அரியமங்கலம் குப்பை கிடங்கில் திடீரென்று தீ பற்றியது! – தொடரும் துயரங்கள்…!


திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான அரியமங்கலம் குப்பை கிடங்கில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென்று தீ பற்றியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  திருச்சி தீயணைப்பு துறையினர், மாநகராட்சி தண்ணீர் லாரிகளின் உதவியுடன் தீயை அணைத்தனர்.

தீ தானாகப் பற்றியதா? சமூக விரோதிகள் யாராவது பற்ற வைத்தார்களா? என்ற விபரம் இதுவரை தெரியவில்லை.

இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி இருந்தால் உண்மை வெட்ட வெளிச்சமாகியிருக்கும்.

அரியமங்கலம் குப்பை கிடங்கில் தீ பற்றி எரிவது இது ஒன்றும் முதல்முறையல்ல; வருடத்திற்கு இரண்டு அல்லது 3 முறையாவது இதுப்போன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.

இதனால் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் சுவாசிக்கவும், நடமாட முடியாத அளவிற்கும் பெரும் பாதிப்பு உண்டாகிறது. இந்த குப்பை கிடங்கில் தீ பற்றி எரியும் நாட்களில், பல குடும்பங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து விடுகின்றனர். அதற்கு வழியில்லாதவர்கள் புகையில் சிக்கி தவிக்கிறார்கள்.

மேலும், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் படும் வேதனையை இங்கு வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. 

இந்த குப்பை கிடங்கை இங்கிருந்து அகற்றாதவரை, இதுபோன்ற துயரங்கள் தொடர்ந்துக் கொண்டேதான் இருக்கும்.

தமிழக முதலமைச்சர் தனிக் கவனம் செலுத்தினால் மட்டும்தான், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

படங்கள்: ஆர்.சிராசுதீன்.

Leave a Reply