நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தொடங்குவாரா?- அவரால் தமிழக அரசியலில் தாக்கு பிடிக்க முடியுமா?- கேள்விக்கு என்ன பதில்?

வாசகரின் கேள்வி:

நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தொடங்குவாரா?-அப்படி தொடங்கினால் அவரால் தமிழக அரசியலில் தாக்கு பிடிக்க முடியுமா?- உங்களிடமிருந்து விரிவான, வெளிப்படையான, உண்மையான பதிலை எதிர்பார்க்கிறேன்.

-ஆர்.எஸ். செல்வம்., வேதாரண்யம்.

ஆசிரியரின் பதில்:

சப்தம் இல்லாமல் தேர்தல் யுத்தத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தயாராகிவிட்டார். அரசியல் கட்சித் தொடங்கும் பணிகள் கிட்டத்தட்ட முழுமையடைந்து விட்ட நிலையில், அறிவிப்பு தேதி மட்டும்தான் பாக்கி.

எப்படி வாழக்கூடாது என்பதற்கும்; இப்படிதான் வாழவேண்டும் என்பதற்கும்’- நடிகர் ரஜினிகாந்த் மிகச் சிறந்த உதாரணம். எளிமை, எதிர்ப்புகளை தாக்குப் பிடிக்கும் சக்தி, சகிப்புத்தன்மை… இவையெல்லாம் ரஜினிகாந்திற்கு புதிதல்ல. ஆனால், சினிமாவில் அவரை ஏற்றுக்கொண்ட தமிழக மக்கள்; அரசியலில், அதுவும் தேர்தலில் ஏற்றுக்கொள்வார்களா?!- என்ற தயக்கம், நமக்கு இருப்பதைப் போலவே, நடிகர் ரஜினிகாந்திற்கும் நிச்சயம் இருக்கும். அதை தமிழக வாக்காளர்களின் விரல் நுனிதான் முடிவு செய்ய வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்திற்கு பதவி ஆசை கடுகளவும் இல்லை. எனவே, கை புண்ணிற்கு கண்ணாடி தேவையில்லை. அவருக்கு பதவிதான் வேண்டும் என்றால், தனியாக அரசியல் கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.”பிரதமர் – முதலமைச்சர்” இந்த இரண்டு பதவிகளை தவிர, வேறு எந்த பதவியை வேண்டுமானாலும், தேர்தலில் போட்டியிடாமலேயே கொல்லைபுறமாக அரசியலில் நுளைந்து, அதிகாரமிக்க, பசையுள்ள பதவிகளை அவர் பெற்றிருக்க முடியும். ஏன், இப்போது நினைத்தாலும் அதை அவரால் பெறமுடியும். ஆனால், அதை அவர் விரும்பவில்லை. ‘சிங்கத்தின் வாலாக இருப்பதைவிட; எறும்புக்கு தலையாக இருப்பதைதான்’- நடிகர் ரஜினி விரும்புகிறார்.

அதே சமயம், நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்றால், அவர் கட்சிக்கு யார் தான் வாக்களிப்பார்கள்?!இதை நடிகர் ரஜினிகாந்த் சிந்திக்க வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் கட்சி தனித்துப் போட்டியிட்டால், தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற இயலாது. ஏனென்றால், திமுக – அஇஅதிமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் இருக்குவரை, வேறு எந்த மாற்றங்களும் தமிழகத்தில் நடக்க வாய்ப்பே இல்லை. திமுக – அஇஅதிமுக  இரு கட்சிகளையும் அசைத்துப் பார்க்கலாமே தவிர, அவ்வளவு எளிதில் யாரும் அழிக்க முடியாது. இதுதான் எதார்த்தமான உண்மை.

எனவே, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் நடத்திய அதிசயத்தை, தமிழகத்தில் யாரும் தனித்து நடத்த இயலாது. அப்படி நினைப்பது, அவளை நினைத்து உரலை இடித்த கதையாகதான் ஆகிவிடும். ஏனென்றால், டெல்லி மக்களின் மனநிலை மற்றும் அரசியல் கலாச்சாரம் வேறு; தமிழ்நாட்டு மக்களின் மனநிலை மற்றும் அரசியல் கலாச்சாரம் வேறு.

தேர்தல் என்று வந்துவிட்டால் அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்கு சில சமரசங்கள் தவிர்க்க முடியாதவை. அதற்கு நடிகர் ரஜினிகாந்த் மனதளவில் தயாரானால்  மட்டுமே, அவரால் அரசியலில் தாக்கு பிடிக்க முடியும்.

ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றாத அரசியல் கட்சிகள், நீண்ட காலம் அரசியலில் ஜொலித்ததாக வரலாறு இல்லை. ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றாமல், எவ்வளவு பெரிய யோக்கியனாக இருந்தாலும், நாட்டில் எந்த மாற்றங்களையும் அவ்வளவு எளிதில் உருவாக்க முடியாது. இதுதான் இன்றைய அரசியல் சூழல்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

வணக்கத்திற்குரிய வாசகர்களுக்கு, ஒரு அன்பான வேண்டுகோள்..!

“கேள்விக்கு என்ன பதில்? “-என்ற தலைப்பில், நமது வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, ஊடகத்துறையில் 34 ஆண்டுகளுக்கு மேல் அனுபம் பெற்ற, நாட்டு மக்களின் நாடித்துடிப்பை நன்கு உணர்ந்த, நமது “உள்ளாட்சித்தகவல்” ஆசிரியர், டாக்டர்.துரைபெஞ்சமின் அவர்கள், வெளிப்படையாகவும், உண்மையாகவும் பதில் அளிக்க இருக்கிறார். எனவே, மக்களின் மனநிலையை பிரதிபளிக்கும் வகையில், கருத்து ஆழமிக்க கேள்விகளை, கீழ்காணும் மின்னஞ்சல் ullatchithagaval@gmail.com (அல்லது) வாட்ஸ் அப் 9842414040 எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு, அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். வாசகர்கள் விரும்பினால் அவர்களின் படத்தையும் வெளியிடத் தயாராக உள்ளோம்.

-UTL MEDIA TEAM.

Leave a Reply