துயரத்தில் இருக்கும் தொழில் முனைவோர்கள்..!

நாட்டின் வளர்ச்சிக்கும் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கும் முதுகெலும்பாக இருப்பது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. குறைந்த மூலதனத்தில் அதிக வேலைவாய்ப்பு அளிப்பதுதான் இப்பிரிவின் உண்மையான நோக்கமாகும். பெருந்தொழில் நிறுவனங்களைவிட, இந்நிறுவனங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்நிறுவனங்கள் தொழில் முனைவோரின் தனித்திறன் மற்றும் ஆக்கப்பூர்வத்திறனின் வளர்ப்பிடமாக திகழ்கின்றன.

நம் நாட்டின் மொத்த தொழில்களின் பொருளாதார வளர்ச்சியிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய மொத்த உற்பத்தியில் 8 சதவீதமும், உற்பத்தி திறனில் 45 சதவீதமும் மற்றும் ஏற்றுமதியில் 40 சதவீதமும் இந்நிறுவனங்கள் பங்களித்து வந்தன. கடந்த காலங்களில் 2.6 கோடி நிறுவனங்கள் வாயிலாக, 6 கோடி நபர்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளித்து வந்தன.

மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி, தோல் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி, வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி, மருந்து மற்றும் மருந்து பொருட்கள் உற்பத்தி, சூரிய சக்தி பயன்பாட்டு உபகரணங்கள் உற்பத்தி, ஏற்றுமதிக்கான தங்கம் மற்றும் வைர நகைகள் உற்பத்தி, மாசுக்கட்டுப்பாடு உபகரணங்கள் உற்பத்தி, விளையாட்டு பொருட்கள் மற்றும் உபகரணங்கள் உற்பத்தி, சிக்கன கட்டுமான பொருட்கள் உற்பத்தி, ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல், பிளாஸ்டிக் மற்றும் இரப்பர் பொருட்கள் உற்பத்தி… இப்படி பல்வேறு தொழில்களில் கொடிக்கட்டி பறந்து வந்த தொழில் முனைவோர்கள், பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட காலத்தில்கூட தங்கள் இருப்பை தக்க வைத்து கொள்ள போராடி வந்தனர். ஆனால், தற்போது இந்த “கொரோனா வைரஸ்” தடுப்பு பொது முடக்கத்தால் மிகப் பெரிய பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கோடிக் கணக்காண நபர்கள் வேலையிழந்து வாழ வழிதெரியாமல் சுற்றித் திரிகின்றனர்.

இந்நிலையில், ”கொரோனா வைரஸ்” நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக, பிரதமர் நரேந்திர மோதி ரூ. 20 லட்சம் கோடி பொருளாதார தொகுப்பை அறிவித்தார். அந்த பொருளாதார தொகுப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டில் உள்ள பல்வேறு துறைகளுக்கு பகிர்ந்தளிப்பதாக புள்ளி விபரங்களோடு தெரிவித்தார்.

ஆனால், அவற்றின் பயன்கள் நாட்டில் உள்ள அனைவருக்கும் முழுமையாக சென்று அடைந்ததா?! என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தொழில் கடன் மற்றும் தொழில் அபிவிருத்தி கடன் கேட்டு அதற்கான திட்ட அறிக்கை மற்றும் உரிய ஆவணங்களோடு தொழில் முனைவோர்கள் வங்கி அதிகாரிகளை அணுகினால், புழு, பூச்சிகளுக்கு கொடுக்கும் மரியாதையை கூட, தொழில் முனைவோர்களுக்கு வங்கி அதிகாரிகள் கொடுப்பதில்லை. ஆனால், கடன் பெற்று தரும் ஏஜென்டுகள் மூலம் உரிய கமிஷனோடு செல்லும் விண்ணப்பங்களுக்கு மட்டும் தாமதமின்றி தொழில் கடன் வழங்கப்படுகிறது.

இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மோசடி பேர்வழிகள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மானியத்தோடு கடன் பெற்று தருவதாக சொல்லி, அதற்காக முன் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி வருகின்றனர்.

இதுபோன்று போலியாக தொழில் கடன்பெற்று தருவதாக கூறும் மோசடி பேர்வழிகளிடம் விழிப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்குமாறு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனால் எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும்?!-என்று தெரியாமல், நாடு முழுவதும் உள்ள தொழில் முனைவோர்கள் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து நலிவடைந்தால், நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சியடையும், நாட்டில் வேலையில்லா திண்டாட்டமும், சமூக மற்றும் பொருளாதாரக் குற்றங்களும் அதிகரிக்கும்.

எனவே, மத்திய நிதி அமைச்சகமும், பாரத பிரதமர் நரேந்திர மோதியும் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply