வாசகரின் கேள்வி:
“நீதிமன்ற அவமதிப்பு” என்றால் என்ன? நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கை நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகுமா?!
-எல்.ராம்குமார்., சூரமங்கலம், சேலம்.
ஆசிரியரின் பதில்:
இப்போதெல்லாம் வாயை திறந்தாலே ‘வம்பு’ என்ற சூழல் உருவாகியுள்ளது. வர வர சகிப்புத் தன்மை நம் நாட்டில் அனைத்துத் துறைகளிலும் மிகவும் குறைந்து வருகிறது. என்ன செய்வது, உண்மையை சொன்னால் சுடதானே செய்யும்.
சரி, முதலில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையை படிப்போம். அதன் பிறகு “நீதிமன்ற அவமதிப்பு” என்றால் என்ன? என்பது குறித்து, சட்டம் என்னச் சொல்கிறது என்பதை பார்ப்போம்.
தவறான எண்ணமோ, களங்கமோ இல்லாமல் வெளியிடப்படும் செய்திகள் அவமதிப்பு ஆகாது.
ஒருவர் செய்யும் செயல் சட்டத் துறைக்கோ (அல்லது) சட்டத்தை நிர்வகிப்பதற்கோ, இழுக்கு (அல்லது) அவமதிப்பு உண்டாக்குவது போல் இருந்தாலோ (அல்லது) அவற்றை மதிக்காமல், விசாரணை நடக்கும் போது குறுக்கீடு செய்து சாட்சிகளுக்கோ, இதர தொடர்புடைய நபர்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடியதாகவோ (அல்லது) அவர் மீது தவறான எண்ணம் வரும் வகையில் நடந்து கொண்டால் அது அவமதிப்பு எனப்படும்.
The Contempt of Court Act, 1971 ல் தான் நீதிமன்ற அவமதிப்பு பற்றிய பல்வேறு அம்சங்களை பற்றி கூறப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு என்பது உரிமையியல் அவமதிப்பு மற்றும் குற்றவியல் அவமதிப்பு என இரண்டு வகையாக உள்ளது.
உரிமையியல் அவமதிப்பு (Civil Contempt) என்பது, ஒரு நீதிமன்ற தீர்ப்பையோ (judgement), தீர்ப்பாணையையோ (Decree), நீதிமன்ற உத்தரவையோ (Orders), நீதிப்பேராணையையோ (Writ Petition) அல்லது நீதிமன்றத்தின் இதர ஆணைகளையோ தெரிந்தே, வேண்டுமென்றே கீழ்படியாமல் நடந்து கொள்வது (அல்லது) நீதிமன்றத்தில் கொடுத்த உறுதிமொழியை காப்பாற்றாமல் வேண்டுமென்றே மீறுவது ஆகியவை உரிமையியல் அவமதிப்பு என பிரிவு 2(b) கூறுகிறது.
குற்றவியல் அவமதிப்பு (Criminal Contempt) என்பது, வாய் வார்த்தைகள் அல்லது சைகைகள் (அல்லது) எழுத்துக்கள் மூலம் ஒரு நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைப்பது போலவோ (அல்லது) அவமதிப்பது போலவோ எந்தவொரு செயலையும் செய்வது (அல்லது) நீதிமன்ற நடவடிக்கைகளில் குறுக்கீடு செய்வது (அல்லது) அந்த நடவடிக்கைகள் பற்றி தப்பான எண்ணம் வரும் வகையில் செயல்படுவது (அல்லது) வேறு ஏதேனும் வழியில் நீதிமன்ற நடவடிக்கைகளில் குறுக்கீடு செய்வது (அல்லது) தடை செய்வது ஆகியவை குற்றவியல் அவமதிப்பு ஆகும் என பிரிவு 2(c) கூறுகிறது.
மேலே கூறப்பட்டுள்ள வகையில் வந்தாலும், இந்த சட்டத்தின் பிரிவு 3 ன் படி, எந்தவிதமான தவறான எண்ணமோ, களங்கமோ இல்லாமல் வெளியிடப்படும் அத்தகைய செய்திகள் அவமதிப்பு ஆகாது.
