கிராமங்களை குறிவைக்கும் மு.க.ஸ்டாலின்!

திமுக தலைவரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சமீப காலமாக தனது கவனத்தை கிராமபுற மக்களின் பக்கம் முழுமையாக திருப்பியுள்ளார். 

அதிமுகவிற்கு கிராமப்புறங்களில் செல்வாக்கு அதிகம், திமுகவிற்கு நகர்புறங்களில்தான் செல்வாக்கு அதிகம் என்ற நம்பிக்கை, தமிழக அரசியலில் நீண்ட காலமாக நிலவி வருகிறதுஎம்.ஜி.ஆர் அஇஅதிமுக-வை என்று தொடங்கினாரோ, அன்று முதல் இன்றுவரை இதுதான் உண்மையாக இருந்து வருகிறதுஇதை யாரும் மறுக்க முடியாது.

மேலும், எம்.ஜி.ஆர் இன்னும் சாகவில்லை என்று சொன்னால், அதையும் நம்புவதற்கு கிராமங்களில் இன்னும் வயதான ஆட்கள் இருக்கதான் செய்கிறார்கள்அதனால்தான், அதிமுக ஆட்சியாளர்கள், அன்று முதல் இன்று வரை எம்.ஜி.ஆரை இருக்கமாக பிடித்துகொண்டு இருக்கிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம், கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சம்பளத்தை அள்ளிக்கொடுப்பார். நம்மையெல்லாம் கண்டுக்கொள்ளவேமாட்டார். விலைவாசி உயர்வுக்கு கருணாநிதிதான் காரணம் என்று, கிராமப்புற பெண்கள் அனைவரும் வெளிப்படையாகவே விமர்சித்த காலமும் உண்டு. அதை நிரூபிக்கும் வகையில்தான் கலைஞரின் கடந்த கால அரசியல் நிலைப்பாடும், அவரது ஆட்சிமுறையும் இருந்தது.

தனது தந்தையின் அரசியல் நிலைப்பாட்டில் இருந்து சற்று விலகி, தற்போது தனது புதிய அரசியல் பயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார். இது உண்மையிலுமே வரவேற்கப்பட வேண்டிய விசியம்தான். இது காலம் கடந்த முயற்சிதான் என்றாலும், இது மு.க.ஸ்டாலினுக்கு ஓரளவு கை கொடுக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என்பதை முழுமையாக புரிந்துகொள்வதற்கு மு.க.ஸ்டாலினுக்கு 50 ஆண்டு காலம் அவகாசம் தேவையாக இருந்துள்ளது. என்ன செய்வது? அதிகாரம் கைக்கு வரும்போதுதானே முடிவெடுக்க முடியும்.

கடந்த கால தவறுகளில் இருந்து திமுக முழுமையாக வெட்கப்படாமல் வெளிவரவேண்டும். சுயபரிசோதனை செய்துகொள்ளாத மனிதனும்,  கொள்கையும், கோட்பாடுகளும் வெற்றிப்பெற்றதாக எங்கும் வரலாறு இல்லை.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அரசியலை உன்னிப்பாக உற்றுநோக்கி வருபவன் என்ற முறையில் இந்த உண்மையை நான் சொல்கின்றேன். “ஒரு மனிதன் திருந்திவாழ வேண்டும் என்று நினைக்கும்போதுதான்; அவன் செய்த தவறுகளுக்கெல்லாம் பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் வெளிவரும்.” அதை தடைக்கற்களாகவோ; தண்டணையாகவோ கருதாமல், அதை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு அடுத்த பரிணாமத்தை அடையவேண்டும். அப்போதுதான் உண்மையான மாற்றத்தை உணரமுடியும்.

அசோக மன்னனின் மனமாற்றத்திற்கும், அரசியல் மாற்றத்திற்கும் “கலிங்கப் போர்”  முக்கிய காரணமாக இருந்தது. அதைபோல, அருகில் இருக்கும் துரோகிகளை இனம் கண்டு அப்புறப்படுததினால் மட்டுமே அரசியலில் மு.க.ஸ்டாலின் முத்திரை பதிக்க முடியும். ஏனென்றால், எதிரி என்றைக்கும் எதிரிதான்; ஆனால், அடிக்கடி பரிசோதனைக்கு உட்பட வேண்டியது உறவுகளும், நட்புகளுமே. அறிவாளிகளை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும்; அடிமைகளை தூரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் புத்திக்கு தெளிவுக் கிடைக்கும். 

வாழ்த்துபவர்களும், வாழ்க கோஷம் போடுபவர்களும் மட்டுமே நம் அருகில் இருந்தால், உண்மைகளை நாம் நிச்சயம் உணரமுடியாது.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தனது சுயசரிதையான சத்தியசோதனையில் தனது குற்றங்குறைகளை பகிரங்கமாக அறிக்கையிட்டதால்தான், அவரை உலகம் இன்றுவரை மகாத்மாவாக கொண்டாடி கொண்டிருக்கிறது.

எப்படி வாழக் கூடாது என்பதற்கும், இப்படிதான் வாழ வேண்டும் என்பதற்கும், மகாத்மா காந்தி மகத்தான உதாரணம்.

தவறு இழைக்காத மனிதர்கள் உலகத்தில் யாருமில்லை; ஆனால், தவற்றை திருத்திக்கொள்ளாதவர்கள் மனிதர்களே இல்லை.

இதை புரிந்து கொண்டு மு.க.ஸ்டாலின் செயல்பட்டால், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கிறாரோ இல்லையோ, ஆனால், தமிழக மக்களின் மனதில் நிரந்தரமான இடத்தை நிச்சயம் பிடிக்க முடியும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply