ரஷ்யாவில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் உடல்களை தமிழகத்திற்குக் கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி. ஆர்.பாலு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
ரஷ்யாவின், வோல்கோகிராட் மருத்துவ பல்கலைக்கழகத்தில், மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த கடலூரைச் சேர்ந்த ஆர்.விக்னேஷ், திருப்பூரைச் சேர்ந்த முகமது ஆசிக், சேலத்தைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த் மற்றும் மருத்துவ படிப்பு படித்த சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன் லிபாகு ஆகியோர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, வோல்கா நதியில் மூழ்கி உயிரிழந்தனர்.
பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க, உயிரிழந்த, தமிழக மருத்துவ மாணவர்களின், உடல்களை, உடனடியாக தமிழகத்திற்குக் கொண்டுவர, ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆணை பிறப்பிக்க வேண்டுமென, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற குழுத் தலைவரும், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
மேலும், டி ஆர். பாலு எழுதிய மற்றுமொரு கடிதத்தில், சென்னை கொளுத்துவஞ்சேரியைச் சேர்ந்த ஆர்.சந்தோஷ் குமார், மலேசியாவில் நுழைவு விசா முடிவுற்ற காரணத்தால், கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தாயகம் திரும்ப ஆவண செய்ய வேண்டுமெனவும் வெளியுறவுத்துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.
தமிழக மருத்துவ மாணவர்களின், உடல்களை, உடனடியாக தமிழகத்திற்குக் கொண்டுவர ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளின் உதவியுடன் ஆவண செய்வதாகவும், ஆர். சந்தோஷ் குமார் மலேசியாவிலிருந்து தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர் பாலுவிடம் உறுதி அளித்துள்ளார்.
-கே.பி.சுகுமார்.
படங்கள்: சதிஸ் சர்மா.
Hearty console to them…… Antha MANAVARGALAI izhanthu thavikkum, petrorukku enathu azhntha anuthabangal…