அதேபோல் நீதிமன்ற நடவடிக்கைகளை நேர்மையான முறையில் எந்தவிதமான தவறுகளும் இல்லாமல், அப்படியே வெளியிடுவதும் அவமதிப்பு ஆகாது என பிரிவு 4 கூறுகிறது.
சட்டப்பூர்வ நடவடிக்கை பற்றி எந்தவிதமான தவறான எண்ணமும் இல்லாமல் நேர்மையாக விமர்சிப்பது அவமதிப்பு ஆகாது என பிரிவு 5 கூறுகிறது.
நீதிமன்ற தலைமை அதிகாரியை பற்றிய புகார் குறித்து நல்லெண்ணத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கை அவமதிப்பு ஆகாது என பிரிவு 6 கூறுகிறது.
குறிப்பிட்ட சில இனங்கள் தவிர, பொதுவாக நீதிபதியின் அறையிலோ (அல்லது) வெளியாட்கள் அனுமதிக்கப்படாமல் இரகசியமாக நடந்த நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை வெளியிடுவது அவமதிப்பு ஆகாது என பிரிவு 7 கூறுகிறது.
உச்சநீதிமன்றத்திற்கும், மாநில உயர்நீதிமன்றங்களுக்கும் மட்டுமே நீதிமன்ற அவமதிப்புக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் உண்டு.
பிரிவு 12 ன்படி நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்கு 6 மாதங்கள் வரை சாதாரண சிறை தண்டனையோ (அல்லது) ரூ.2000 வரை அபராதமோ (அல்லது) இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும்.
எப்படி இருந்தாலும் அபராதம் விதிப்பது மட்டுமே உரிமையியல் அவமதிப்பு வழக்குகளில் போதுமானதல்ல, சிறை தண்டனையும் தேவை என்று நீதிமன்றம் கருதினால், அவமதிப்பு செய்த நபருக்கு சாதாரண சிறை தண்டனை விதிப்பதற்கு பதிலாக உரிமையியல் சிறையில் 6 மாதங்களுக்கு மிகாமல் நீதிமன்றம் கருதும் காலம்வரை சிறை வைக்க உத்தரவிடலாம்.
வழக்கின் தன்மையை பொருத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் குற்றவாளி, நீதிமன்றம் மனநிறைவு அடையும் வகையில் மன்னிப்பு கேட்டுக் கொண்டால் அந்த நபரை வழக்கிலிருந்து அல்லது விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்தோ விடுவிக்கலாம்.
நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தில் 2006 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அவசர சட்டத் திருத்தத்தின்படி, பிரிவு 13 ல் புதிதாக (b) என்ற உட்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குற்றம் சாட்டப்பட்டவர், அவரால் செய்யப்பட்ட அவமதிப்பு என்பது, உண்மையின் அடிப்படையில் தான் என்ற தற்காப்பு கோர வழி செய்கிறது. குறிப்பிட்ட செய்தி மக்கள் நலனுக்காக தான் வெளியிடப்பட்டது என்பதிலும், குற்றம் சாட்டப்பட்டவரின் தற்காப்பு கோரிக்கை உண்மையானது தான் என்பதிலும், நீதிமன்றம் மனநிறைவு அடைந்தால் அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளலாம்.
எப்படியிருந்தாலும் ஒரு அவமதிப்பு குறிப்பிடத்தக்க அளவுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளில் குறுக்கீடு செய்யக்கூடிய அளவுக்கு உள்ளது என்று நீதிமன்றம் மனநிறைவு அடைந்தால் தவிர, எந்த நீதிமன்றமும் இந்த சட்டத்தின் கீழ் தண்டனை வழங்காது.
