திருவனந்தபுரம் விமான நிலையத்தின் பராமரிப்பை அதானி குழுமத்திடம் ஒப்படைத்த மத்திய அரசின் முடிவுக்கு ஒத்துழைப்பது கடினம் என, கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. மேலும், திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்துக்கு ஏலத்தில் ஒப்படைத்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி, கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையில், திருவனந்தபுரம் விமான நிலைய தனியார் மயமாக்கல் விவகாரத்தில் கம்யூனிஸ்ட்கள் அதானியை ரகசியமான முறையில் ஆதரிப்பதும், வெளிப்படையாக எதிர்ப்பதும் முரண்பாடாக உள்ளது என, கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கேரள சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நடைப்பெற்றது. திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்தின் பராமரிப்புக்கு 50 ஆண்டுகள் ஏலத்தில் ஒப்படைத்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி கேரள சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அப்போது கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தீர்மானத்தைத் தாக்கல் செய்து பேசியதாவது:
திருவனந்தபுரம் விமான நிலையத்தின் பராமரிப்பை 50 ஆண்டுகள் குத்தகைக்கு அதானி குழுமத்துக்கு மத்திய அரசு ஏலத்தில் வழங்கிய முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும். விமான நிலையத்தில் பெரும்பகுதிப் பங்கு மாநில அரசுக்கு இருப்பதால், அதை அதானி குழுமத்துக்கு வழங்கக் கூடாது. அதானி குழுமம் டெண்டரில் குறிப்பிட்டிருந்த அதே விலையை வழங்க கேரள அரசும் தயாராக இருக்கிறது. ஆனால், திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது.
இவ்வாறு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
இதையடுத்து, கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா பேசுகையில், மாநில அரசு கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தை மாநிலத்தின் நலனுக்காக நாங்கள் ஆதரிக்கிறோம் என்றார்.
விவாதம் முடிந்த நிலையில் பேரவைத் தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன், அரசு கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக அறிவித்தார்.
Goverment-Resolution-as-per-Rule-118
இந்நிலையில், தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே. சுரேந்திரன் தலைமையில், கேரள சட்டப்பேரவை முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது, போராட்டத்தில் ஈடுப்பட்ட அனைவரையும் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.
-எஸ்.சதிஸ் சர்மா.
–UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
ITHIL cash vilaiyadugirathu…..central state irandum adi madaga private idam poittu….