மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திரமோதி அவர்களுக்கு, அன்பு வணக்கம்.
கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் வணிக நோக்கம் எதுவுமின்றி, நாடு வளமாகவும், மக்கள் நலமாகவும் வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு வரும் நாம். உலகம் முழுவதும் நோய் தொற்றுப் பரவி வரும் இந்த ஆபத்தான பேரிடர் காலத்திலும் இரவு, பகல் பாராது மக்களோடு மக்களாக, மக்களின் நலனுக்காகவே தொடர்ந்து பணியாற்றி வருகின்றோம்.
நாட்டு மக்களின் நாடித்துடிப்பை நன்கு உணர்ந்தவன் என்ற முறையிலும், மக்கள் படும் துயரங்களை நேரில் அறிந்தவன் என்கிற வகையிலும், அவற்றை தங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். இதற்கு தங்கள் மூலம் நல்ல தீர்வு கிடைக்குமென்று நான் முழுமையாக நம்புகின்றேன்.
“கொரோனா நோய்” தடுப்பு நடவடிக்கைக் காரணமாக, கடந்த ஒரு மாதக் காலமாக, இந்தியா முழுவதும் வீட்டில் முடங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான ஏழை மக்கள், தனது தாய், தந்தை, கணவன், மனைவி மற்றும் குழந்தைகளோடு உண்ண உணவின்றி பட்டினியால் தவித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் தினக்கூலிகள், இதில் நிலமற்ற விவசாய கூலித்தொழிலாளர்களும் அடக்கம். இன்னும் வெட்கத்தை விட்டு வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், இவர்கள் அனைவரும் அன்றாடம் காச்சிகள். தினமும் வேலைக்கு சென்றால்தான் அவர்கள் அடுப்பில் கஞ்சி கொதிக்கும்.
ஆனால், “கொரோனா” என்ற கொடிய அரக்கன், அவர்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையிலும் மண்ணை அள்ளி வீசி விட்டான். இவர்கள் அனைவரும் “வேர் அறுந்த செடிகளைப் போலவும், தாயை இழந்த பிள்ளைகளைப் போலவும்” தற்போது தவித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவருடைய வயிற்றிலும் தாங்கள் பாலை வார்க்க வேண்டும் என்று சொல்லதான் எனக்கும் ஆசை! –ஆனால், சுமார் 30 கோடி குடும்பங்களைக் கொண்ட, சுமார் 135 கோடி மக்கள் வாழும் நம் இந்திய தேசத்தில், இதுபோன்ற ஆபத்தான பேரிடர் காலங்களில் அது போன்ற கோரிக்கையை வைக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை.
இருந்தாலும், இப்போதைக்கு அவர்களுக்கு தேவையான அரிசி, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை விலையின்றி, தடையின்றி வழங்கினாலே அவர்கள் நிச்சயம் உயிர் பிழைத்துக் கொள்வார்கள். சமைத்த உணவுகளை வழங்குவது “நோய் தொற்று” அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் மக்கள் உணவு தயாரிப்புக்காக அத்யாவசியப் பொருட்களை எதிர்பார்க்கிறார்கள்.
அதற்கு முதற்கட்டமாக ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்திற்கு குறைந்தப்பட்சம் ரூ.100-வது கட்டாயம் வேண்டும். தொடக்கத்தில் இருந்து இன்னும் எத்தனை நாட்களுக்கு ஊரடங்கு (144) நீடிக்கிறதோ, அத்தனை நாட்களை கணக்கிட்டு, ஏழை குடும்பங்களுக்கு இதை இந்திய அரசு போர்கால அடிப்படையில் உடனே நேரடியாக வழங்க வேண்டும்.
மாநில அரசின் உதவிகளை இதில் கணக்கில் கொள்ளக்கூடாது. ஏனென்றால், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசும், ஏதோ அவர்கள் சக்திக்கு ஏற்ற வகையில் மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளனர் என்பதை நன்றியோடு இங்கு நாம் குறிப்பிட்டுதான் ஆகவேண்டும்.
அதற்காக மத்திய அரசு ஒன்றுமே செய்யவில்லை என்று நான் கூறவில்லை. அவையெல்லாம் மக்களுக்கு விரைவாக இன்னும் சென்று சேரவில்லை என்பதை தங்களுக்கு இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.
