இந்திய அரசின் முத்திரை, உலக சுகாதார நிறுவனத்தின் முத்திரை, தமிழக அரசின் முத்திரை, ஆயுஷ் அமைச்சகத்தின் முத்திரை, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் முத்திரை, தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் முத்திரை, இம்ப்காப்ஸ்’ என அழைக்கப்படும், இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனத்தின் முத்திரை ஆகியவற்றை பயன்படுத்தி “சித்த மருத்துவ முறையில் கோவிட் -19 தடுப்பு மற்றும் சிகிச்சை” என்ற தலைப்பில் 15 நபர்கள் அடங்கிய ஒரு மருத்துவக்குழு, “கொரோனா நோய்” பற்றி 20 பக்கங்கள் கொண்ட ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் 8 முதுநிலை சித்த மருத்துவர்கள், ஒரு இளைநிலை சித்த மருத்துவர், ஒரு ஊட்டச் சத்து நிபுணர், ஒரு தமிழ் சுவடியியல் அறிஞர், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, 3 சித்த மருத்துவ ஆராய்ச்சி கட்டுரையாளர்கள் ஆகியோரின் படங்கள் அதில் பதிவாகியுள்ளது. இந்த ஆய்வறிக்கை பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் காட்டு தீ போல பரவி வருகிறது.
இந்நிலையில், இந்த 20 பக்க ஆவணம் போலியானது என்றும், தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் இது வெளியிடப்பட்டுள்ளது என்றும், அதன் உள்ளடக்கங்களுக்கு தேசிய சித்த மருத்துவ நிறுவனம் பொறுப்பல்ல என்றும், மேலும், தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் முத்திரை (அல்லது) இந்த நிறுவனத்தின் அதிகாரிகளின் பெயர்களை எந்தவொரு சமூக ஊடகங்களிலும் (அல்லது) ஆவணங்களிலும் அனுமதியின்றி பயன்படுத்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை விட பெரிய குழப்பமாக இருக்கிறது தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் அறிக்கை.
அப்படியானால், இந்த 20 பக்க ஆய்வறிக்கையை தயார் செய்து, அச்சிட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது யார்? எங்கிருந்து யாரால் வெளியிடப்பட்டது? அந்த ஆய்வறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள நபர்களின் பெயர், பதவிகள் மற்றும் படங்கள் தான் தெளிவாக இருக்கிறதே?! அதைக்கொண்டு சம்மந்தப்பட்ட நபர்களிடம் சட்டப்படி உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டியதுதானே? அரசு முத்திரையை அனுமதியின்றி பயன்படுத்தியவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டியதுதானே?
இப்படி கை புண்ணுக்கு கண்ணாடி தேடுவது ஏன்?
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
முக்கிய குறிப்பு:
மேற்காணும் செய்தியை நாம் பதிவேற்றம் செய்வதற்கு முன்பு, தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநரின் விரிவான விளக்கத்தைப் பெறுவதற்காக கீழ்காணும் Phone:+91(0)44-22411611 Enquiry:+91(0)44-22380789 என்ற தொலைபேசி எண்களில், நாங்கள் இன்று பல முறை முயற்சி செய்தோம். ஆனால், தொலைபேசி மணி அடித்துக்கொண்டே இருந்ததே தவிர, யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை.