இந்திய தொல் பழங்கால வரலாற்றின் தந்தை ராபர்ட் புரூஸ் பூட் குறித்த புத்தகம் அவரது கல்லறையில், அவரின் 105 -ஆம் ஆண்டு நினைவு நாளில் இன்று வெளியிடப்பட்டது. இன்று காலை துவங்கிய இந்நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக ராபர்ட் புரூஸ் பூட்டின் கல்லறையில் மலர்தூவி அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ எழுதிய இந்திய தொல் பழங்கால வரலாற்றின் தந்தை ராபர்ட் புரூஸ் பூட் என்ற புத்தகத்தை, ஹோலி டிரினிட்டி சர்ச் அருட்தந்தை பென்னட் வால்ட்டர் வெளியிட, ஏற்காடு மான்ட்போர்ட் பள்ளி முதல்வர் சூசை அலங்காரம் பெற்றுக்கொண்டார்.
புத்தகம் குறித்து அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ கூறியதாவது:
“இந்தியாவின் பழங்கால வரலாற்றின் தந்தை எனப் போற்றப்படுபவர் ராபர்ட் புரூஸ் பூட் ஆவார். இவர் 1863 ஆம் ஆண்டு மே 30 அன்று சென்னை, பல்லாவரம் பகுதியில் உள்ள திரிசூலம் மலையில் கல் கோடாரி ஒன்றை கண்டுபிடித்தார். பின்னர் 1863 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அத்திரபாக்கம் கொற்றலை ஆற்றுப்படுக்கையில் முதுமக்கள் தாழி, பானைகள், கற்கால வெட்டு கற்கருவிகளை கண்டுபிடித்தார். இக்கருவிகள் சுமார் 15 லட்சம் ஆண்டுகள் பழமையானது. இவரின் இந்த அரிய கண்டுபிடிப்பு, பழங்கால மனித இனத்தின் வாழ்க்கை இந்திய துணைக்கண்டத்திலும் இருந்தது என தெரியவந்தது.
மேலும், இவர் 1884 ஆம் ஆண்டு 3.5 கிலோ மீட்டர் நீளமுள்ள பெலும் குகையை கண்டுபிடித்தார். இது இந்தியாவிலேயே இரண்டாவது நீளமான குகையாகும். இவரின் ஆய்வுகள் மனிதனின் வரலாற்றை அறிந்துக்கொள்ள உதவுகிறது. இவரின் கண்டுபிடிப்புகளை சென்னை அருங்காட்சியகம் காட்சிக்கு வைத்துள்ளது.
ராபர்ட் புரூஸ் பூட் சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள ஐவி காட்டேஜில் வாழ்ந்தார். இவர் 1912 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் நாள் கல்கத்தாவில் இறந்தார். இவரது கல்லறை ஏற்காடு ஹோலி டிரினிட்டி சர்ச் கல்லறை வளாகத்தில் உள்ளது. எனவே, இவர் குறித்த புத்தகத்தை இவரது 105 -ஆம் ஆண்டு நினைவு நாளில், இவரின் கல்லறையிலேயே வெளியிடுகிறோம்” – இவ்வாறு எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஓவியர் ராஜ் கார்த்திக், ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ராமகிருஷ்ணன், சீனிவாசன், நேரு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
-நவீன் குமார்.
பழங்கால வரலாற்றின் தந்தை ராபர்ட் புரூஸ் பூட் 105 -வது நினைவு நாள்!- அவரது கல்லறையில் புத்தகம் வெளியிடப்பட்டது.
News
December 29, 2017 4:54 pm