ஆங்கிலேயர் கால சுற்றுலா தலங்கள் ஏற்காட்டில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், சேர்வராயன் மலையில் 1820 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர்கள் வாழ்ந்து வந்தனர். ஆங்கிலேயர்கள் இயற்கை அழகை ரசிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருந்தனர். 1890 ஆம் ஆண்டு வில்லியம் மில்லர் என்பவர் ஏற்காட்டில் 80 சுற்றுலா தலங்களின் பட்டியலை வெளியிட்டிருந்தார். அப்போதைய ஆங்கிலேய அரசு அதனை ஆவணமாகவும் வெளியிட்டிருந்தது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அந்த சுற்றுலா இடங்களுக்கு சென்று வந்திருந்தனர். சுதந்திரத்திற்கு பின்னர், இந்திய அரசு ஆங்கிலேயர்களால் ஆவணமாக்கப்பட்டிருந்த சுற்றுலாத்தலங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. அந்த சுற்றுலா தலங்கள்  காலத்தால் மறக்கடிக்கப்பட்டன. 80 சுற்றுலா தலங்களில் ஒன்றான  செங்கலுத்துப்பாடி கிராமத்தில் உள்ள சுற்றுலா தலம் மிகவும் முக்கியமானதாகும். அவற்றை, ஏற்காடு வரலாற்றை ஆய்வு செய்யும் அறிவியல் எழுத்தாளர் இளங்கோ தலைமையில், செல்வம், கிருஷ்ணமூர்த்தி, ராஜாமணி ஆகியோர் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

” ஆங்கிலேயர்கள் வெளியிட்ட சுற்றுலா தலங்களின் பட்டியிலில் முதல் இரு இடங்கள் வகிப்பது செங்கலுத்துப்பாடி குகை மற்றும் செங்கலுத்துப்பாடி செங்குத்து பாறை காட்சி முணை ஆகும்.  2016 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட செங்கலுத்துப்பாடி காட்சிமுணை புதியது. இது ஆங்கிலேயர் காலத்தில் அறிவிக்கப்பட்டது அல்ல.

ஏற்காடு டவுன் பகுதியில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செங்கலுத்துப்பாடி கிராமத்தின் வடகிழக்கில் உள்ள வனப்பகுதியில் இந்த காட்சி முனை அமைந்துள்ளது. அங்குள்ள பாறையின் மீது பெரிய அளவிலான பாறாங்கற்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கியவாறு இயற்கையாக அமைந்துள்ளது. இது தரைமட்டத்தில் இருந்து சுமார் 1000 அடி உயரம் வரை உள்ளது. இந்த மலை முகடு கடல் மட்டத்தில் இருந்து 1247 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கிருந்து வத்தல் மலை, அரூர், பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிபட்டி, பொம்மிடி ரயில்பாதை ஆகியவற்றின் அழகை ரசிக்கலாம்.

பாறைகள் சூழ்ந்த பகுதியில் ஒரு பெரிய பாறையின் கீழே செங்கலுத்துப்பாடி குகை உள்ளது. இரண்டு அறைகள் உள்ள இந்த குகையின் முன்பகுதியானது தாழ்வாரம் போன்றது. அதில் 15 பேர் வரை அமரலாம். அதன் அடுத்த பகுதிக்கு செல்ல 5 அடி உயரம் கொண்ட துவாரம் உள்ளது. அதன் வழியே சென்றால் அடுத்த பகுதியில் ஒரு தாழ்வாரம் உள்ளது. அங்கு 20 பேர் வரை அமரலாம். மழை பெய்யும் போது, அப்பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் அங்கு ஓய்வு எடுக்கின்றனர்.

குகைக்கு அடுத்து சிறிது தூரத்தில் பிளவு சந்துப்பாறை உள்ளது. இது மிகவும் ஆச்சர்யமானது. இரண்டு பாறைகளுக்கு இடையே 20 அடி நீளத்தில் சந்து உள்ளது. இது 2 அடிக்கு குறைவான அகலமுடையது. இப்பாதை வழியாக ஒருவர் ஒருபுறமாக திரும்பியபடியே நடந்து செல்லமுடியும். இந்த பாறை பிளவில் ஒரு பாறை மாட்டிக்கொண்டு தொங்குகிறது. இந்த சந்து வழியே சென்றால் மறுபுறத்தில் அழகிய காட்சி முனை உள்ளது. அங்கு பலகை வடிவிலா கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிய அமைப்பு கொண்ட எடுத்துவச்சான் கல் உள்ளது.

குகையை ஒட்டி இரண்டு மிகப் பெரிய செங்குத்துப்பறைகள் உள்ளன. ஒன்று சுமார் 400 அடி உயரமும் மற்றொன்று 500 அடி உயரமும் கொண்டது. இப்பாறைகள் அச்சில் வார்த்தது போல, ஒரே மாதிரியாக காட்சியளிக்கிறது. இந்த சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு பாதை வசதி கிடையாது. தனி நபர்கள் செல்வது என்பது ஆபத்தானது. சுற்றுலா துறை மூலம் பாதை வசதி அமைத்து, பாதுகாப்பு வேலிகள் அமைத்தால் இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாக மாறும்”
இவ்வாறு கூறினார்.

– நவீன் குமார்.

Leave a Reply