தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான திரு எச்.வசந்தகுமார் அவர்கள் காலமான செய்தி கேட்டு கடும் அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும் ஆளாகியிருக்கிறேன். அருமை நண்பர் வசந்தகுமார் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே பேரிழப்பாகும். பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தின் வழி வந்த அவர் இளமை பருவம் முதல் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக்கொண்டவர்.கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியில் சேர்ந்து, தொழில் நுணுக்கங்களை கற்று வசந்த் அன் கோ என்ற நிறுவனத்தை நிறுவி இன்று 82 கிளைகளுடன் விரிவுபடுத்தி தொழில் செய்து வருகிற ஆற்றல்மிக்கவராக அவர் விளங்கினார். மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தாலும் தமது முழு நேரத்தையும் காங்கிரஸ் இயக்கத்தின் மூலமாக மக்கள் தொண்டாற்றுவதற்காக செலவிட்டவர் திரு வசந்தகுமார்.நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இரு முறையும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றவர். தமக்கு வாக்களித்த மக்களுக்கு கொரோனா தொற்று காலத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் செய்வதற்காக தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர். கொரோனா தொற்று தம்மையும் பாதிக்கும் என்பது குறித்து கடுகளவும் அச்சம் கொள்ளாமல் மக்கள் நலப்பணியில் ஈடுபட்டதன் விளைவாக அதே கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று நம்மிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறார். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு எச்.வசந்தகுமார் அவர்களுடைய மறைவின் மூலம் தமிழக காங்கிரஸின் ஒரு தூண் சாய்ந்து விட்டது. எப்போதும் சிரித்த முகத்துடன் இயக்கப்பணி ஆற்றிவந்த அவர், என் மீது அளவற்ற அன்புகொண்டிருந்த என் உடன்பிறவா சகோதரரை நான் இழந்திருக்கிறேன். நானே மிக கடுமையான துக்கத்தில் இருக்கிறபோது யாருக்கு என்னால் என்ன ஆறுதல் கூறமுடியும்!தமிழக காங்கிரஸின் அப்பழுக்கற்ற முன்னணி தலைவர்களில் ஒருவரான திரு எச்.வசந்தகுமார் அவர்களது மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒரு வாரம் துக்கம் கடைபிடிப்பதோடு, கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்படுவதோடு, கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.மறைந்த திரு எச் வசந்தகுமார் அவர்களின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக நாளை (29.08.2020) சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவன் முகப்பில் வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
– கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரும் , கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான திரு.H.வசந்தகுமார் அவர்கள் உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் என்ற செய்தி மிகவும் வருத்தத்திற்குரியது . தனக்கு கொடுக்கப்பட்ட எந்த பொறுப்பானாலும் அதனை தான் சார்ந்திருக்கின்ற இயக்கத்திற்கும் , தொகுதி மக்களுக்கும் , அதன் வளர்ச்சிக்கும் தொய்வின்றி பணியாற்றிவர்.
மறைந்த திரு.வசந்தகுமார் அவர்கள் கடின உழைப்பாளி , அதன் அடிப்படையில் படிப்படியாக தொழிலதிபராக , சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினராக , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக உயர்ந்தவர் .எல்லோருடனும் அன்போடு பழக்கூடியவர் , பலர் வாழ்வில் முன்னேர உதவிக்கரம் நீட்டியவர், உழைப்பால் உயர்ந்தவர் என்ற சொல்லுக்கு உகந்தவர் . திரு.H.வசந்தகுமார் அவர்களது மறைவு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கும் , அவர் சார்ந்திருக்கும் தொகுதிக்கும் , மிகப் பெரிய இழப்பு . அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் , இயக்கத்தினருக்கும் , தொண்டர்களுக்கும் , தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
-ஜி.கே.வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்.
தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களில் முக்கிய ஒருவராக உயர்ந்து சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று உழைத்த திரு. வசந்தகுமார் அவர்களின் மரணம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாபெரும் இழப்பாகும்.கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று பணிபுரிந்த நிலையில் அவருடைய மரணம் பாராளுமன்ற தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றத்தையும் தந்துள்ளது.காமராஜரின் தொண்டராக, தொழிலதிபராக, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட திரு. ஹெச். வசந்த குமார் அவர்களின் மறைவுக்கு அவரது குடும்பத்தாருக்கும், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆன்மா நற்கதியடைய அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.
-பொன். இராதாகிருஷ்ணன்., முன்னாள் மத்திய அமைச்சர்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபருமான எச்.வசந்தகுமார் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைந்துவிட்டார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் – அகத்தீசுவரத்தில் பிறந்த வசந்த்குமார் தொடக்கத்தில் வி.ஜி.பி. நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணி செய்தார். பின்பு மளிகை கடையைத் தொடங்கி, படிப்படியாக முன்னேறி வசந்த் அண்டு கோ என்னும் பெரிய வணிக நிறுவனத்தின் உரிமையாளராகத் திகழ்ந்தவர். வசந்த் தொலைக்காட்சியை தொடங்கி நடத்தி வந்தார்.
வசந்தகுமார் தமிழ் நாடு காங்கிரசு கட்சியின் செயல் தலைவராகவும், முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் அவர்கள், தற்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக மிகச் சிறப்பாக மக்கள் பணி செய்து வந்தார். உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார் அவர்கள், உறுதியான காங்கிரஸ் தலைவர். தன்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவியவர். இவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கு இழப்பாகும். வசந்தகுமார் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சி தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-வைகோ., பொதுச்செயலாளர்-மறுமலர்ச்சி தி.மு.க.
-கே.பி.சுகுமார், எஸ்.திவ்யா.
HEARTY CONSOLE TO Mr. VASANTHA KUMAR, MP …………