யார் இந்த முத்தையா முரளிதரன்?!
பொதுவாக முரளி என்றும் முத்தையா முரளிதரன் என்றும் அழைக்கப்படும் இலங்கையின் மலையகத் தமிழரான இவர், இலங்கைத் துடுப்பாட்ட (கிரிக்கெட்) அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். ஏப்ரல் 17, 1972-ல் கண்டியில் பிறந்த இவர், துடுப்பாட்டப் போட்டிகளில் (கிரிக்கெட்)விளையாடி 800 இலக்குகளை (விக்கெட்டுகளை) வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 2010 ஆம் ஆண்டில் துடுப்பாட்டப் (கிரிக்கெட்) போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஒரு நாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்திலும் (கிரிக்கெட்), தேர்வுத் துடுப்பாட்டத்திலும் அதிக இலக்குகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் துடுப்பாட்ட (கிரிக்கெட்) காட்சியகத்தில் இடம்பிடித்த ஒரே இலங்கைத் துடுப்பாட்ட அணி வீரர் முத்தையா முரளிதரன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 5, 2009 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட (கிரிக்கெட்) அணிக்கு எதிராக விளையாடிய போது, கவுதம் கம்பீரை வீழ்த்திய போது, பாகிஸ்தான் துடுப்பாட்ட (கிரிக்கெட்) அணியின் முன்னாள் வீரரான வசீம் அக்ரமின் சாதனையான ஒரு நாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட (கிரிக்கெட்) போட்டியில் 502 இலக்குகள் எனும் சாதனையை முத்தையா முரளிதரன் முறியடித்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகளைப் பெற்ற ஷேன் வோர்ன் சாதனையை டிசம்பர் 3, 2007 ஆம் ஆண்டில் முத்தையா முரளிதரன் முறியடித்தார்.
சராசரியாக ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆறு இலக்குகளைப் பெற்றுள்ளார். தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் சிறந்த பந்துவீச்சாளர்களின் தரப்பட்டியலில் தேர்வுத் துடுப்பாட்டத்தின் சிறந்த பந்துவீச்சாளராக 1,711 நாட்கள் முதல் இடத்தில் நீடித்தார்.
இவரின் துடுப்பாட்டக் காலங்களில் பல சர்ச்சையான நிகழ்வுகள் நடந்துள்ளன. இவரின் அதிநீட்டம் பந்து வீசும் முறையானது நடுவர்களாலும் (துடுப்பாட்டம்) துடுப்பாட்ட வாரியங்களினாலும் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டன. பின் பல பரிசோதனைகளுக்குப் பிறகு 1996 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் இவரின் பந்து வீச்சு முறை சரியாக உள்ளதாகத் தெரிவித்து விளையாட அனுமதித்தது.
சூலை 18, 2010 ஆம் ஆண்டில் இலங்கை காலியில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் போட்டியின் இறுதி நாளில், தனது ஓய்வினை அறிவித்தார். அந்தப் போட்டியின் போது 8 இலக்குகளை வீழ்த்தினார். பிரக்யான் ஓஜாவினை வீழ்த்திய பிறகு தேர்வுத் துடுப்பாட்டத்தில் 800 இலக்குகளை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார்.
இதற்கிடையில் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் இருந்து 20 நிமிடங்களில் உயிர் தப்பிய முத்தையா முரளிதரன், பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார்.
இலங்கை துடுப்பாட்ட அணியில் விளையாடும் ஒரு சில தமிழர்களில் ஒருவரான முத்தையா முரளிதரன், மார்ச் 21, 2005 அன்று சென்னையைச் சேர்ந்த மதிமலர் ராமமூர்த்தி என்பவரை மணந்தார். இவர் மறைந்த டாக்டர் எஸ்.ராமமூர்த்தி மற்றும் இவரது மனைவி டாக்டர் நித்யா ராமமூர்த்தி ஆகியோரின் மகள் ஆவார்.
