திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், கே.கள்ளிக்குடி, நாகமங்கலம், சேதுராப்பட்டி, அளுந்தூர், பாகனூர், பி.என்.சத்திரம், தாயனூர் ஆகிய ஊராட்சிகளில் ரூபாய் 1 கோடியே 26 இலட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், கே.கள்ளிக்குடி ஊராட்சியில் ரூபாய் 30 இலட்சம் மதிப்பில் அம்மா உடற்பயிற்சி கூடம் மற்றும் அம்மா பூங்கா அமைக்கும் பணி, நாகமங்கலம் ஊராட்சியில் முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ரூபாய் 2.10 இலட்சம் மதிப்பில் பசுமை வீடு கட்டும் பணி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 4 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நாடக மேடை அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 1 இலட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் பெரியகுளம் மரக்கன்றுகள் நடும் பணி, சேதுராப்பட்டி ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூபாய் 6 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் உயர்மட்ட கோபுர விளக்கு அமைக்கும் பணி, ரூபாய் 29 இலட்சம் மதிப்பில் சேதுராப்பட்டி முதல் குஜியலம்பட்டி வரை சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அளுந்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (2017-2018) ரூபாய் 15.00 மதிப்பில் அளுந்தூர் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணி, (2016-2017) ஆம் ஆண்டிற்கு ரூபாய் 2.60 இலட்சம் மதிப்பில் தடுப்பனை கட்டும் பணி, பாகனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் (2015-2016) ரூபாய் 17 இலட்சம் மதிப்பில் கிராம சேவை மையம் கட்டும் பணி, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் தலா ரூபாய் 1 இலட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 9 வீடுகள் கட்டும் பணி, பி.என்.சத்திரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 26 ஆயிரம் மதிப்பில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி, ரூபாய் 1 இலட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை கொட்டகை அமைக்கும் பணி, ரூபாய் 1 இலட்சம் மதிப்பில் மண்புழு உரம் தயாரிக்கும் பணி..என மொத்தம் 1 கோடியே 36 இலட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கவும், தரமாகவும் இருக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக யாகப்புடையான்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினை திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, குழந்தைகளை மையத்திற்கு கொண்டு வந்து பராமரிப்பதிலும், முறையான உணவு வழங்குவதிலும் குறைபாடு கண்டறியப்பட்டு அதற்கு பொறுப்பான அங்கன்வாடி மையப் பணியாளர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அனுராதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
-எஸ்.ஆனந்தன்.
மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி ஆய்வு!- அங்கன்வாடி மையப் பணியாளர் மற்றும் உதவியாளர் தற்காலிக பணி நீக்கம்.
News
December 29, 2017 6:03 pm