2,500 துணை ராணுவப்படையினர், 90-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் நேற்று முன்தினம் மாலை ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு செல்வதற்காக புறப்பட்டனர்.
இந்நிலையில், புல்வாமா மாவட்டம், அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்துகள் வரிசையாக வந்த போது 5-வது வரிசையில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி அகமது தார் என்பவன், வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட பல வீரர்கள் தங்களுடைய ஆண்டு விடுமுறையைக் குடும்பத்தாருடன் கழித்துவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரர்கள் பயணம் செய்த அந்த பேருந்துகள் அனைத்தும், லேசான உலோகத் தகடுகளால் ஆன சாதாரணப் பேருந்துகள் என்பதால், கொலைவெறி பிடித்த அந்த ஒற்றை தீவிரவாதியின் (ஆர்டிஎக்ஸ் போன்ற சக்திவாய்ந்த வெடிபொருட்கள்) தற்கொலை தாக்குதலுக்கு அந்த பேருந்தில் பயணித்த ஒட்டுமொத்த வீரர்கள் பலியாகியும், படுகாயமும் அடைந்துள்ளனர் என்பதை நினைக்கும்போது நெஞ்சம் பதைக்கிறது.
தேசபாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுவரும் நமது எல்லை சாமிகளுக்கு (வீரர்களுக்கு) அவர்களின் உயிரை பாதுகாத்துக் கொள்வதற்கு ஆர்டிஎக்ஸ் போன்ற சக்திவாய்ந்த வெடிபொருட்களை தாக்கு பிடிக்குமளவிற்கு போதிய பாதுகாப்பு வாகனங்கள், கவசங்கள் மற்றும் அதிநவீன உபகரணங்கள் நம்மிடம் இல்லையா? (அல்லது) இருந்தும் அவர்களுக்கு வழங்கப்படவில்லையா? இல்லை என்றால் இது வெட்ககேடு! இருந்தும் வழங்கப்படவில்லை என்றால் இது மிகபெரிய மானக்கேடு…!
வீரமரணமடைந்த நமது வீரர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு முன்பு, இந்த தற்கொலைபடை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாத அமைப்புகளின் கூடாரங்களை கூண்டோடு அழித்தொழிக்க வேண்டும். அப்போதுதான் வீரமரணமடைந்த நமது வீரர்களின் ஆன்மா சாந்தியடையும்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com