இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் இன்று தொலைபேசியில் கலந்துரையாடினார்.
தற்போதைய கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பு குறித்து இரு தலைவர்களும் பேசினர். இரு அரசுகள் சார்பிலும் தங்கள் நாடுகளில் கையாளப்படும் அணுகுமுறைகள் பற்றியும் அவர்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். சுகாதார நெருக்கடியான சூழ்நிலையில் இரு தரப்பிலும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவம் குறித்து இருவரும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர். கூட்டு ஆராய்ச்சி முயற்சிகளில் ஈடுபட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் பேசினர்.
பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவில், ஆஸ்திரேலியர்கள் யாராவது தங்கியிருக்க நேரிட்டிருந்தால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார். அதேபோல ஆஸ்திரேலியாவில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் ஆஸ்திரேலிய சமுதாயத்தின் முக்கியமான அங்கமாக தொடர்ந்து நீடிப்பார்கள் என்று ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் உறுதியளித்தார்.
இப்போதைய சுகாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் இப்போது கவனம் செலுத்தினாலும், இந்திய – பசிபிக் பிராந்தியம் உள்ளிட்ட, இந்திய – ஆஸ்திரேலிய பங்களிப்பு நிலையை பரவலாக ஆக்குவதில் கவனம் செலுத்துவது என்பதிலும் இரு தலைவர்களும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர்.
ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் பெருமிதம்:
கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து எனது நல்ல நண்பர் பிரதமர் நரேந்திர மோதியுடன் இன்று தொலைபேசியில் ஒரு சூடான கலந்துரையாடலில் ஈடுப்பட்டேன். இந்த நெருக்கடியை நிர்வகிப்பது குறித்த எங்கள் அனுபவங்களை நாங்கள் பகிர்ந்து கொண்டோம், மேலும், வைரஸிற்கான சிகிச்சையைப் பற்றிய அறிவையும் தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம்.
இவ்வாறு ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்த தொலைபேசி கலந்துரையாடல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
-Dr.DURAI BENJAMIN.
ullatchithagaval@gmail.com
Good conversation