மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Electronic Voting Machine) 1999-ல் இந்தியாவில் பொது மற்றும் மாநிலத் தேர்தல்களில் வாக்குப்பதிவு செய்ய சில பகுதிகளிலும், 2004-லிருந்து முழுவதுமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
முந்தைய காகித வாக்குச் சீட்டு அமைப்பை ஒப்பிடுகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்களிக்க ஆகும் நேரம் மற்றும் முடிவு அறிவிக்க ஆகும் நேரம் ஆகிய நேரங்களை குறைக்கிறது.
இருந்தாலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பற்றது என்ற நிருபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் தேர்தலில் தோல்வியடையும் அரசியல் கட்சியினரால் தொடந்து சொல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில், தில்லி உயர் நீதிமன்றம் மற்றும் இந்திய உச்ச நீதிமன்றம் இந்த குற்றச்சாட்டுகளை புறந்தள்ளியது. இருப்பினும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மாற்றங்களை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தை நீதிமன்றங்கள் வலியுறுத்தியது.
மேலும், பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து வந்த கோரிக்கைகளின் காரணமாகவும். இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்க்கும் வகையில், அதாவது, தாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர் உறுதிப்படுத்திக்கொள்ளும் காகித தணிக்கை சோதனை (VVPAT) அமைப்புகளை வாக்குப் பதிவு இயந்திரங்களில் அறிமுகப்படுத்த முடிவு செய்தது.
இந்திய பொதுத் தேர்தலில் ஒரு முன்னோடி திட்டமாக 2014 பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 543 பாராளுமன்றத் தொகுதிகளில் 8 தொகுதிகளில் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VVPAT) முறையை அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், லண்டனில் ஐரோப்பாவுக்கான இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை சந்தேகத்திற்கு உள்ளாக்கி கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க வாழ் இந்தியரும், தொழில்நுட்ப நிபுணருமான சையத் சுஜா ஸ்கைப் மூலம் உரையாற்றினார். அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்றும், 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போதும் இவ்வாறு ஹேக் செய்யப்பட்டதாகவும் சையத் சுஜா கூறியிருந்தார்.
இந்த ரகசியம் தெரிந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், சையத் சுஜாவின் இந்த கருத்தை நிராகரித்த இந்திய தேர்தல் ஆணையம், இந்த குற்றச்சாட்டு முட்டாள்தனமானது என்றும் கூறியுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Electronic Voting Machine) பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் பாதுகாப்பு நிலைமைகளில் மிக சிறந்த தொழில் நுட்ப நிபுணர்களின் மேற்பார்வையில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றும், இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக தொழில்நுட்ப நிபுணர் சையத் சுஜா மீது, டெல்லி போலீசில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டு, அதன்பேரில், சையத் சுஜா மீதும், லண்டனில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உண்மையை உரக்க சொல்ல வேண்டிய சையத் சுஜா, அந்நியன் ஸ்டைலில் முகத்தை மூடிகொண்டு ஸ்கைப் மூலம் உரையாற்றுவது சற்று உறுத்தலாக உள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com