தேசம் காப்போம் பேரணியும்!- திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும்!-முழு விபரம்.

திருச்சியில் தேசம் காப்போம் பேரணி நேரலை

திருச்சியில் தேசம் காப்போம் பேரணி நேரலை

Posted by Thol.Thirumavalavan on Saturday, 22 February 2020

திருச்சியில் நடைபெறும் தேசம் காப்போம் பேரணியில்..

Posted by Thol.Thirumavalavan on Saturday, 22 February 2020

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 22.2.2020 அன்று திருச்சியில் நடைபெற்ற தேசம் காப்போம் பேரணியின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

~~~~~~~~~~~

1.குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறுக

மத்தியில் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாக இருப்பதோடு இந்திய மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துகிறது. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்திருக்கும் அகதிகளில் முஸ்லிம்களைத் தவிர மற்ற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க இந்த திருத்தச் சட்டம் வகை செய்கிறது. இந்த அப்பட்டமான பாகுபாட்டை ஐநா மனித உரிமை கவுன்சிலின் செயலாளரும், ஐநா பொதுச் செயலாளரும், ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்த பல தலைவர்களும் கண்டித்துள்ளனர். இந்த திருத்தச் சட்டம் மதரீதியான வன்முறைக்கு வழிகோலும் என்று பல்வேறு நாடுகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது இதை ஆதரித்து வாக்களித்த பல அரசியல் கட்சிகள் இப்போது தமது நிலையை மாற்றிக் கொண்டு இதை எதிர்க்கின்றன. பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், ஏஜிபி ஆகியவை இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தன. ஆனால் அந்தக் கட்சிகள் யாவும் இப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றன.

பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், தெலுங்கானா முதலான மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இந்த சட்டத்தை எதிர்த்து சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் மக்கள்தொகையில் பெரும்பாலான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையிலும் ’இந்த சட்டத்தைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை’ என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இது மக்களாட்சியின்மீதும், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. மக்களின் உணர்வுகளையும், மாநில அரசுகளின் தீர்மானங்களையும் மதித்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த மாபெரும் பேரணியின்மூலம் வலியுறுத்துகிறது.

2.தேசிய மக்கள் தொகைப் பதிவேடு நடவடிக்கையைக் கைவிடுக

2020 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலத்தில் இந்தியா முழுவதும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்காக 3941 கோடி ரூபாயை மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒதுக்கி இருக்கிறது. இந்த கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பைப் போன்றது அல்ல. இது குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் 2003 இன் கீழ் நடத்தப்படுகிறது. இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ளும்போது ஒருவரது குடியுரிமை தொடர்பான சந்தேகம் கணக்கெடுப்பு செய்யும் அலுவலருக்கு ஏற்பட்டால் அவரை சந்தேகத்துக்குரிய குடிமகன் என்று அவர் குறிக்க வேண்டும். இதை 2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட குடியுரிமை திருத்தச்சட்ட விதிகள் குறிப்பிடுகின்றன. அதன் விதி 4, துணை விதி 4 இவ்வாறு சந்தேகக் குடிமகன் என்று குறிப்பதற்கு அதிகாரம் அளிக்கிறது. அவ்வாறு குறிக்கப்பட்டவர்களுக்கு அதன் பின்னர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டுமென்றும் அந்த விதி கூறியுள்ளது.

