வாசகரின் கேள்வி:
சசிகலா சிறையில் இருந்து முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பிருக்கிறதா?-இதுக் குறித்து பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் உண்மையா?
– சி.குமரேசன், ஆராபாளையம், மதுரை.
ஆசிரியரின் பதில்:
வி. கே. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், தமக்கு தொந்தரவு என்று நினைப்பவர்களும், சசிகலா வெளியே வந்துவிட்டால், அவரை வைத்து பிழைப்பு நடத்தலாம் என்று நப்பாசையில் இருப்பவர்களும், திட்டமிட்டே கொளுத்திப் போட்ட வதந்திதான், சசிகலா முன்கூட்டியே விடுதலை என்ற புரளி.
சிறைவாசிகளின் தண்டனைகள், அவர்களின் நன்னடத்தை காரணமாகக் குறைக்கப்பட்டு, தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்னரே விடுவிக்கப்படுவர். இதனை “தண்டனைக் குறைப்பில் விடுவித்தல் (ரெமிசன் ரிலீஸ் – Remission Release)” என்று சொல்வார்கள். இந்த நடைமுறை கடுங்காவல் தண்டணைப் பெற்ற சிறைவாசிகளுக்கும், 90 நாட்களுக்கு மேற்பட்ட சிறைவாசத் தண்டணைக்கு உள்ளானவர்களுக்கும், சிறப்புச் சலுகையாக அளிக்கப்படுகின்றது.
சிறைவாசத்தின் பொழுது கைதிகள் கடைப்பிடிக்கும் ஒழுக்கமுறைகளையும், தொழில் செயல்பாட்டுத் திறனையும் “இரத்ததானம், தூய்மை” போன்ற சிறை விதிகளுக்குட்பட்ட காரணங்களையும் வைத்துதான் “நன்னடத்தை” நிர்ணயிக்கப்படுகின்றது. தொழில் ஈடுபாடு, நேர்த்தியாக ஆடை அணியும் தன்மை, சிறை நிருவாகத்திற்குத் துணை புரிதல் போன்ற காரணங்களுக்காகச் சிறை கண்காணிப்பாளர், கூடுதல் சிறைத்துறை இயக்குநரின் பரிந்துரையில் விடுவிக்கப்படுகின்றனர்.
மேலும், அரசு கருணை அடிப்படையில் தலைவர்களின் பிறந்த நாளில் அறிவிக்கும் சிறப்பு சலுகையின் படி தண்டனை குறைக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர்.
ஆனால், சிறைத்துறையின் நன்னடத்தை விதிகளுக்கு, தான் தகுதியானவர் இல்லை என்பது வி. கே. சசிகலாவிற்கே நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும், இதுபோன்ற வதந்திகளை செய்திகளாக வெளியில் பரப்புகிறார்கள் என்றால், இதில் ஏதோ மிகப் பெரிய சதியும், உள்நோக்கமும் இருப்பதாகதான் உணர முடிகிறது.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவிற்கு, சிறை விதிகளை மீறி சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும், சிறையில் இருந்து சசிகலா வெளியே சுற்றித்திரிந்த வீடியோ காட்சிகள் குறித்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய, அப்போது சிறைத்துறை டிஐஜி-யாக இருந்த கர்நாடகா மாநிலத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா என்பவரை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்து இருக்க வாய்ப்பில்லை. நேர்மையாக செயல்பட்ட காரணத்திற்காக 20 ஆண்டுகளில், 41 இடங்களுக்கு மேல் இடமாற்றம் என்ற பெயரில் பந்தாடப்பட்டவர். அவரது நேர்மைக்காக குடியரசு தலைவர் பதக்கம் பெருமைப்பட்டுள்ளது. அந்த சிங்க பெண் ரூபா தான் தற்போது கர்நாடக மாநில உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நிலமை இப்படி இருக்கும்போது, வி.கே.சசிகலாவிற்கு எப்படி முன்கூட்டியே விடுதலை கிடைக்கும்?!
சிறை விதிகளை மீறிய குற்றத்திற்காக சசிகலாவிற்கு மீண்டும் தண்டணை கிடைக்கதான் வாய்ப்பிருக்கிறதே தவிர, முன்கூட்டியே விடுதலை ஆக வாய்பில்லை.
ஒரு வேளை தவிர்க்க முடியாத அரசியல் காரணங்களுக்காக, சசிகலா முன் கூட்டிய விடுதலை செய்யப்பட்டால், அதனால் பல தர்ம சங்கடங்களை சசிகலா சந்திக்க நேரிடும்.
