? “கொரோனா வைரஸ்”. என்றால் என்ன?
சார்ஸ்-சி.ஓ.வி.-2 “Severe acute respiratory syndrome coronavirus 2 (SARS–CoV–2) “கொரோனா” என்பது ஒரு வைரஸ் தொற்று நோய்.
?“கொரோனா வைரஸ்” தொற்றின் பொதுவான அறிகுறிகள் என்ன?
காய்ச்சல், வறட்டு இருமல், சுவாசிப்பதில் சிரமம், சில நோயாளிகளுக்கு வலிகள், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் அல்லது வயிற்றுப்போக்கு உள்ளன.
?“கொரோனா வைரஸ்” எவ்வாறு பரவுகிறது?
இது இரண்டு வழிகளில் நிகழலாம்:
1.நேரடி நெருங்கிய தொடர்பு, 2.மறைமுக தொடர்பு.
(i)நேரடி நெருங்கிய தொடர்பு:
“கொரோனா வைரஸ்” தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது (அல்லது) தும்மும்போது நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலம் பரவும்.
(ii)மறைமுக தொடர்பு:
“கொரோனா வைரஸ்” பரவியுள்ள ஒரு பொருளை, இடத்தைத் தொட்டுவிட்டு பிறகு முகம், வாய், கண்களைத் தொடும் போது இந்த வைரஸ் உடலில் நுழைகிறது. அதனால்தான் “கொரோனா வைரஸ்” உலக சுகாதார அமைப்பால் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
?“கொரோனா வைரஸ்” தொற்று பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
இருமும்போது (அல்லது) தும்மும்போது உங்கள் மூக்கையும், வாயையும் கைக்குட்டையால் மூடி வைக்கவும். குறைந்தது தினமும் கைக்குட்டையை சோப்பு கொண்டு நன்றாக அலச வேண்டும். உள்ளங்கைகளை விட உங்கள் வளைந்த முழங்கையில் இருமுவது, தும்முவது நல்லது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை சாதாரண சோப்பு கொண்டு சுத்தம் செய்தாலே போதும்.
மேலும், மக்கள் அதிகமாக கூடும் திருமண மண்டபங்கள், பேருந்து மற்றும் இரயில் நிலையங்கள், காய்கறி சந்தைகள், விளையாட்டு மைதானங்கள், கேளிக்கை விடுதிகள், வழிப்பாட்டுத் தலங்கள், உறவினர் மற்றும் நண்பர்களின் சுப மற்றும் துக்க நிகழ்வுகள் ….ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வீட்டை விட்டு வெளியே போகாமல் இருப்பது உத்தமம். ஒருவேளை கட்டாயம் வெளியில் செல்ல வேண்டி இருந்தால், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
வெளியில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு உடுத்தி சென்ற ஆடைகளை களைந்துவிட்டு அவசியம் குளிக்க வேண்டும். அப்படி இயலாதப்பட்சத்தில் கைகள் மற்றும் முகத்தை சோப்புப் போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். இதற்கிடையில், கதவு கைப்பிடிகள், மேசை விரிப்புகள், நாற்காலிகள் போன்ற மேற்பரப்புகளைத் தொடுவதைத் தவிர்க்கவும். மற்றவர்களுக்கு கை கொடுப்பது, கட்டி தழுவது, குழந்தைகளை தூக்கி கொஞ்சுவது, முத்தமிடுவது… போன்ற செயல்களில் ஈடுப்படக் கூடாது. இன்னும் கொஞ்சம் நாட்களுக்கு பாசத்தையெல்லாம் மனதளவில் வைத்து கொள்வதே நல்லது. ஏனென்றால், “எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது”.
?யாரிடம் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்?
அறிமுகமில்லாத நபர்கள் மற்றும் கடந்த 30 நாட்களில் பிற நாடுகளுக்கு அல்லது பிற மாநிலங்களுக்கு சென்று வந்த குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் மிக மிக எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.
?“கொரோனா வைரஸ்” தொற்று உள்ள நபருக்கு எத்தனை நாட்களுக்குள் அறிகுறிகள் உண்டாகும்?
நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கான காலம் ஆளுக்கு ஆள் மாறுபடும். பொதுவாக 1 முதல் 14 நாட்களுக்குள் அறிகுறிகள் உண்டாகும். ஆனால், ஒரு சிலருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாமலேயே தீவிரமாக நோய் பரவக்கூடும். எனவே, மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
?அது சரி “கொரோனா வைரஸ்” தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைக்க முடியாதா?
யார் சொன்னது? இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், மற்றவர்களுக்கு இது பரவாமல் தடுத்து விடலாம். “கொரோனா வைரஸ்” தொற்றுக்கு உள்ளானவர்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவர்களின் ஆலோசனைபடி ஆகாரம் உட்கொண்டு மருத்துவமனையில் ஓய்வெடுத்தால், பெரும்பாலானோர் சுமார் ஒரு வாரத்துக்குள் குணமாகிவிடுகின்றனர். வைரஸை எதிர்த்து நோய் எதிர்ப்பாற்றல் போராடும் காரணத்தால் இவ்வாறு நடக்கும்.
“கொரோனா வைரஸ்” தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 80சதவீதம் பேர் எந்த வித கடுமையான சிக்கல்களும் இல்லாமல் இந்நோயிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.
ஆனால், குழந்தைகள், முதியோர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள இரத்த அழுத்தம், இதய நோய், சுவாச நோய், ஆஸ்துமா, புற்றுநோய், நீரிழிவு நோயாளிகள்தான் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவர்களில் 6 நோயாளிகளில் ஒருவர் என்ற எண்ணிக்கையில் “நுரையீரல் அழற்சி” (நிமோனியா) தொற்று ஏற்பட்டு உயிர் இழக்கின்றனர்.
எனவே “கொரோனா வைரஸ்” தொற்று நமக்கு வராது என்றோ; வந்தால் குணமாகிவிடும் என்றோ; அலட்சியமாக இருப்பது, “தலை அரிக்கிறது என்பதற்காக கொள்ளிக் கட்டையை எடுத்து சொறிந்துக் கொண்ட கதையாகிவிடும்”.
விஷத்திற்கு முறிவு இருக்கிறது என்பதற்காக விஷப் பரிட்சையில் இறங்கக் கூடாது!
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
-என்கிறார் திருவள்ளுவப் பெருந்தகை.
ஆம், துன்பம் வருமுன் தன்னை காத்துக் கொள்ள தவறியவரின் வாழ்க்கை, தீயின் முன்னே வைத்த வைக்கோல் போலக் கெடும்.
எனவே, வரும் முன் காப்பதே சிறந்தது
(Prevention is better than cure)
-Dr.துரைபெஞ்சமின்,
மருத்துவ சுவடிகள் ஆய்வாளர்.Ex. Honorary A.W.Officer, Govt Of India,
ullatchithagaval@gmail.com