“ரோகபதி” வியாதிகளுக்கு எல்லாம் அரசன் “ஜ்வரம்” நோய் குறித்து விரிவான விளக்கமும்-ஆய்வும்.
எய்ட்ஸ் நோயாளிகளை கூட இல்லத்தில் வைத்து பராமரித்து வரும் மனமுதிர்ச்சி பெற்ற விட்ட மக்கள், தற்போது காய்ச்சல் என்றாலே பின்னங்கால்கள் பிடரியில் பட பதறிக்கொண்டு ஓடுகிறார்கள். மன தைரியமும், முறையான தடுப்பு முறைகளும், விழிப்புணர்வும் இருந்தால் கொள்ளை நோய்களை மட்டுமல்ல, கொடிய எதிரிகளையும் எளிதில் வீழ்த்திவிடலாம் என்பதுதான் எதார்த்தமான உண்மை.
சரி முதலில் காய்ச்சல் (ஜ்வரம்-FEVER) என்றால் என்ன? இதுக் குறித்து இந்திய முறை மருத்துவங்கள் என்ன கூறுகின்றன என்பதை இனி விரிவாகப் பார்ப்போம்.
ஜ்வரம் நோய்கள் 64 வகைப்படும் என்று ஆயுர்வேத மருத்துவம் கூறுகின்றது. வாத தோஷத்தினால் 20 வகை ஜ்வரங்களும், பித்த தோஷத்தினால் 24 வகை ஜ்வரங்களும், கப தோஷயத்தினால் 20 வகை ஜ்வரங்களும் ஏற்படுகின்றன.
ஜ்வரத்திற்கு கலை, தோசம், சோகம், மேகம், கபம், சாரம், தாகம், வறட்சி, இரத்தம், நீர், சீல், மச்சை, கணம், சீதம், இருமல், சயம், பொருமல், சூலை, சொறிவு, விரணம், பித்தம், வாதம், ஈளை, இளைப்பு நடுக்காலம், நாளின் மத்தி, நடுவில்நாடி, பிறையின் மத்தி, வாத, பித்த கபங்களுக்கு ஆதி…என பல பெயர்கள் உண்டு.
வாத, பித்த, கபம் முதலான தோஷங்களினால் உண்டாகும் 4448 வியாதிகளுக்கும் காரணமாக உள்ளது உஷ்ணமே என்பதாலும், உற்பக்காலத்திலும், உயிர் பிரியும் காலத்திலும் எல்லா நோய்களிலும் ஜ்வரம் ஏற்படுவதாலும், பிராணிகள், மரம், செடி, கொடிகளையும் இது பீடிப்பதாலும் ஜ்வரம் நோய்க்கு “ரோகபதி” அதாவது வியாதிகளுக்கு எல்லாம் அரசன் என்ற பெயர் வழங்கப்படுகிறது. ஜ்வரரோகம் ஸம்பவிக்காத ஜந்துக்கள் ஒன்றுமே இவ்வுலகில் கிடையாது என்று சரகஸம் ஹிதை 3-வது அத்தியாயத்தில் காணப்படுகிறது.
-
யானைகளுக்கு ஏற்படும் ஜ்வரத்திற்கு பாகலம் என்றும்
- குதிரைகளுக்கு ஏற்படும் ஜ்வரத்திற்கு அபிதாபம் என்றும்
- மாடுகளுக்கு ஏற்படும் ஜ்வரத்திற்கு ஈச்வரஸம்ஞ்ஞா என்றும்
- ஆடுகளுக்கு ஏற்படும் ஜ்வரத்திற்கு ப்ரலாபம் என்றும்
- கழுதைகளுக்கு ஏற்படும் ஜ்வரத்திற்கு சாலஸம் என்றும்
- எருமைகளுக்கு ஏற்படும் ஜ்வரத்திற்கு ஹாரித்ரம் என்றும்
- மான்களுக்கு ஏற்படும் ஜ்வரத்திற்கு ம்ருக ரோகம் என்றும்
- பறவைகளுக்கு ஏற்படும் ஜ்வரத்திற்கு அபிகாதம் என்றும்
- மீன்களுக்கு ஏற்படும் ஜ்வரத்திற்கு இந்திரமதம் என்றும்
- பாம்புகளுக்கு ஏற்படும் ஜ்வரத்திற்கு அகூஷகம் என்றும்
- தண்ணீர் (ஜலம்)க்கு ஏற்படும் ஜ்வரத்திற்கு நீலிகா என்றும்
- பூமிக்கு ஏற்படும் ஜ்வரத்திற்கு ஊஷரம் என்றும்
- மரங்களுக்கு ஏற்படும் ஜ்வரத்திற்கு கோடரம் என்றும்
- பாலக்காப்பியம் முதலான கிரதங்களில் குறிப்பிட்டப் பட்டிருக்கின்றன.