1954-ஆண்டு ஆகஸ்ட் 18-ந்தேதி பிறந்த வி.கே.சசிகலாவிற்கு, தற்போது 66 வயது கடந்து விட்டது. அவர் உடல் அளவிலும், மனதளவிலும் மிகப் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார். இதற்கு பிறகு அவர் நேரடியாக தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டமும், தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அனுமதிக்காது. அப்படியானால், அவர் யாருக்காக, எதற்காக அரசியலில் ஈடுப்பட வேண்டும்?!-இதை வி.கே.சசிகலா நிச்சயம் சிந்திப்பார்.
தான் சிறையில் இருந்தாலும் பிரச்சனைதான்; வெளியே வந்தாலும் பிரச்சனைதான் என்பதை வி. கே. சசிகலா நன்றாகவே உணர்ந்திருப்பார். சிறைச் சாலை அனுபவங்கள் சசிகலாவிற்கு நிறைய பாடங்களை நிச்சயம் கற்று கொடுத்திருக்கும்.
இப்போதைக்கு சிறைத்துறையின் நன்னடத்தை விதிகளின்படி, சொத்து குவிப்பு வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட வி. என்.சுதாகரன் மட்டுமே, முன் கூட்டியே சிறையிலிருந்து விடுதலையாக வாய்ப்பிருக்கிறது.
இதை கர்நாடகா மாநில சிறைத்துறை நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
சிறைச்சாலை என்ன செய்யும்?-என்ற தலைப்பில் பேரறிஞர் அண்ணா எழுதிய கவிதை வரிகளை, இங்கு நினைவூட்டுவது மிகப் பொருத்தமாக இருக்குமென்று நம்புகின்றேன்.
இளைஞனாக உள்ளே சென்று,
வயோதிகனான பிறகே,
சிறையினின்றும் வெளியே வந்தவர்கள் எத்தனை பேர்!
திடகாத்திரராகச் சிறை சென்று,
கண்மங்கி, கைகால் இளைத்து நடை தளர்ந்து,
நரையுடன் வெளிவந்தவர்கள் எத்தனைபேர்!
குடும்பத்திலே ஒரு மணிவிளக்காக இருந்துவிட்டு,
சிறையினின்று வெளிவந்தபோது
குடும்பத்தவரிலே ஒருவருமில்லையே என்று
கதறும் நிலை பெற்றவர் எவ்வளவு?
பூங்காவை விட்டுப் போய்ச் சிறையிலே வாடி,
வெளியே வந்து, பாலைவனத்தைக் கண்டு பரிதவித்தவர் எவ்வளவு!
சீமானாக இருந்து சிறை சென்று,
வெளிவந்தபோது, செப்புக் காசுமின்றி,
சென்று தங்க இடமுமின்றி,
நாடோடியானவர்கள் எவ்வளவு!
கருகிப் போன தங்கம்!
கசங்கிய மலர்கள்!
வறண்டு போன வயல்கள்!
சரிந்த சபா மண்டபங்கள்!
மண் மேடான மாளிகைகள்!
நரம்பொடிந்த வீணை!
நதியற்ற நகரம்! என, எண்ணத்தக்க நிலை பெற்ற நற்குண நாகங்கள் நம் வணக்கத்துக்கு உரியரன்றோ!
வாழ்க அவர் நாமம்!.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
வணக்கத்திற்குரிய வாசகர்களுக்கு, ஒரு அன்பான வேண்டுகோள்..!
“கேள்விக்கு என்ன பதில்? “-என்ற தலைப்பில், நமது வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, ஊடகத்துறையில் 34 ஆண்டுகளுக்கு மேல் அனுபம் பெற்ற, நாட்டு மக்களின் நாடித்துடிப்பை நன்கு உணர்ந்த, நமது “உள்ளாட்சித்தகவல்” ஆசிரியர், டாக்டர்.துரைபெஞ்சமின் அவர்கள், வெளிப்படையாகவும், உண்மையாகவும் பதில் அளிக்க இருக்கிறார். எனவே, மக்களின் மனநிலையை பிரதிபளிக்கும் வகையில், கருத்து ஆழமிக்க கேள்விகளை, கீழ்காணும் மின்னஞ்சல் ullatchithagaval@gmail.com (அல்லது) வாட்ஸ் அப் 9842414040 எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு, அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். வாசகர்கள் விரும்பினால் அவர்களின் படத்தையும் வெளியிடத் தயாராக உள்ளோம்.
-UTL MEDIA TEAM.
Good…