ஒருவரை சந்தேகத்துக்குரிய குடிமகன் என்று எதன் அடிப்படையில் தீர்மானிப்பது என்பதைப் பற்றி குடியுரிமை திருத்தச் சட்ட விதிகளில் எதுவும் கூறப்படவில்லை. கணக்கெடுப்பு செய்யும் அலுவலருக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது மட்டுமே அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்கிற எந்த ஒரு அலுவலரும் எவரை வேண்டுமானாலும் சந்தேகத்துக்குரிய குடிமகன் என்று அறிவித்துவிட முடியும். அப்படி அறிவிக்கப்பட்டவர் தனது குடியுரிமையை நிரூபிக்க பல ஆண்டுகள் போராடியாக வேண்டும். அப்படி போராடியும் அவரால் தனது குடியுரிமையை நிரூபிக்கப்பட முடியவில்லையென்றால் அவர் திறந்தவெளி சிறைச்சாலையில் அடைக்கப்படுவார். அதுதான் இப்போது அஸ்ஸாமில் நடந்திருக்கிறது. இப்படி சந்தேக குடிமகன் என்று அறிவிக்கப்பட்டவர்களை அடைத்து வைப்பதற்காக நாடுமுழுவதும் சிறைச்சாலைகள் கட்டுமாறு 2014 ஆம் ஆண்டிலிருந்து மூன்று முறை மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. ஏற்கனவே அஸ்சாமில் பல தடுப்பு முகாம்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் ஆயிரக் கணக்கானோர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு அடைக்கப்பட்டவர்கள் உணவு, மருத்துவம் முதலான வசதிகள் வழங்கப்படாததால் ஒவ்வொரு நாளும் உயிர் இழந்து கொண்டிருக்கிறார்கள்.

அஸ்சாமில் மேற்கொள்ளப்பட்ட என்.ஆர்.சி நடவடிக்கையின் முடிவில் அந்த மாநில மக்கள் தொகையில் சுமார் 6 சதவீதம் பேர் குடியுரிமை அற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள். அதே விகிதத்தில் இந்தியா முழுவதும் குடியுரிமை பறிக்கப்பட்டால் சுமார் 8 கோடி பேர் குடியுரிமை அற்றவர்களாக ஆக்கப்படுவார்கள். அவர்களையெல்லாம் அடைத்து வைப்பதற்கு நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான தடுப்பு முகாம்கள் தேவைப்படும். அஸ்ஸாமில் மூவாயிரம் பேரை அடைத்து வைப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள தடுப்பு முகாமுக்கு 46.51 கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது. அதே விகிதத்தில் பார்த்தால் இந்தியா முழுதும் கட்டப்பட வேண்டிய 26658 தடுப்பு முகாம்களுக்கு சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்தமான இந்தியாவின் ஜிடிபியில் சுமார் 9 சதவீதமாகும். உணவுப் பாதுகாப்புத் திட்டத்துக்கும், 100 நாள் வேலை திட்டத்துக்கும், மதிய உணவு திட்டத்துக்கும், ஆரம்பக் கல்விக்கும் ஒதுக்கீடு செய்வதற்கு பணம் இல்லை என்று பட்ஜெட்டில் அவற்றுக்கான நிதியைக் குறைத்திருக்கும் மத்திய அரசு இந்த நாட்டு மக்களின் குடியுரிமையைப் பறிப்பதற்காக எத்தனை லட்சம் கோடி வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கிறது.

தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டு நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் எனப் பல்வேறு மாநில அரசுகள் அறிவித்துள்ளன. எனவே தமிழக அரசும் இங்கே என்.பி.ஆர் கணக்கெடுப்பை மேற்கொள்ளமாட்டோம் என அறிவிக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த மாபெரும் பேரணியின்மூலம் வலியுறுத்துகிறது. என்.பி.ஆர் நடவடிக்கையைக் கைவிட்டு பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையில் கவனம் செலுத்துமாறு மத்திய அரசை இந்தப் பேரணியின் வாயிலாக வலியுறுத்துகிறோம்.

3.தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) திட்டத்தைரத்து செய்க

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) குறித்து இதுவரை விவாதிக்கவே இல்லை என்று பிரதமர் அப்பட்டமாகப் பொய் சொல்கிறார். ஆனால், ’நாடு தழுவிய என்.ஆர்.சியைக் கொண்டுவருவோம்’ என மத்திய உள்துறை அமைச்சர் மீண்டும் மீண்டும் பேசி வருகிறார். தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (என்.பி.ஆர்) எடுக்கப்பட்டு விட்டால் அதன் அடுத்தகட்டம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதுதான். ஏனென்றால் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் சந்தேகத்துக்குரிய குடிமகன் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதா இல்லையா என்பதை இறுதியாகத் தீர்மானிப்பது தேசிய குடிமக்கள் பதிவேடு தான். எனவே இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை என்.ஆர்.சி- தயாரித்து தான் ஆக வேண்டும். அதற்காக விசாரணை ஆணையங்களை நாடு முழுவதும் உருவாக்க வேண்டும். அந்த விசாரணை ஆணையங்களின் மூலமாகவும் ஒருவர் தமது குடியுரிமையை நிரூபிக்க தவறினால் அவரை அடைத்து வைப்பதற்கு தடுப்பு முகாம்களையும் நாடு முழுவதும் கட்டியாக வேண்டும். தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தயாரிக்கப்பட்டு விட்டால் இந்த இரண்டு நடவடிக்கைகளையும் தடுக்கவே முடியாது.