தற்போதைய சூழலில் கொரோனா மற்றும் பசி (வறுமை) என்ற இரண்டு கொடிய அரக்கனையும் மக்களிடம் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நோய் தொற்றால் இறந்துப்போனால் அதை “தலை விதி” என்று மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்!- ஆனால், உணவின்றி பட்டினியால் ஒருவர் இறந்தால் கூட, அந்த “பலி சொல்” அந்த நாட்டை ஆளுகின்ற ஆட்சியாளர்களைதான் வந்துச் சேரும். ஏனென்றால், நோயை விட, பசி கொடுமையானது.
கடந்த 05.02.2020 தேதியிட்டு, நான் தங்களுக்கு அனுப்பிய 5 பக்கங்கள் கொண்ட கடிதத்தில், அதில் நான் குறிப்பிட்டு இருந்த ஒரு சில வரிகளை இங்கு இப்போது இத்தருணத்தில் தங்களுக்கு நினைப்படுத்துவது மிகவும் பொருத்தமாக இருக்குமென்று நான் முழுமையாக நம்புகின்றேன்.
ஆம், உலகத்தில் உண்மையிலுமே மிகப் பெரிய துயரம் என்ன தெரியுமா? ஒரு மனிதன், ஒரு சக மனிதனிடம் உணவுக்காகவும், உடைக்காகவும், உயிர் வாழ்வதற்காகவும் கூனி, குருகி, கையேந்தி யாசகம் (பிச்சை) கேட்பதுதான். இதை நாம் ஒவ்வொருவரும் தேச அவமானமாகவும், தேசிய குற்றமாகவும் கருத வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சமூக அவலங்களை நாம் முழுமையாக தடுக்க முடியும்.
ஏழைகளே இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கு முன்பு, பிச்சைக்காரர்கள் நடமாட்டம் இல்லாத இந்தியாவை நாம் முதலில் உருவாக்க வேண்டும். இது அவசியமட்டுமல்ல! அவசரமும் கூட. அப்போதுதான் இந்தியா உண்மையிலுமே தூய்மை இந்தியாவாக மாறும்.
கடந்த 30 நாட்களில் தாங்கள் ஒவ்வொரு முறையும் நாட்டு மக்களுக்கு உரையாற்றப் போகிறீர்கள் என்ற தகவல் கிடைத்தவுடன், இது நாள் வரை உங்கள் பேச்சை கேட்காதவர்கள்கூட, ஏன் அரசியல் ரீதியாக உங்களைப் பிடிக்காதவர்கள்கூட, “பிரதமர் மோடி” இன்று நல்லச் செய்தி சொல்லமாட்டாரா?! ஏதாவது உதவித் தொகை தனிப்பட்ட முறையில் மக்களுக்கு அறிவிக்கமாட்டாரா?! என்ற எதிர்பார்ப்போடுதான் வானொலி, தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் முன்பு காத்துக்கிடந்தார்கள். ஏனோ தெரியவில்லை! அவர்கள் எதிர்பார்த்த எதையும், நீங்கள் சொன்னதாக அவர்கள் இதுவரை உணரவில்லை. “ஆமா போ” என்ற சலிப்புடன்தான் அவர்கள் எழுந்து சென்றார்கள் என்ற அப்பட்டமான உண்மையை, மத்திய உளவுத்துறை அதிகாரிகள் உங்கள் கவனத்திற்கு தெரிவித்தார்களா? என்பது எனக்கு தெரியாது. ஆனால், அந்த எதார்த்த உண்மையை இங்கு பதிவு செய்வதை எனது கடமையாக நான் கருதுகின்றேன்.
ஆனாலும், நாட்டு மக்கள் இன்னும் உங்கள் மீதுள்ள நம்பிக்கையை இழக்கவில்லை. அடுத்த முறை உரையாற்றும் போதாவது, நமக்கெல்லாம் “பிரதமர் மோடி” நல்ல செய்தி சொல்வார் என்ற நம்பிக்கையில் “இளவு காத்த கிளியை போலவே” அந்த நாளுக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களை போலவே நானும் காத்திருக்கிறேன். தங்களின் அந்த நல்ல செய்திக்காக…!
Makkalin nalan karuthi, PM cell varaikkum, intha letter anuppiyatharkku, EDITOR sir ku , NANDRI.
MANAM vuruguvara PM, makkal nalanai kappara, poruthirunthu parppom.