ஏற்காட்டில் தோட்டக்கலை துறை தற்காலிக பணியாளர்கள் நியமனத்தில் முறைக்கேடு! -பிச்சை எடுக்கும் முன்னாள் ஊழியர்.

சேலம் மாவட்டம், ஏற்காடு, ஜெரீனாக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பாபு ஜான் மகன் பவுலோஷ் (வயது45), இவர் கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஏற்காட்டில் உள்ள தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள அண்ணா பூங்கா உள்ளிட்ட பல பகுதிகளில் பணி செய்து வந்தார்.

இந்நிலையில், இரண்டு மாதங்கள் ஊதியம் வழங்காமலும், கடந்த 3 மாதங்களாக பணி வழங்காமலும் இவரை ஏற்காடு தோட்டக்கலை துறை அலுவலர்கள் அலைக்கழித்துள்ளனர். இதற்கிடையில் புதிய நபர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.

இதனால் இன்று காலை முதல் அண்ணா பூங்கா வாயிலில் தனக்கு வேலை வழங்க கோரி அதிகாரிகளிடம் இதற்கு  முன்னர் அளித்த மனுக்களை கழுத்தில் மாலையாக அணிந்தபடியும், கையில் பாத்திரம் ஏந்தியபடியும், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பவுலோஷ் பிச்சை எடுத்து வருகிறார்.

இது குறித்து ஏற்காடு தோட்டக்கலை துறை மேலாளர் குமாரிடம்  விபரம் கேட்டோம்.

“தற்போது வேலை குறைவாக உள்ளதால் பணியார்களை வேலையில் இருந்து நிறுத்தியுள்ளோம். வரும் மாதங்களில் மலர் காட்சி உள்ளிட்ட வேலைகள் அதிகரிக்கும்போது வேலையில் சேர்த்துக்கொள்வோம்” என்றார்.

அது சரி, வேலை குறைவாக உள்ளதால் பணியார்களை வேலையில் இருந்து நிறுத்தியுள்ளோம் என்று கூறும் தோட்டக்கலை துறை மேலாளர் குமார், பவுலோஷை வேலையிலிருந்து நிறுத்திய பிறகு, அதுபோன்ற பணிக்கு புதிய நபர்களை எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

-நவீன் குமார்.

Leave a Reply