பிரிவு 16(1) ன்படி, சட்டத்தில் உள்ள ஷரத்துகளுக்கு உட்பட்டு, ஒரு நீதிபதி, மாஜிஸ்திரேட் (அல்லது) சட்டம் (அல்லது) நீதிபதி சார்ந்த அலுவலர் ஆகியோரும், சட்டத்தில் உள்ள ஷரத்துகள் படி மற்றவர்கள் போல் அவர்களது நீதிமன்றத்தின், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிட்டால், சட்டத்தில் உள்ள ஷரத்துகள் அவர்களுக்கும் பொருந்தும்.
அதேபோல் பிரிவு 16(2) ன்படி, அவர்களது நீதிமன்றத்திற்கு வந்துள்ள, கீழ் நீதிமன்றத்தின் மேல்முறையீடு வழக்கின் போது, அந்த மேல்முறையீட்டின் நீதிபதியாக அவர்கள் பணி செய்யும் போது, கீழ் நீதிமன்ற தீர்ப்பு பற்றிக் கூறும் எந்த வித கருத்துக்களும் நீதிமன்ற அவமதிப்பு ஆகாது.
பிரிவு 20 ன்படி, நீதிமன்ற அவமதிப்பு நடந்ததாக கூறப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் முடிந்து விட்டால் எந்தவொரு நீதிமன்றமும், தானாகவோ (அல்லது) வேறு வகையிலோ அந்த நீதிமன்ற அவமதிப்பு பற்றிய நடவடிக்கையை எடுக்காது.
சட்டத்தின் முன் எல்லோரும் சமம், அனைவருக்கும் சமநீதி கிடைக்க வேண்டும் என்றும், ஏழைகள், எழுத்தறிவு இல்லாதாவர்கள், சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு, தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள இலவச சட்ட உதவி (free legal aid) அளிக்க வேண்டும் என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 39A மூலம் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த நோக்கத்தை நிறைவேற்றி வைக்க இந்திய அரசு தேசிய சட்ட பணிகள் ஆணையத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இதுப்போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் நீதித்துறையும், நீதியரசர்களும் கவனம் செலுத்தினால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அதைவிடுத்து, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மற்றும் நடிகர் சூர்யா போன்றவர்கள் நல்லெண்ணத்தின் அடிப்படையில் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றுவது அவசியம் இல்லாத ஒன்று .
இந்திய சட்ட ஆணையம், அறிக்கை எண் 274, நீதிமன்ற அவமதிப்பு சட்டம், 1971 -ன் ஆய்வு (சட்டத்தின் பிரிவு 2 க்கு வரையறுக்கப்பட்டுள்ளது). இதுக்குறித்த 71 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை, உங்களுக்காகவும், நமது வாசகர்களின் பார்வைக்காகவும் இங்கு பதிவு செய்துள்ளோம்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
வணக்கத்திற்குரிய வாசகர்களுக்கு, ஒரு அன்பான வேண்டுகோள்..!
“கேள்விக்கு என்ன பதில்? “-என்ற தலைப்பில், நமது வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, ஊடகத்துறையில் 34 ஆண்டுகளுக்கு மேல் அனுபம் பெற்ற, நாட்டு மக்களின் நாடித்துடிப்பை நன்கு உணர்ந்த, நமது “உள்ளாட்சித்தகவல்” ஆசிரியர், டாக்டர்.துரைபெஞ்சமின் அவர்கள், வெளிப்படையாகவும், உண்மையாகவும் பதில் அளிக்க இருக்கிறார். எனவே, மக்களின் மனநிலையை பிரதிபளிக்கும் வகையில், கருத்து ஆழமிக்க கேள்விகளை, கீழ்காணும் மின்னஞ்சல் ullatchithagaval@gmail.com (அல்லது) வாட்ஸ் அப் 9842414040 எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு, அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். வாசகர்கள் விரும்பினால் அவர்களின் படத்தையும் வெளியிடத் தயாராக உள்ளோம்.
-UTL MEDIA TEAM.
MIGA sirandha vizhakkaththai, thanthirgal sir…
NANDRI….