தமிழக விவசாயிகளுக்கான இலவச மின்சாரமும், வீட்டு உபயோகத்திற்கான 100 யூனிட் இலவச மின்சாரமும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை வந்த மத்திய எரிசக்தித் துறை இணை அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி 4 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
மத்திய எரிசக்தி துறை இணை அமைச்சர் ஆர்.கே.சிங் நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தமிழகம் வந்தார். தமிழகம் வந்த எரிசக்தி துறை இணை அமைச்சர் ஆர்.கே.சிங், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது தமிழக மின்சார துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட சில அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் நிலையான கொள்கை. இதே போல தமிழ்நாட்டில் அனைத்து வீட்டு உபயோகப் பணிகளில் நுகர்வோருக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆகவே, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது, அது தொடர்ந்து வழங்க வேண்டும். இதே போல வீட்டு உபயோகத்துக்கு 100 யூனிட் இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கப்பட வகை செய்யப்பட வேண்டும். விவசாயிகளுக்கும், வீட்டு உபயோக நுகர்வோர்களுக்கும் டான்ஜெட்கோ நிறுவனம் மூலம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மானிய பட்டுவாடா நடைமுறையை மாநில அரசின் வசமே விட்டுவிட வேண்டும். இலவச மின்சாரத்துக்கு எதிரான சட்டப் பிரிவை நீக்க வேண்டும்.
பம்பு செட்டுகளுடன் இணைந்த தனித்தனியான கிரிட்டை அமைத்துக் கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும். மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திலிருந்து 100 சதவீத மான்ய தொகையுடன் இதை நடத்தலாம். உதய் திட்டத்தின் கீழ் செயல் மூலதனத்துக்கான நெறிமுறைகளை தளர்த்துமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ரூ. 20 ஆயிரத்து 622 கோடி நிதி உதவிக்கு ஏற்கனவே டான்ஜெட்கோ நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஆகவே, சலுகை வட்டி விகிதத்தில் நிதி உதவியை பயன்படுத்திக் கொள்ள இந்தத் தொகையை வழங்கிட வேண்டும்.
தற்போது மறு கட்டமைப்பு விரைவான மின் மேம்பாடு மற்றும் சீர்திருத்த திட்டத்தின் கீழ் ரூ.2661.85 கோடி மதிப்பிலான பணிகள் தமிழகத்தில் 88 நகரங்களில் முடிவடைந்துள்ளது.
ஆகவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மத்தியஸ்த தீர்வு தொகை ரூ.268.86 கோடியை வழங்க வேண்டும். இந்த திட்டத்தின் பகுதி 2-ன் கீழ் 50 சதவீத கடன் தொகையான ரூ.1330.93 கோடியை நிதி உதவியாக வழங்க வேண்டும்.
தினமும் தமிழகத்திற்கு மின் உற்பத்திக்காக 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவை. அதாவது எரிபொருள் ஆண்டுக்கு 21.291 மில்லியன் டன் தரப்பட வேண்டும். இருப்பினும் ஒப்பந்தத்திற்கு மாறாக கடந்த 5 ஆண்டுகளாக எரிபொருள் சப்ளை ஒப்பந்தத்தில் 61.6 சதவீதம் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. வனப்பகுதிகள் தொடர்பான தடையில்லா சான்றிதழ் கிடைக்காததால் ஒடிசா மாநிலத்தின் சந்திரபிலா நிலக்கரி சுரங்கத்திலிருந்து தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் மற்றும் மின் பகிர்மான கழகத்திற்கு நிலக்கரி வருவதில் தொடர்ந்து தடை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இதை கவனத்தில் கொண்டு உரிய அனுமதியை வழங்க வேண்டும்.
மகாராஷ்டிரா மாநிலம் ரெய்கார்-புகழூர்-திருச்சூர் உயர் அழுத்த மின் தடத்திற்கு தேசிய முக்கியத்துவம் தரப்பட வேண்டும். தமிழகமின் வளர்ச்சி ஆணையத்திற்கு வரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.50.88 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
Minsaraththirkkana thevaiyai, thadaiyillammal thamizhagathirkku Central government atharkkunfana committee idamirunthu, MANBU MIGU CM, petru thara vendum….