புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில், ஆளுநர் மாளிகை முன்பு நேற்று முதல் தொடர் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இதில் அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சர் நாராயணசாமியின் போராட்டம் சட்ட விரோதம் என்றும், வரும் 21-ம் தேதி காலை 10.00 மணிக்கு ஆளுநர் மாளிகையில் (ராஜ் நிவாஸில்) சந்திக்கலாம் என்றும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பிப்ரவரி 13 -ந்தேதி மாலை 6.30 மணிக்கு கையெழுத்திட்டு முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கையை குற்றம் சாட்டி, உடனே பிப்ரவரி 13 -ந்தேதி இரவு 10.00 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி ஒரு பதில் கடிதம் அனுப்பினார்.
இரவு முழுக்க ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் மத்திய அதி விரைவு படையின் 4 கம்பெனிகள் புதுச்சேரி வந்துள்ளன. இவர்கள் இன்று காலை 7 மணி முதல் ஆளுநர் மாளிகையைச் சுற்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட மத்திய அதிவிரைவுப் படையினர் ஆளுநர் மாளிகையின் நுழைவாயில் முன்பு அரணாக நின்றனர்.
இதையடுத்து, மத்திய அதிவிரைவுப் படையின் உதவியோடு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறி சென்னை புறப்பட்டுச் சென்றார்.
எங்களின் போராட்டத்துக்குப் பயந்துதான் ஆளுநர் கிரண்பேடி புறப்பட்டுச் சென்றார் என்றும், அவர் திரும்பி வரும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதனால் புதுச்சேரியில் பதட்டம் நிலவியுள்ளது.
ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறி இன்று சென்னை சென்றுள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, உடனே திரும்பி புதுச்சேரி வருவாரா? (அல்லது) புது டெல்லி செல்வாரா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com