- சரீரத்தில் ஆரம்பிக்கும் ஜ்வரம், மனதில் ஆரம்பிக்கும் ஜ்வரம் என இரு வகைகளும் உண்டு.
- அதிக குளிர்ச்சியால் ஏற்படும் ஜ்வரம் ஸெலமியம் என்றும்
- அதிக உஷ்ணத்தால் ஏற்படும் ஜ்வரம் ஆக்நேயம் என்றும்
- உள்ளுக்குள்ளேயே உஷ்ணம் இருப்பது அந்தர் வேகம் என்றும் உஷ்ணம் விசறியடிப்பது பகீர் வேகம் என்றும்
- இயற்கையாக ஏற்படும் ஜ்வரம் ப்ராக்ருதம் என்றும்
- இயற்கைக்கு மாறாக ஏற்படும் ஜ்வரம் வைக்ருதம் என்றும்குணப்படுத்தக்கூடியதை சாத்தியம் என்றும்
-
குணப்படுத்த முடியாததை அசாத்தியம் என்றும் ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.
இதில் வாத தோஷத்தால் ஏற்படும் ஜ்வரம் 12 வகைகளையும், பித்த தோஷத்தால் ஏற்படும் ஜ்வரம் 14 வகைகளையும், கபதோஷத்தால் ஏற்படும் ஜ்வரம் 10 வகைகளையும் ஆக 36 வகை ஜ்வரங்களை குணப்படுத்த முடியும் என்று ஆயுர்வேத மருத்துவம் கூறுகின்றது. எனவே அச்சப்படவோ, பீதியடையவோ தேவையில்லை.
பொதுவாக ஜ்வரம் வருவதற்கான காரணங்கள் என்ன என்பதைப் பார்ப்போம். நாள்பட்ட உணவு, தவறுதலான நடைமுறை பழக்க வழக்கங்களினால் வாதம் முதலான தோஷங்கள் ஆமா சயத்தையடைந்து அவ்விடமுள்ள ரஸத் தாதுவுடன் கலந்து, குடலிலுள்ள அக்னிப் பலத்தைக் குறைத்து, உஷ்ணத்தை வெளிக்கொணர்ந்து ஜ்வரத்தை (காய்ச்சலை) ஏற்படுத்துகின்றது. மேலும் விகாரமடைந்த ரஸத் தாது வியர்வை செல்லும் குழாய்களையும் அடைத்து விடுவதால் ஜ்வரம் அதிகமாகிறது.
மலச்சிக்கலாலும், குளிர்ச்சியினாலும், ஆகாரக் கோளாறுகளினாலும், அதிகமான பெண்களிடம் உடலுடறவு கொள்வதாலும், தூக்கம் இல்லாமையாலும், அதிகமாக நடப்பதாலும், நாக்கின் சபலத்தால் கண்டவற்றை சாப்பிடுவதாலும், கடுமையான வெயில், மழை இவைகளில் சஞ்சரிப்பதாலும், தொண்டை கிழிய கத்தி பேசுவதாலும், விஷங்களின் உஷ்ணத்தாலும், தலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஸ்தானம் செய்தும், எண்ணெய் போகாததாலும், தடியினால் அடிப்படுவதாலும் ஜ்வரம் உண்டாகும்.
ஜ்வரம் வருவதற்கான அறிகுறிகள் என்ன என்பதைப் பார்ப்போம் :
வியர்வையின்மை, தேகம் முழுவதும் வலி, தேகம், மனஸ், இந்திரியங்கள் முதலியவைகள் தாபமடைதல், மயக்கம், மூர்ச்சை, மார்பில் வலி, வாய்பிதற்றல், நாவறட்சி, களைப்பு, சோம்பல், உடம்பில் நிற வேற்றுமை, ருசியின்மை, கண்ணீர் தழும்புதல், குளிர்காற்று, வெயில் முதலானவைகளில் சில சமயம் விருப்பம், சில சமயங்களில் வெறுப்பு, அடிக்கடி கொட்டாவி, உடம்பு பாரம், மயிர் சிலிர்த்தல் முதலானவைகள் “ஜ்வரம்” வருவதற்கான அறிகுறிகளாகும். வாத ஜ்வரத்தில் அதிக கொட்டாவியும், பித்த ஜ்வரத்தில் கண் எரிச்சலும், கப ஜ்வரத்தில் ஆகாரத்தில் ருசியின்மையும் உண்டாகும்.
