அரிய உயிரினங்களின் பட்டியலில் இருந்து வரும் சிட்டுக்குருவிகளுக்கு வீட்டில் கூடுகள் அமைத்துள்ள வழக்கறிஞர் குடும்பத்தினர்!

சிட்டுக்குருவிகள். (File Photos)

சிட்டுக்குருவி மனிதர்களுடன் நெருக்கமாகத் தொடர்புடைய பறவையாகும். இவை சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து மனிதர்களுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. இவற்றின் துணையினம் ‘’பே. டொ. பாக்ட்ரியானஸ்’’ மனிதர்களுடன் குறைந்த தொடர்புடையது ஆகும். அது தற்காலச் சிட்டுக் குருவிகளின் மூதாதையர் அல்லாத குருவிகளுக்கு பரிணாம ரீதியாக நெருக்கமாகக் கருதப்படுகிறது.

பூச்சிகளை உண்டு சிட்டுக்குருவி மனிதர்களுக்கு நன்மை பயக்கிறது.

தொல்காப்பியத்தில் சிட்டுக்குருவியின் பெருமைகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. பாரதியாரும் தன் கவிதைகளில் சிட்டுக்குருவியின் பெருமைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். புறநானூற்றுப் பாடலில் இவை ‘குரீஇ’ என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இச்சொல்லே பின்னர் மருவிக் குருவியானது. சங்க இலக்கியங்கள் ‘மனையுறைக் குருவி’ என்று சிட்டுக்குருவியயைக் குறிப்பிடுகின்றன. மனிதர்கள் வசிக்கும் வீடுகளில் பயமின்றி வாழ்ந்த காரணத்தால் இவை அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், ‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு? தென்றலே உனக்கேது சொந்த வீடு? உலகம் முழுதும் பறந்து பறந்து ஊர்வலம் வந்து விளையாடு!’- எனவும், சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே, செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே!-எனவும், சிட்டுக்ருவியின் பெருமைகளைப் பற்றி சினிமா பாடல்களில் கவிஞர்கள் சிறப்பித்துள்ளனர்.

உலகின் பல பகுதிகளிலும் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த வீழ்ச்சிகள் முதலில் வட அமெரிக்காவில் காணப்பட்டன. இதற்கு ஆரம்பத்தில் வீட்டு ஃபிஞ்ச் பறவைகளின் பரவல் காரணம் எனச் சொல்லப்பட்டது. ஆனால், மேற்கு ஐரோப்பாவில் இவற்றின் வீழ்ச்சி மிகவும் கடுமையானதாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் கூட இவற்றின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில், 1970 களின் பிற்பகுதியில் இவற்றின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டது. ஆனால், தற்போது 68 சதவீத சிட்டுக்குருவிகள் ஒட்டுமொத்தமாக அழிந்துவிட்டன. சில பகுதிகளில் 90 சதவீத சிட்டுக்குருவிகள் அழிந்துவிட்டன. லண்டனில், சிட்டுக்குருவி மத்திய நகரத்திலிருந்து கிட்டத்தட்ட மறைந்தே விட்டது. நெதர்லாந்தில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை 1980-களில் இருந்து பாதியாகக் குறைந்துவிட்டது. சமீபத்திய ஆண்டுகளில், பல ஆசிய நாடுகளில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருக்கிறது. இந்த சரிவு இந்தியாவில் மிகவும் அதிகரித்து இருக்கிறது. இதனால் சிட்டுக்குருவி ஒரு ஆபத்தின் விளிம்பில் இருக்கும் இனமாகக் கருதப்படுகிறது.

அலைபேசிகளில் இருந்து வெளிவரும் மின்காந்தக் கதிர்வீச்சு உட்பட இவற்றின் வியத்தகு குறைவுக்கான பல்வேறு காரணங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. நகர்ப்புற கட்டட வடிவமைப்புகளில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகின்ற கூடு கட்டும் இடங்களின் பற்றாக்குறையும் ஒரு காரணியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேலும், பூனைகள் இருக்கும், பூனைகள் நடமாடும் வீடுகளுக்கு மற்றும் இடங்களுக்கு சிட்டுக்குருவிகள் ஜென்மத்திலும் வராது. எனவே, சிட்டுக்குருவிகள் வீடுகளுக்கு வர வேண்டுமானால் பூனைகள் நடமாட்டம் இருக்கக்கூடாது.

யோகா ஆசிரியர் விஜயகுமார்.

வழக்கறிஞர் சித்ரா மற்றும் அவரது மகள் கீர்த்தனா.

இப்படி ஆபத்தின் விழிம்பில், அழிந்து வரும் அரிய உயிரினங்களின் பட்டியலில் இருந்து வரும் சிட்டுக்குருவிகளுக்கு, திருச்சியை சேர்ந்த யோகா ஆசிரியர் விஜயகுமார், அவரது மனைவி வழக்கறிஞர் சித்ரா, இவர்களது மகள் கீர்த்தனா ஆகியோர், தமது இல்லத்தில் தேங்காய் நாரில் ஆன கூடுகளையும், மண் கலயங்களில் ஆன கூடுகளையும் அமைத்துள்ளனர். இதுபோல் நாமும் முயற்சிக்கலாமே.

டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN July 20, 2020 12:16 pm

Leave a Reply