இப்படி திறமை வாய்ந்த; பன்முக தன்மைக் கொண்ட; புகழ் பெற்ற ஒரு தமிழனை, உலகம் அறிந்த ஒரு விளையாட்டு வீரனை; முரளி என்கின்ற முத்தையா முரளிதரனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதற்கு பதிலாக, தமிழக மக்களும் மற்றும் தமிழ் திரையுலகத்தினரும் அக்னி வார்த்தைகளால் அபிஷேகம் செய்கிறார்களே அது ஏன்?!
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று 800 படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ள நடிகர் விஜய் சேதுபதியை முத்தையா முரளிதரனாகவே பாவித்து சேற்றை வாரி வீசுவதற்கு என்ன காரணம்?!
ஒரு மனிதன் எவ்வளவு திறமை வாய்ந்தவனாக இருந்தாலும், கொடைத் தன்மை கொண்டவனாக இருந்தாலும், சேர்ந்த இடமும், சகவாசமும் சரியில்லையென்றால் அவமானத்தை நிச்சயம் சந்தித்தே ஆக வேண்டும்.
அந்த வகையில் கடந்த காலங்களில் முத்தையா முரளிதரன் தனது தனிப்பட்ட சுயநலத்திற்காகவும், தன் வளர்ச்சிக்காகவும், தனது சிந்தனையாலும்; சொல்லாலும்; செயலாலும்; தன் கடமைகள் தவறியதாலும், தமிழ் இனத்திற்கும், மொழிக்கும் மிகப் பெரிய துரோகத்தை இழைத்துள்ளார். அது ஈழத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல; உலகமெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரின் மனதிலும் ஆறாத ரணமாக இன்று வரை இருந்து வருகிறது.
அவற்றின் விளைவுதான் விஜய் சேதுபதி என்கிற முத்தையா முரளிதரன் என்ற நடிகன் மீது கீழ்காணும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இதற்கு ஒரே ஒரு பரிகாரம் மட்டும்தான் உள்ளது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று 800 திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரனின் விளையாட்டு திறமைகள் மற்றும் அவரது பெருமைகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் நடிப்பதைப்போலவே, தமிழ் இனத்திற்கும், மொழிக்கும் அவர் இழைத்த துரோகங்களையும், ஈழத்தமிழர்கள் மரணத்தில் அவர் அடைந்த மகிழ்சியையும் உள்ளது உள்ளப்படி காட்சிப்படுத்துவதற்கு இப்படத்தின் இயக்குநரையும், படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடிகர் விஜய் சேதுபதி வற்புறுத்துவாரா? அதை அவர்களும், முத்தையா முரளிதரனும் ஏற்றுக்கொள்வார்களா?
வாழ்க்கை வரலாறு படம் என்றால் உண்மையைதானே சொல்ல வேண்டும்?! முழு உண்மையையும் சொன்னால் யாரும் எதிர்க்கமாட்டார்கள். அவரவருக்கு தேவையான மற்றும் தோதான விசியங்களை மட்டும் சொல்ல முயற்சிக்கும்போதுதான், இதுப்போன்ற விரும்பதகாத விமர்சனங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில்!-நடிகர் விஜய்சேதுபதிக்கு, கவிஞர் தாமரையின் காட்டமான கடிதம்.
விஜய்சேதுபதி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக உங்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு செய்தி சொல்லிவிட வேண்டுமென்று காத்திருக்கிறேன்.
முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் நீங்கள் நடிக்க இருப்பதன் தொடர்பான பின்வினைச் செய்திகளை இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த அளவுக்கு அது வளருமுன்பாகவே உங்களை எச்சரித்து விட வேண்டுமென்றுதான் விரும்பினேன்.