இனி “ஜ்வரம்” அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்:
சந்தனம், சவ்வாது, போன்ற பரிமளத் திரவியங்களை உபயோகிப்பதாலும், பஞ்சு மெத்தையில் படுப்பதாலும், சுத்த நெய், சர்க்கரை, நல்லெண்ணெய், சிவந்த புடவை, வெள்ளை புடவை முதலியவைகளை தரிப்பதாலும், குளிர் காற்று, மழை, அதிகமாக வீசும் சூழலில் வசிப்பதாலும், துவர்ப்பான வஸ்துகள், தித்திப்புப் பதார்த்தங்கள் இவைகளை அதிகமாக உபயோகப்படுத்துவதாலும், புது அரிசி சாதத்தை உண்பதாலும், அதிக கவலைப்படுவதாலும், நீண்ட தூரம் நடப்பதாலும், மது, புகை மற்றும் போதை வஸ்துகள் உபயோகிப்பதாலும் பழையசாதம் சாப்பிடுவதாலும், அதிகமாக சூடாக்கிய நீர், குளிர்ச்சியான நீர் இவைகளை ஒரே நேரத்தில் சேர்ந்து ஆகாரம் உட்கொள்ளவதாலும், கெட்டி தயிர், மோர், பால், நொங்கு, இளநீர், மாம்ஸ்சங்கள், உளுந்து முதலான பண்டங்களை நிதானமின்றி உபயோகிப்பதாலும், அதிகமாக நிலா வெளிச்சத்தில் இருப்பதாலும் ஜ்வரத்தில் தோஷங்கள் ஏற்பட்டு ஜ்வரம் மேலும் அதிகரிக்கிறது.
இனி ஜ்வரத்தில் சுப குணம் என்ன என்பதைப் பார்போம் :
கண்களில் செந்நிறம், முகத்தில் சந்திரனின் சோபை, கையிலுள்ள நாடியின் நடைகுதிரை போன்றும், வாக்குக் குயிலின் குரலைப்போல இனிமையாகவும் இருக்கும். காது நன்றாக கேட்கும், பற்கள் முல்லையரும்பைப் போல வெண்மையாக இருக்கும், வாயில் சுத்தமான உமிழ் நீர் சுரக்கும், எகிர்கள் சிவந்து இருக்கும், உள்ளங்கால், உள்ளங்கை இவைகளில் உஷ்ணம் இருக்கும், வாசனை அறியும் சக்தி இருக்கும் மேற்காணும் குறிகளுடன் ஒருவருக்கு ஜ்வரம் அடித்தால் நோயாளி பிழைப்பான் என்று தெரிந்து கொள்ளலாம்.
ஜ்வரத்தில் அபகுணம் என்ன என்பதைப் பார்ப்போம் :
வாத, பித்த, சிலேத்தும நாடிகள் நிதானமாகப் போகும். தலை நடுங்கும், காதுகளில் இரைச்சல் உண்டாகும். முகத்தில் கருநிறம், கைகள், கால்கள், கண்கள் முதலான உறுப்புகள் வெளுத்துப் போதல், உடம்பு வில்லைப் போல வளைதல், தொப்புல், கைகள், கால்கள், மார்பு முதலான இடங்களில் குளிர்ச்சி, தாதுக்கள் ஹீணமடைதல், விக்கல் முதலான குறிகளுடன் ஒருவருக்கு ஜ்வரம் அடித்தால் அது கெட்ட அறிகுறிகளாகும். வியாதி தீராது என்று தெரிந்துக்கொள்ள வேண்டும்.
ஜ்வரம் குணமானதற்கான அறிகுறிகள் என்ன என்பதைப் பார்போம் :
வியர்வை தாராளமாக உருவாகும், இருமல், தும்மல், வாயில் லேசான வேக்காளம், தேகம் இலேசாகும், தலையில் அரிப்பு, உணவில் விருப்பம், கொட்டாவி விடுதல் முதலிய குறிகள் உண்டானால் நோய் குணமாகிவிட்டது என்று தெரிந்துக்கொள்ளலாம்.