’இப்போது தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதைப் பற்றி நாங்கள் பேசவில்லை’ என்று பிரதமர் சொல்வது எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். எனவே பிரதமரோ அல்லது பாஜக அரசின் அமைச்சர்களோ சொல்வதை இந்த நாட்டு மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை.

இந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.பி.ஆர்) தயாரிக்க மாட்டோம் என்று மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இந்த நடவடிக்கையை எங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று இந்த மாபெரும் பேரணியின் மூலம் வலியுறுத்துகிறோம்.

4. இடஒதுக்கீடு உரிமையைப் பாதுகாத்திடுக!

உத்தரகாண்ட் மாநில அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 8 .2 .2020 அன்று அதிர்ச்சிதரும் தீர்ப்பு ஒன்றை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. ‘இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என எந்த ஒரு கட்டாயமும் அரசாங்கத்துக்கு இல்லை’ எனவும் , ‘ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினர் மிகக்குறைவாக அரசுப் பணிகளில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்ற புள்ளி விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தாலும்கூட அந்தப் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட நீதிமன்றத்துக்கு கட்டாயம் எதுவும் இல்லை ‘ என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. எஸ்சி பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலும் ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுவதாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. கடந்த 26.09.2018 அன்று ஜர்னைல் சிங் என்பவரின் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்புக்கும், கடந்த 10.05.2019 அன்று பி.கே.பவித்ரா வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்புக்கும் இப்போது அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு முரண்பட்டதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவம் குறித்த உறுப்பு 14 க்கும் இது எதிராக உள்ளது.

இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய தேவை நீதித்துறைக்கும் இல்லை, அரசுக்கும் இல்லை என்று இந்தத் தீர்ப்பின்மூலம் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனவே இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இப்போது பாராளுமன்றத்திடமே இருக்கிறது. இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் சட்ட மசோதா ஒன்றை உடனடியாகப் பாராளுமன்றத்தில் கொண்டு வரவேண்டும். அதை சட்டமாக்கி நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமல் அதைப் பாதுகாப்பதற்கு ஏதுவாக அரசியலமைப்புச் சட்டத்தில் ஒன்பதாவது அட்டவணையில் அதைச் சேர்க்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு ஒன்றை உடனடியாக மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

நீதிபதிகளின் நியமனம் தொடர்பாக தற்போது பின்பற்றப்படும் ‘கொலேஜியம்’ முறை குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் நீதிபதிகளாக வருவதற்கு வழிவகுத்துள்ளது. இது சமவாய்ப்பை மறுக்கிறது. எனவே சமத்துவத்தை உறுதிசெய்வதாகவும், தற்போது பெரிதும் புறக்கணிக்கப்பட்டிருக்கிற தலித்துகள், பெண்கள் ஆகிய பிரிவினர் தமக்குரிய பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு வழிசெய்வதாகவும் நீதிபதிகள் நியமன முறை ஒன்றைப் புதிதாக உருவாக்கவேண்டும் என இந்த மாபெரும் பேரணியின் மூலம் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply