ஜீன் மாதம் 27, 29-ம் தேதிகளில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார். அதில், “வரலாற்று அறிஞர்கள் எதிர்காலத்தில் திரும்பிப் பார்க்கும்போது, கடந்த 6 ஆண்டுகளாக எந்தவிதமான அதிகாரபூர்வ அவசரநிலை பிறப்பிக்கப்படாமல் ஜனநாயகம் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை அறிவார்கள். அதிலும் ஜனநாயகத்தை அழிப்பதில் உச்ச நீதிமன்றத்தின் பங்கு என்ன என்பதையும், அதிலும் குறிப்பாக 4 முன்னாள் தலைமை நீதிபதிகளின் பங்கும் தெரியவரும்” எனக் குறிப்பிட்டார்.
இந்த ட்விட்டர் கருத்துதான் பிரசாந்த் பூஷண் மீது உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முக்கியக் காரணமாகும்.
இதுமட்டுமல்லாமல், ஜீன் மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஹார்லி டேவிட்ஸன் பைக்கில் அமர்ந்தவாறு ஒரு புகைப்படம் எடுத்திருந்தார்.
அதையும் பிரசாந்த் பூஷண் விமர்சித்து, முகக்கவசம், ஹெல்மெட் இல்லாமல் அமர்ந்த தலைமை நீதிபதி என்று விமர்சித்தார்.
மேலும், கரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் வழக்கை உச்ச நீதிமன்றம் கையாண்ட விதத்தையும், விசாரித்ததையும் பிரசாந்த் பூஷண் விமர்சித்தார்.
பிமா கோரிகான் வழக்கில் கைதாகியுள்ள சமூக ஆர்வலர்கள் வரவரா ராவ், சுதா பரத்வாஜ் ஆகியோருக்கு சரியான சிகிச்சை அளிக்காமல் இருப்பதையும், அதை நீதிமன்றம் கண்டிக்காமல் இருப்பதையும் பிரசாந்த் பூஷண் விமர்சித்தார்.
இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.காவே, கிருஷ்ணா முராரே ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ட்விட்டர் இந்தியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்த கருத்தில், “உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால், பிரசாந்த் பூஷண் பதிவிட்ட அந்த சர்ச்சைக்குரிய கருத்தை நீக்கிவிடுகிறோம். ஆனால், அதற்கு முறைப்படியான உத்தரவை அமெரிக்க நிறுவனம் தர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா, இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், அட்டர்னி ஜெனரல் ஆகியோர் ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் அட்டர்னி ஜெனரல் நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
மேலும், வழக்கில் ட்விட்டர் இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அளிக்காமல் அமெரிக்காவின் ட்விட்டர் நிறுவனம் பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், பிரசாந்த் பூஷணை குற்றவாளி என உச்ச நீதிமன்ற அமர்வு அறிவித்தது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷனுக்கான தண்டனை குறித்த வாதங்கள் கடந்த வாரம் துவங்கின. அப்போது, டுவிட்டரில் தெரிவித்த கருத்திற்கு, இரண்டு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க பிரசாந்த் பூஷனுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு அவகாசம் அளித்தது.
அந்த கால அவகாசமும் முடிந்த நிலையில், ஆகஸ்ட் 24-ம் தேதி பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘நான் நம்பும் விஷயங்களை பிரதிபலிக்கும் வகையில் தான் கருத்து தெரிவித்து இருந்தேன். ‘அது குறித்து நிபந்தனைகளோடோ, நிபந்தனைகளற்றோ மன்னிப்பு கோருவது சரியாக இருக்காது. ‘அது என் மனசாட்சிக்கு அவமதிப்பு செய்யும் வகையில் இருக்கும். எனவே, எனக்கு கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றுக் கொள்ள தயார்’ என தெரிவித்திருந்தார்.
இதன்பின், நீதிபதி அருண் மிஸ்ரா கூறியதாவது: தவறுகள் செய்வது சகஜம். ஆனால், அதை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த வழக்கில் தான் செய்த தவறை ஒப்புக் கொள்ள பிரசாந்த் பூஷன் மறுக்கிறார். மன்னிப்பு கேட்பதால் என்ன குறைந்து விட போகிறது? மன்னிப்பு என்பது மோசமான வார்த்தையா? மன்னிப்பு கேட்க மாட்டேன் என சொல்பவரிடம் இனி இதுபோன்று செய்யக் கூடாது என கண்டிப்பதில் அர்த்தமில்லை. வரும், 2-ம் தேதியுடன் நான் ஓய்வுபெறப் போகிறேன். இந்த நேரத்தில் இதுபோன்ற வழக்குகளை விசாரிப்பது வருத்தமாக உள்ளது என கூறியிருந்தார்.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. செப்டம்பர் 15-க்குள் ஒரு ரூபாய் அபராதம் கட்ட தவறினால், 3 மாதம் சிறை மற்றும் 3 ஆண்டு வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
82 பக்கங்கள் அடங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
14323_2020_33_1504_23746_Judgement_31-Aug-2020
யார் இந்த பிரசாந்த் பூசண்?
வழக்கறிஞர் பிரசாந்த் பூசண், பிரசாந்த் சாந்தி பூசணின் மகனாவார். இவர் தில்லிப் புறநகர் நொய்டாவில் வசிக்கிறார். தமது தந்தை சாந்தி பூசணுடன் இணைந்து மக்கள் குறைகேட்பு ஆணையர் சட்ட முன் வரைவினைத் தயாரிப்பதில் இவர் உதவி புரிந்துள்ளார். இந்திய அரசு இந்த சட்ட முன்வரைவினை முன்னெடுத்துச் செல்ல அமைத்துள்ள கூட்டுக்குழுவில் குடிமக்கள் சார்பான ஐந்து உறுப்பினர்களில் இவரும் ஒருவர். தந்தையும் மகனும் கூட்டுக்குழுவில் இடம்பெறுவது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
நீதித்துறைப் பணியின் மூலம் மக்களுக்கு உதவிகள் புரிந்து வருகிறார். அவருடைய 15 ஆண்டு வழக்கறிஞர் பணிக்காலத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளைத் தொடர்ந்துள்ளார். தூய்மையான நீதித்துறை அமைய சீர்திருத்தங்களுக்காகப் போராடி வருகிறார். ஏப்ரல் 2011-ல் “ஜன் லோக்பால் மசோதாவை” வடிவமைக்க அரசு அமைத்த கூட்டுக்குழுவில் இடம் பெற்றுள்ளார்.
அக்டோபர் 12, 2011 அன்று வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் தனது அலுவலக அறையில் தொலைக்காட்சி ஒன்றின் நேர்முகத்திற்காகக் கூடியிருந்தபோது, மூன்று வலதுசாரி அமைப்பைச் சார்ந்த இளைஞர்களால் அடித்து உதைக்கப்பட்டார் என்பது, அவரது பொது வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத துயரச் சம்பவம்.
இப்படிப்பட்ட மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று ஒரு ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்த ஒப்பு கொள்வதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.
‘இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு பின்னர் எனது வழக்கறிஞரும், மூத்த சகாவுமான ராஜீவ் தவான் எனக்கு ஒரு ரூபாய் வழங்கியுள்ளார், அதை நான் நன்றியுடன் ஏற்றுக்கொண்டேன்’ என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
Vaimaiyae vellum….