ஜ்வரம் நோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படாமல் உரிய தடுப்பு முறைகளும், சிகிச்சையும் மேற்கொள்ளாமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, இறக்கும் தருவாயில் இருக்கும் ஜ்வரம் நோயாளிகள் படும் அவஸ்தைகள் என்ன என்பதைப் பார்ப்போம் :
முன் இறந்தவர்களை கண்ணில் பார்த்தல், ஞாபக சக்தியின்மை, மேல்மூச்சு வாங்குதல், சித்த பிரமை, கண்கள் விழித்துக்கொண்டிருப்பது போல் இருத்தல், குரல் மாறுபடுதல், தேகம் முழுவதும் எரிச்சல், உடல் முழுவதும் குளிர்ந்த வியர்வை, முகத்தை தன் கரங்களால் தடவிக்கொள்ளல், உடலை விட்டு ஆவி பிரிதல் என்று தச (பத்து) அவஸ்தைகளை படுவார்கள் என்று ஆயுர்வேத மருத்துவம் கூறுகின்றது.
தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் மாமன்னர் சரபோஜி அவர்களால், நம் நாட்டு மருத்துவர்களைக் கொண்டு சேகரித்து வைக்கப்பட்ட வைத்திய அட்டவணை என்ற சுவடியில் ஜ்வரம் கணிதம் பற்றி கீழ்காணும் குறிப்புகள் காணப்படுகிறது.
-
அஸ்வினி நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் எட்டாவது நாள் தீரும் என்றும்
- பரணி நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் எட்டாவது நாள் தீரும் என்றும்
- கார்த்திகை நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் எட்டாவது நாள் தீரும் என்றும், எட்டாவது நாள் தீராவிட்டால் 20 வது நாளில் தீரும் என்றும்
- ரோகிணி நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் பத்தாவது நாள் தீரும் அப்படி தீராவிட்டால் 20 வது நாளில் தீரும் என்றும்
- மிருகசீர்ஷம் நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் பத்தாவது நாள் தீரும் என்றும்
- திருவாதிரை நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் ஐந்தாவது நாள் வேதனை செய்யும் 20 வது நாளில் தீரும் என்றும்
- புனர்பூசம் நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் 2 வது நாள் தீரும் என்றும் அப்படி தீராவிட்டால் 8 வது நாள் தீரும் என்றும்
- பூசம் நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் 7 வது நாள் தீரும் என்றும்
- ஆயில்யம் நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் 7 வது நாள் வேதனை செய்யும் 20 வது நாள் குணமாகும் என்றும்
- மகம் நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் 12 வது நாள் தீரும் அப்படி தீராவிட்டால் 15ம் நாள் தீரும் என்றும்
- பூரம் நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் 15 வது நாள் தீரும்
- உத்திரம் நட்சததிர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் 15 வது நாள் தீரும் என்றும் அப்படி தீராவிட்டால் 3 மாதத்தில் குணமாகும் வேதனை செய்யும் 20 வது நாள் குணமாகும் என்றும்
- அஸ்தம் நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் 8 வது நாள் தீரும் என்றும் அப்படி தீராவிட்டால் 3 மாதத்தில் குணமாகும்.
- சித்திரை நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் 8 வது நாள் தீரும் அப்படி தீராவிட்டால் 3 மாதத்தில் குணமாகும்.
- சுவாதி நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் 17 வது நாள் தீரும் என்றும்
- விசாகம் நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் 8 வது நாள் இறப்பு ஏற்படா விட்டால் 1 மாதத்தில் குணமாகும்
- அனுஷம் நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் 17 வது நாள் தீரும் என்றும்
- கேட்டை நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் 5வது நாள் இறப்பு ஏற்படா விட்டால் 5 மாதத்தில் குணமாகும்
- மூலம் நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் 9ம் நாள் குணமாகாவிட்டால 11ம் நாள் தீரும் என்றும்
- பூராடம் நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் 9ம் நாள் குணமகாவிட்டால் 11ம் நாள் தீரம்
- உத்திராடம் நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் 7 வது நாள் வேதனை செய்யும் 15ம் நாள் குணமாகும் என்றும்
- திருவோணம் நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் 7ம் நாள் இறப்பு ஏற்படாவிட்டால் 1 மாதத்தில் குணமாகும் என்றும்
- அவிட்டம் நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் 5ம் நாள் இறப்பு ஏற்படாவிட்டால் 19ம் நாளில் குணமாகும் என்றும்
- சதயம் நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் 5ம் நாள் வேதனை செய்யும் 7 வது நாள் குணமாகும் என்றும்
- பூரட்டாதி நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் 7ம் நாள் வேதனை செய்யும் 15 ம் நாள் குணமாகும் என்றும்
- உத்திரட்டாதி நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் 7வது நாள் வேதனை செய்யும் 25ம் நாள் குணமாகும் என்றும்
-
ரேவதி நட்சத்திர நாளில் ஏற்பட்ட ஜ்வரம் 8 வது நாள் இறப்பு ஏற்படாவிட்டால் 10வது நாள் குணமாகும் என்றும்
“வைத்திய அட்டவணை” என்ற சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது ஜோதிடம் தெரியாதவன் முழுமையான மருத்துவனாக இருக்க முடியாது என்ற கருத்துதான் என் நினைவுக்கு வருகிறது.
