இலங்கை அருகே கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பலில் திடீர் தீ விபத்து!-பெரிய பேரழிவைப் போராடி தடுத்து வருகின்றனர்.

MOVEMENT-OF-MT-NEW-DIAMOND-SEA-CHART

எம்.டி நியூ டைமன்ட் என்ற கச்சா எண்ணெய் கப்பல் குவைத்தின் மீனா அல் அஹ்மதி துறைமுகத்திலிருந்து இந்தியாவின் பாரதீப் துறைமுகத்திற்கு 270,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை கொண்டு சென்று கொண்டிருந்த போது 2020 செப்டம்பர் 3 அன்று காலை 8 மணியளவில் இலங்கை கிழக்குக் கடல் பகுதியில் தீ விபத்துக்குள்ளாகியது.கப்பலின் பிரதான இயந்திர அறையில் உள்ள ஒரு கொதிகலன் வெடித்து இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் “சங்கமங்கந்த” என்ற இலங்கை கடற்படை கப்பல் அப்பகுதியில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் ரோந்து பணியில் இருந்தது.

இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை மேற்கொண்ட கடுமையான தீயணைப்பு முயற்சியின் விளைவாக, கிட்டத்தட்ட 79 மணி நேரம் போராடி இன்று (06.09.2020) மாலை 3 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சிறப்பு கவனம் செலுத்தி செயல்ப்பட்டதால் ஒரு பெரிய கடல்சார் சுற்றுச்சூழல் பேரழிவைத் தடுக்க முடிந்தது. இதற்கிடையில் இலங்கை விமானப்படை பரிசோதித்த உலர் கெமிக்கல் பவுடர் Dry Chemical Powder (DCP)ரசாயன பைகளை தூவியதால் கப்பலின் தீப்பிழம்புகள் கட்டுப்படுத்தப்பட்டன.

இந்த சூழ்நிலையில், இந்திய கடற்படை மற்றும் பேரழிவு நிவாரண குழுக்கள், தீ விபத்துக்குள்ளான கப்பலுக்குள் ஏறி, உயர் தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தி ஆய்வு செய்ய உள்ளனர். இப்போது, தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டிருந்தாலும்,கப்பலின் உள்ளே இருக்கும் வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்கள் காரணமாக மீண்டும் தீ ஏற்பட வாய்ப்புள்ளதால், இந்நிலைமை குறித்து இலங்கை கடற்படை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இந்த கப்பலின் வணிக மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளுக்கு சொந்தமான நிறுவனத்திலிருந்து மீட்பு நடவடிக்கை நிபுணர்கள், பேரழிவு மதிப்பீட்டாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர் உட்பட 10 பிரிட்டிஷ் மற்றும் நெதர்லாந்து நிபுணர்கள் குழு இன்று காலை இலங்கைக்கு வந்து சேர்ந்தனர். கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து அவர்கள் எதிர்காலத்தில் மதிப்பீடு செய்வார்கள். மேலும், அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் கப்பல் தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது.

பாதிக்கப்பட்ட கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 20 பணியாளர்களுக்கு விபத்துக்குப் பின்னர் முதல் தடவையாக, தங்கள் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தேவையான வசதிகள் வழங்க இலங்கை கடற்படை திட்டமிட்டுள்ளது.

தற்போது இலங்கை கடற்படையின் மூன்று (03) கப்பல்கள், இந்திய கடலோர காவல்படையின் ஐந்து (05) கப்பல்கள், இந்திய கடற்படையின் ஒரு போர்க்கப்பல், ஹம்பாந்தோட்டா சர்வதேச துறைமுகக் குழுவின் (Hambanthota International Port Group) இராவணா மற்றும் வசம்ப டக் படகுகள், பாதிக்கப்பட்டுள்ள கப்பலின் வெளிநாட்டு நிறுவனம் தயாரித்த ALP Winger டக் படகு, ஆழ்கடல் தீயணைப்பு வீரர்கள் கொண்ட டி.டி.டி 1 (TTT One) டக் படகு மற்றும் ஓஷன் பிலிஷ் (Ocean Bliss) டக் படகு இந்த தீயணைப்பு நடவடிக்கைக்கு ஏற்கனவே தீவிரமாக பங்களிப்பு செய்து வருகிறது. மேலும், இலங்கை கடற்படையின் மூன்று (03) துரித தாக்குதல் படகுகள் மற்றும் இலங்கை கடலோர காவல்படைக்கு சொந்தமான இரண்டு (02) கப்பல்கள் இந்த நடவடிக்கைக்கு விநியோக கப்பல்களாக நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஒரு டோர்னியர் விமானம் இன்று மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு பாதிக்கப்பட்ட கப்பல் தற்போது உள்ள கடல் பகுதியை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிபுணர் ஆலோசனைகளின் படி மேற்கொள்ளப்படுகின்ற, இந்த கூட்டு பேரழிவு நிவாரண நடவடிக்கை மூலம் கப்பலின் தீ பரவுவதை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதுடன், இந்த கப்பலில் இருந்து கடலுக்கு எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

என்.வசந்த ராகவன்.

Leave a Reply