இராணுவத்தில் கடற்படை மற்றும் விமானப் படையில் பணியாற்றும் பெண்களுக்கு, குறைந்த காலம் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. எனவே, பெண்களுக்கு இராணுவத்தில் முழுமையான பணிச் சேவை வழங்கக் கோரியும், உயர் பதவிகளை வழங்கக் கோரியும், பெண் அதிகாரிகள் தரப்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில், 2003 மற்றும் 2006 –ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், 2 ஆகஸ்ட் 2010-ல் அளித்த தீர்ப்பில், கடற்படையில் பெண்களுக்கு முழுமையான பணி வாய்ப்பு வழங்கும்படி உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, இராணுவ அமைச்சகம் தாக்கல் செய்த பதில் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
இராணுவத்தில் பெண்களுக்கு உயர் பதவி வழங்கப்படாததற்கு உளவியல் ரீதியிலும், சமூக ரீதியிலும், உடல் ரீதியிலும் பல காரணங்கள் உள்ளன. ஆண்களை விட பெண்களுக்கு உடல் வலிமை குறைவு. மேலும், மகப்பேறு, குழந்தை பராமரிப்பு போன்ற சமூக மற்றும் உளவியல் ரீதியான பிரச்னைகளையும் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, பெண்களுக்கு கமாண்டர் போன்ற உயர் பதவிகளை அளிப்பது, அரசுக்கு சவாலான விஷயமாக இருக்கும். 14 ஆண்டுகளுக்கு கீழ் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே, நிரந்தர ஆணையம் அமைக்கப்படும். அதற்கு மேல் பணி அனுபவம் உள்ளவர்கள், ஊழியர்களாகவே கருதப்படுவர். இவர்களுக்கு, நிபந்தனையின் அடிப்படையில் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் அளிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு, நேற்று (17.02.2020) நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இராணுவத்தில் பெண்களுக்கு கமாண்டர் உள்ளிட்ட உயர் பதவி வழங்காததற்கு, பெண்களின் உளவியல் மற்றும் சமூக ரீதியான பிரச்னைகளை மத்திய அரசு கூறுவது, மிகுந்த மன வேதனை அளிக்கிறது. இராணுவத்தில் ஏற்கனவே பணியாற்றிய பல பெண்கள், நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். ஐ.நா. அமைதி காக்கும் படை உள்ளிட்ட பல்வேறு பணிகளில், பெண்கள் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். எனவே, இராணுவத்தில் பெண்களுக்கு பாகுபாடு காட்டும் மனப்பான்மையை, மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்.
இராணுவத்தில் ஆண்கள், பெண்கள் என, அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும். பாகுபாடு காட்டுவதற்கு, அரசியல் சட்டத்தில் எந்த இடமும் இல்லை. இராணுவத்தில், கமாண்டர் உள்ளிட்ட உயர் பதவிகளை பெண்களுக்கு வழங்குவதற்கு இனி எந்த தடையும் இல்லை.
இராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர ஆணையம் அமைக்க வேண்டும் என, 2010-ம் ஆண்டில் டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், 10 ஆண்டுகளாக இந்த உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தாமல் இருந்துள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகி விட்டன. பாதுகாப்பு படையில் பெண்களுக்கு பாகுபாடு காட்டும் மனப்பான்மையை அகற்ற வேண்டும். அதே நேரத்தில், பெண்களை போர் முனைக்கு அனுப்புவது தொடர்பான விஷயத்தில், அரசின் முடிவு கொள்கை ரீதியிலானது என, டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
-டாக்டர் துரை பெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com