“ஜ்வர கண்டிகை” அகத்தியர் 2000 என்ற சுவடியில் ஒவ்வொரு நட்சத்திர பாதத்திலும் ஜ்வரம் ஏற்படும்போது அதற்கான ஜ்வர கால அளவு குறிப்புகள் காணப்படுகிறது. ஆனால் திருவாதிரை, விசாகம் ஆகிய நட்சத்திர பாதங்களுக்கான குறிப்புகள் அச்சுவடியில் குறிப்பிடப்படாத காரணத்தால் அது பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை.
அனைத்து வகையான ஜ்வரம் நோய்களுக்கும் ஏராளமான மருந்துகள் ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்துவங்களில் இருக்கிறது. இருந்தாலும் எளிதாக அனைவரும் செய்து சாப்பிடக்கூடிய வகையில் ஒரு சில மருந்து செய்முறை குறிப்புகளைப் பார்ப்போம்.
கோரைக் கிழங்கு பற்பாடகம் நொச்சியிலை கொன்றை வேர் கடுகரோகிணி கடுக்காய் தோல் கருஞ்சீரகம் சீரகம் சிற்றரத்தை சுக்கு திப்பிலி மிளகு மேற்காணும் இவைகளை வகைக்கு 70 கிராம் வீதம் எடுத்து, கல்லுரலிட்டு ஒன்னிரண்டாக இடித்து பத்திரப்படுத்திக் கொள்ளவும், தேவையான பொழுது மருந்தில் 70 கிராம் எடுத்து 500 மில்லி சுத்தமான தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து கொதிக்கவைத்து 100 மில்லியாக வற்றியவுடன் வடிக்கட்டி பருகினால் வாத, கப ஜ்வரங்கள் தீரும்.
பெருங்குமிழ் வேர் – வேலிப்பருத்தி வேர் –அதிவிடயம் – கீழா நெல்லி – கடுகரோகிணி –கோட்டம் – முருங்கை வேர் – சீந்தில்கொடி –வேப்பயீர்க்கு – செந்தொட்டி வேர் – பெருங்குறும்மை (மருள்) – கோரைக்கிழங்கு – சுக்கு – புடலம் வேர்
இவைகளை சமஅளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு பாத்திரத்திலிட்டு எட்டு மடங்கு சுத்தமான தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து எரித்து, எட்டில் ஒன்றாக வற்ற வைத்து இந்துப்புச் சேர்த்து உட்கொண்டால் அனைத்து வகையான ஜ்வரமும் குணமாகும்.
கண்டங்கத்தரி வேர் பொற்கொன்றை வேர் கடுக்காய் தோல் சிறுகத்தரி வேர் கடுக ரோகிணி நில வேம்பு கோரைக்கிழங்கு வெட்பாலையரிசி திப்பிலி பேய்புடல் மிளகு இவைகளை வகைக்கு 15 கிராம் வீதம எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, சுத்தமான தண்ணீர் 1 லிட்டர் விட்டு அடுப்பில் வைத்து எரித்து 100 மில்லியாக வற்ற வைத்து அருந்தினால் இருமல், தலைபாரம், இடுப்பு வலி, உடம்பு வீக்கம், கப ஜ்வரங்கள் முதலனவை தீரும்.
