இன்று (29.12.2017) விடியற்காலை 3.50 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டு பெருமான் ஆழ்வார் சகிதமாக பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விடியற்காலையிலேயே ஏராளமான பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக சென்று பெருமானை வழிபாடு செய்தனர்.

-ஜி.ரவிச்சந்திரன்.