மத்திய கலாச்சார அமைச்சகம் அமைத்துள்ள ஆய்வு குழுவில் தமிழக நிபுணர்களையும் நியமிக்க வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.

தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி.

சமீபத்தில், இந்திய கலாசாரத் துறை, 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, இந்திய கலாசாரம், அதன் தோற்றம், பரிணாம வளர்ச்சி, உலகின் பிற கலாசாரங்களுடன், அதன் தொடர்புகள் குறித்து, முழுமையாக ஆய்வு நடத்த, நிபுணர் குழுவை அமைத்துள்ளது. நம் நாட்டின் வளமான மற்றும் வேறுபட்ட கலாசார வேரை அறிவதற்கு, குழு அமைக்கப்பட்டது வரவேற்கத்கக்கது.

ஆனால், குழுவின் அமைப்பு, கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில், அந்த நிபுணர் குழுவில், தென் மாநிலங்களிலிருந்து, குறிப்பாக தமிழகத்திலிருந்து பிரதிநிதிகள் யாரும் இடம் பெறவில்லை. தென்னிந்தியாவில், திராவிட கலாசாரம், மிகவும் பழமையான வாழும் கலாசாரம். சமீபத்தில், கீழடி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் நடந்த அகழாய்வு, தமிழ் கலாசாரம், கி.மு., 6ம் நுாற்றாண்டுக்கு முந்தைய சங்க காலம் என்பதை வெளிக்கொண்டு வந்துள்ளது.

இதிலிருந்து, தமிழ் கலாசாரம் மற்றும் மொழி, உலகிலேயே பழமையான வாழும் பாரம்பரியம் என்பதை அறியலாம். கடந்த ஆண்டு மாமல்லபுரத்தை பார்வையிட்டீர்கள். அங்கு பிரமிக்கவைக்கும், காலம் கடந்த நினைவு சின்னங்கள், தமிழ் பாரம்பரியத்தின் புகழ் பெற்ற மரபு ஆகியவற்றை கவனித்தீர்கள். இதை, நீங்கள் நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும்.

இந்திய வரலாறு மற்றும் கலாசாரத்தில், தமிழ் கலாசாரம் மற்றும் மொழிக்கு, சரியான இடத்தை வழங்காமல், முழுமை அடையாது. கலாசாரத் துறை அமைச்சகம், நிபுணர் குழு அமைக்கும் போது, தமிழக நிபுணர்களை புறக்கணித்தது ஆச்சரியம் அளிக்கிறது. இதில் தலையிட்டு, தமிழகத்தின் சிறந்த அறிஞர்களை, நிபுணர் குழுவில் இடம்பெறச் செய்ய, கலாசாரத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். உடனடி பதிலை எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

-எஸ்.திவ்யா.

Leave a Reply