ஜ்வரம் நோய் இரத்ததில் உள்ள வெள்ளை அணுக்களை குறைத்து விடுவதால், உடம்பில் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது. இதனால் இந்நோய் கண்டவர்கள் குணமான பிறகும் கூட பலவீனமாக காணப்படுகிறார்கள். கஞ்சி, சூப்பு, பழச்சாறு ஆகியவற்றை சாப்பிட வேண்டும். படுக்கையில் படுத்து ஓய்வு எடுப்பதும், முறையான மருத்துவ ஆலோசனைகளும்தான் இதற்கு மிக அவசியம் என்பதை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.
-Dr.துரைபெஞ்சமின்,
மருத்துவ சுவடிகள் ஆய்வாளர்,Ex. Honorary A.W.Officer, Govt Of India.
ullatchithagaval@gmail.com
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
கோரத்தாண்டவமாடும் “கொரோனா வைரஸ்” (SARS–CoV–2)
சார்ஸ்-சி.ஓ.வி.-2 “severe acute respiratory syndrome coronavirus 2 (SARS–CoV–2) என அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்படும் “கொரோனா வைரஸ்” சுவாசத்தின் மூலம் அருகில் யாராவது இருமும் போதோ, தும்மும் போதோ (அல்லது) “வைரஸ்” பரவியுள்ள ஒரு பொருளை, இடத்தைத் தொட்டுவிட்டு பிறகு முகம், வாய் பகுதியைத் தொடும் போது இந்த வைரஸ் உடலில் நுழைகிறது. அதனால்தான் “கொரோனா வைரஸ்” உலக சுகாதார அமைப்பால் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், மற்றவர்களுக்கு இது பரவாமல் தடுத்து விடலாம். “கொரோனா வைரஸ்” தொற்றுக்கு உள்ளானவர்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவர்களின் ஆலோசனைபடி ஆகாரம் உட்கொண்டு மருத்துவமனையில் ஓய்வெடுத்தால், பெரும்பாலானோர் சுமார் ஒரு வாரத்துக்குள் குணமாகிவிடுகின்றனர். வைரஸை எதிர்த்து நோய் எதிர்ப்பாற்றல் போராடும் காரணத்தால் இவ்வாறு நடக்கும்.
இதை தொடக்கத்திலேயே கவனிக்காவிட்டால், முதலில் தொண்டை அருகே உள்ள செல்களில் அது தொற்றிக் கொள்ளும். பிறகு சுவாசப் பாதை மற்றும் நுரையீரலுக்கு சென்று, அது அங்கு பெரும் எண்ணிக்கையில் புதிய வைரஸ்களை உருவாக்கி, உடலில் அதிக செல்களில் தொற்று ஏற்படுத்தும்.
ஆரம்பத்தில் ஒரு சிலருக்கு நோய் அறிகுறிகள் தோன்றாது. ஆனால், தொற்று ஏற்பட்டு அதன் நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கான காலம் ஆளுக்கு ஆள் மாறுபடும். இருந்தாலும், சராசரியாக இது ஐந்து நாட்கள் என்ற அளவில் உள்ளது.
“கொரோனா வைரஸ்” தொற்று பரவிய 10 பேரில், எட்டு பேருக்கு நோய் லேசான பாதிப்பாக அமையும். காய்ச்சலும், வறட்டு இருமலும் தான் இதற்கான முக்கிய அறிகுறிகளாக உள்ளன. ஆரம்பத்தில் வறட்டு இருமலாக இருக்கும், பின்னர் வைரஸ் தொற்று ஏற்படும்போது, செல்களில் எரிச்சல் தோன்றும். சிலருக்கு சுவாசிப்பதில் சிரமம், தொண்டை வறட்சி, தலைவலி, உடல் வலிகள், இருமலின் போது கெட்டியான சளி வெளியாகும். கிட்டதட்ட “நுரையீரல் அழற்சி” (நிமோனியா) தொற்று உள்ளானவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் “கொரோனா வைரஸ்” தொற்று உள்ளானவர்களுக்கும் உண்டாகிறது.
நிமோனியா (Pneumonia) என்ற ஆங்கிலச் சொல்லானது, நுரையீரலின் நோய் எதிர்ப்புக் குறை நோய் பாதிப்புகள், நிணநீர்க்குழாய் நோய்கள், இரசாயனப் பாதிப்புகள் (அல்லது) மருந்துகளால் ஏற்படும் எதிர்விளைவுகள் போன்ற அனேகப் பாதிப்புகளை விவரிக்க பரவலாக பயன்படுத்தப்பட்டாலும், முக்கியமாக நுரையீரல் அழற்சியைக் குறிக்கவே Pneumonitis என்ற ஆங்கிலச் சொல் இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது.
