இந்தியா முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், பட்டாசுகளைத் தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்கத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் இதுதொடர்பாக சில ஆலோசனைகளையும், பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து. உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
1) தீபாவளி அன்று இரவு 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்.
2)கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இரவு 11:55 மணி முதல் அதிகாலை 12:30 மணி வரை மட்டுமே வெடி வெடிக்கலாம்.
3) வெடிக்கப்படும் வெடி அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பட்டாசுகளுக்கு மாற்று குறித்தும் ஆலோசிக்க வேண்டும்.
4) தடை செய்யப்பட்ட எந்த ஒரு பட்டாசையும் வெடிக்க அனுமதி இல்லை. அவ்வாறு விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பகுதியின் காவல்துறை அதிகாரிகளே பொறுப்பு.
5) பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளவீடு செய்ய வேண்டும்.
6) டெல்லி மற்றும் தலைநகர் பகுதிகளில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியுள்ளபோதிலும், அதனால் ஏற்படும் காற்று மாசை அளவீடு செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
7) பட்டாசு வெடிப்பது தனிமனித உரிமை மற்றும் அந்த தொழிலை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு மட்டுமே கட்டுப்பாட்டுடன் அனுமதி வழங்கப்படுகிறது.
8) பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அதனால் ஏற்படும் காற்று மாசு மற்றும் பாதிப்புகள் அளவிடப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
9) ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடை தொடரும். இதனை பின்பற்றாத நிறுவனங்கள் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.
10) பட்டாசு விற்பனையை ஒழுங்குப்படுத்தவும். பயன்படுத்துவதை வரன்முறைபடுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
–டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com