ஏற்காடு மலை கிராமத்தில் தொல்குடிகள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி!

சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், சேர்வராயன் மலையில் அமைந்துள்ள கே.புத்தூர் கிராமத்தில் தொல்குடிகளின் பண்பாட்டை அறியும் பொருட்டு ஏற்காடு வரலாற்று ஆய்வுக் குழுவைச்சேர்ந்த ஆசிரியர் நீலகிரி கிருஷ்ணமூர்த்தி குழுவினர்களான பிலியூர் ராமகிருஷ்ணன், ஓவியர் ராஜகார்த்தி, ஓவியர் மனோ, சித்ரா, புளியங்கடை அண்ணாமலை ஆகியோரின் உதவியோடு கள ஆய்வு மேற்கொண்டதில் தொன்மையான முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது.

ஏற்காடு ஒன்றியம், வாழவந்தி ஊராட்சிக்கு உட்பட்ட கே.புதூரில் சாளாங்காட்டுப் பகுதியில் அமைந்துள்ள சின்ன வெள்ளையன் என்பவரது வீட்டருகில் கள ஆய்வு மேற்கொண்டதில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது

இது குறித்து ஆசிரியர் நீலகிரி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

“ இது கூர்முனைத்தாழி வகையைச் சார்ந்ததாகும். இது போன்று உடைந்து சிதையாத முழுமையான தாழி ஏற்காட்டில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இத்தாழி 95 செ.மீ உயரமும், இதன் வாய்பகுதிப் பகுதி 19 செ.மீ விட்டமும், தாழியின் வாய்பகுதியின் விளிம்பு 2.5 செ.மீ தடிமனும் கொண்டதாக அமைந்துள்ளது, தாழியின் கழுத்துப்பகுதி 127 செ.மீட்டர் சுற்றளவும், இதன் நடுப்பகுதி 240 செ,மீ சுற்றளவு கொண்டதாக அமைந்துள்ளது. தாழியின் கழுத்துப் பகுதிக்கு சற்று கீழ் ஒரு கயிறு போன்ற அமைப்பு தாழியின் மேல் அமைக்கப்பட்டுள்ளது, இந்த கயிற்றின் இரு முனைகளும் சேரும் இடத்தில் 10 செ.மீட்டர் இடைவெளி விட்டு கீழ் பகுதியை நோக்கி 10 செ,மீட்டர் இறங்குவது போல் அமந்துள்ளது. இதன் இடைவெளியில் ஒரு சிறுத்துண்டு மேல் நோக்கி செல்வதுப்போல் அமைக்கப்பட்டுள்ளது. இது இறந்தவரின் ஆன்மா வெளியேறுவதை குறிப்பதுப் போன்று அமைக்கப்பட்டுள்ளது.

பெரிய மட்பாண்டத்தில் இறந்தவர்களின் உடல் அல்லது எலும்பு மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் சேர்த்து வைத்து நிலத்தடியில் புதைத்து அதன் மேல் பகுதியில் பாறைக்கற்களை கொண்ட மூடி விடுவார்கள். இது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச்சின்னமாகும். இதன் மூலமாக இப்பகுதியில் தொல் பழங்கால மக்கள் வாழ்ந்ததும் அவர்கள் தொன்மையான நாகரீகத்தை பின்பற்றியதும் தெரியவருகிறது. மேலும், இப்பகுதியில் சில முதுமக்கள் தாழிகள் வீடு கட்டும்போதும், விவசாயத்திற்காக நிலத்தைப் பண்படுத்தும் போதும் மண்ணால் மூடப்பட்டிருக்கலாம்.” இவ்வாறு அவர் கூறினார்.

-நவீன் குமார்.

Leave a Reply