பாரதிய ஜனதா கட்சி பதவி வகிக்காத மாநிலம் மற்றும் ஒன்றிய பிரேதசங்களில் உள்ள ஆளுநர்கள் அனைவரும், அங்குள்ள ஆட்சி அதிகாரங்களில் தலையிட்டு அத்துமீறி தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
அதில் டெல்லி, புதுச்சேரி ஒன்றியங்களிலும் மற்றும் தமிழகத்திலும் ஆளுநர்களின் குறிக்கீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், இவற்றின் தாக்கம் டெல்லியில் போர்களமாக மாறியது. ஆளுநரின் வீட்டிலேயே தங்கி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதி மன்றம் கண்டனம் தெரிவிக்கும் வரை தொடர்போராட்டம் நடத்தினார்.
இந்நிலையில், டில்லியில் முதலமைச்சர் – ஆளுநர் இவரில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது? என்ற கேள்விக்கு இன்று விரிவான விடைக்கிடைத்துள்ளது.
ஆம், டில்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகள் மீது, துணைநிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும்.
மக்கள் நல திட்டங்கள் துணைநிலை ஆளுநரால் தாமதமானாலும், அரசால் தாமதமானாலும் இருவருமே பொறுப்பு.
மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயல்படுவதே சாலச்சிறந்தது.
எல்லா முடிவுகளுக்கும் அமைச்சரவை துணைநிலை ஆளுநரின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியமில்லை.
அரசியல் சாசனத்திற்கு கீழ்படிவது அனைவரின் கடமை.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசிடம் தான் அனைத்து அதிகாரங்களும் இருக்க வேண்டும்.
அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை, துணை நிலை ஆளுநருக்கு தெரிவிக்கலாம். ஒப்புதல் பெற தேவையில்லை.
ஆளுநர் தன்னிச்சையாக செயல்படக்கூடாது. இதற்கு அரசியல் சாசனம் அனுமதி வழங்கவில்லை.
அரசிற்கு ஆளுநர் தடையாக இருக்கக்கூடாது.
அனைத்து விவகாரங்களையும், குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பக்கூடாது.
இவ்வாறு அந்த தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.
535 பக்கங்கள் அடங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com