நோய்த் தடுப்பாற்றல் எதிர்வினை செயல்பாட்டில் சமநிலையற்ற தன்மையை “கொரோனா வைரஸ்” ஏற்படுத்துகிறது. வாயில் இருந்து, மூச்சுக் குழாய் வழியாகச் சென்று, நுரையீரலின் சிறிய குழல்களில் உட்புகுந்து, நுண்ணிய காற்று அறைகளில் போய் அமர்ந்து கொள்கிறது. அங்கு தான் இரத்தத்திற்கு ஆக்சிஜன் செல்வதும், கரியமில வாயு நீக்கப்படுவதும் நடக்கிறது.
ஆனால், நிமோனியாவில் இந்த அறைகளில் தண்ணீர் கோர்த்துக் கொண்டு, சுவாச இடைவெளி குறைந்து, சுவாசிப்பதில் சிக்கலை உருவாக்குகிறது.
“கொரோனா வைரஸ்” தொற்று உள்ளானவர்களுக்கு இரத்த அழுத்தம் அபாயகரமான அளவுக்கு குறையும்போது, உடல் உறுப்புகள் செயல்பாடு குறையும் (அல்லது) முழுமையாக நின்றுவிடும். நுரையீரலில் பரவலான அழற்சி ஏற்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்படும்போது, உயிர்வாழ்வதற்குத் தேவையான ஆக்சிஜனை அளிப்பதை நுரையீரல் நிறுத்துவிடுகிறது. இரத்தத்தை சுத்திகரிக்க முடியாமல் சிறுநீரகங்கள் தடுக்கப்படுகிறது. இதனால் உடலின் பல முக்கிய உறுப்புகள் செயல் இழந்து மரணம் உண்டாகிறது.
அதனால்தான் “கொரோனா வைரஸ்” – இது மகா பொல்லாத தொற்று வியாதி என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள், முதியோர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நோயாளிகள் பெருமளவில் இதற்கு பாதிப்புக்கு உள்ளாகி பலியாகின்றனர்.
“கொரோனா வைரஸ்” வெகு எளிதில் மற்றவர்களுக்கு இது தொற்றக்கூடிய நோய் ஆகும். வீட்டில் ஒருவருக்கு இந்நோய்க் கண்டால், அவர் இருமும்போதும், தும்மும்போதும், மூக்கையும், வாயையும் கைகுட்டையால் மூடிக்கொள்ள வேண்டும். இக்காரியத்தை தவறாமல் கவனமாக செய்ய வேண்டும். எச்சில், சளி, கோழை ஆகியவற்றை காகிதத்தில் துப்பி அந்த காகிதத்தை உடனுக்குடன் எரித்துவிட வேண்டும்.
இந்நோய் உள்ளவர்களின் ஆடைகள், உள்ளாடைகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள், கோப்பைகள், சாப்பாட்டு பாத்திரங்கள் ஆகியவற்றை மற்றவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.
இந்நோய் கண்டதும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவர்களின் ஆலோசனைபடி ஆகாரம் உட்கொண்டு மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும். பாதம், கால் பகுதிகளை வெந்நீர் வைத்து கழுவவேண்டும், தண்ணீர் மற்றும் எழுமிச்சை பழரசம் நிறைய குடிக்க வேண்டும். 1 மணி நேரத்திற்கு குறைந்தது 200 மில்லியாவது கட்டாயம் தண்ணீர் அல்லது பழ ரசம் அருந்த வேண்டும். பாதங்கள் கதகதப்பாய் இருத்தல் அவசியம். இதற்கு வெந்நீர்பாட்டில்களை பாதத்திற்கு அடியில் வைத்துக்கொள்ளுவது நல்லது.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
-என்கிறார் திருவள்ளுவப் பெருந்தகை.
ஆம், துன்பம் வருமுன் தன்னை காத்துக் கொள்ள தவறியவரின் வாழ்க்கை, தீயின் முன்னே வைத்த வைக்கோல் போலக் கெடும்.
எனவே, வரும் முன் காப்பதே சிறந்தது
(Prevention is better than cure)
-Dr.துரைபெஞ்சமின்,
மருத்துவ சுவடிகள் ஆய்வாளர்.
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
ullatchithagaval@gmail.com
Ummmm… Ok sir