முரளிதரன் வெறும் கிரிக்கெட் வீரர், சாதனையாளர் என்றால் அதில் நீங்கள் நடிப்பதை யாரும் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர் இலங்கையிலிருந்து இலங்கை அணிக்காக விளையாடி வந்தது கூட, தமிழர்களால் நடுநிலையாகவே பார்க்கப் பட்டுவந்தது. ஆரம்ப காலத்தில் அது விமர்சனத்துக்குள்ளான போது, புலிகள் கோலோச்சிய காலத்தில், தேசியத்தலைவர் ”அவர் விளையாட்டுக்கு எந்த ஊறும் விளைவிக்க வேண்டாம், நம் பிள்ளை ஒருவர் விளையாடுகிறார் என்றே கொள்வோம்” என்று பெருந்தன்மையோடு கூறியதால் சர்ச்சை முற்றுப் பெற்று முரளிதரன் தொடர்ந்து விளையாட முடிந்தது. அன்று தலைவர் நினைத்திருந்தால், அன்றே முரளிதரனின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும்.
முரளிதரன் சிங்களவர்க்கிடையே ஒற்றைத் தமிழராக இருந்தது கூட பெரும் நெருக்கடியாக இருந்திருக்கலாம். தன் வாழ்விருப்பிற்காக அவர் சிங்களராகவே மாறியிருந்ததைக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால், அவர் அந்த இடத்தில் நிற்கவில்லையே ஐயகோ!
சிங்களராக மாறியதோடல்லாமல் சிங்கள அரசியல்வாதியாகவும் மாறினார். தமிழ்மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றுபோட்ட ராசபக்சேக்களின் ஒலிபெருக்கியாக அவதாரமெடுத்தார். தமிழரின் இரத்த ஆறு முள்ளிவாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடியபோது, ‘இந்தநாள் இனியநாள்’ என்று அறிக்கை விட்டு விருந்துக் கூத்தாடினார்…. காணாமல் போன தம்வீட்டுப் பிள்ளைகளைத் தேடித் தலைவிரி கோலமாகத் தமிழ்த் தாய்மார்கள் கதறியதை, ‘நாடகம்’ என்று வர்ணித்தார். இனப்படுகொலையை மறைக்க இலங்கை அரசு போடும் நாடகத்தில் இவர் பங்கேற்று வேடம் கட்டியிருப்பதை, தொழில்முறை நடிகனான உங்களால் எப்படி இனம் கண்டு கொள்ள முடியாமல் போனது மக்கள் செல்வனே???. அப்படியென்றால், அவர் உங்களைவிடத் திறமையான நடிகர் என்றுதானே பொருள்!?
ஆக, உங்கள் வாழ்க்கையைப் படமெடுத்தால் முரளிதரனை நடிக்கச் சொல்லலாம் என்பதுதானே சரியாக இருக்கும்?!
வரலாறு பலகதைகள் சொல்லும் வி.சே அவர்களே !. அது தன்பாட்டுக்கு எழுதிப் போகும்…. எட்டப்பன் ஒரேயொரு குட்டிவேலைதான் செய்தான், இன்றளவும் ‘எட்டப்பன்’ என்கிற பெயர் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது என்று தெரியுமல்லவா?உங்கள் பெயர் அப்படியொன்றாக மாறிவிடக் கூடாது என்பதில் உங்கள் மேல் அன்பும் அக்கறையும் கொண்ட எங்களுக்கு பதைபதைப்பு இருக்காதா?
நானொரு சாதாரண பாடலாசிரியர். ஆனால் திரையுலகில் தமிழை உயர்த்திப் பிடிப்பதற்காகவே ஓடாத ஓட்டம் ஓடிக் கொண்டிருப்பவள், எத்தனையோ பாடல்களை மறுத்தவள், அதனால் எத்தனையோ நட்டங்களைச் சந்தித்தவள் !
என்னது…நட்டமென்றா சொன்னேன்??! மற்றவர்களின் அளவுகோலுக்குப் புரிவதற்காக அப்படிச் சொன்னேன். என் மொழிக்காக நான் ஓடுகிறேன், என் மக்களுக்காக நான் வதைபடுகிறேன், என் இனம் உயர்வதற்காக நான் வறுபடுகிறேன், இதில் நட்டமென்ன வந்தது நட்டம்?? ஒரு தமிழ்ப்பெண் தன் ‘பங்களிப்பாக’ இதைச் செய்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், நட்டமல்ல, பங்களிப்பு என்பதே பொருத்தமான சொல்!.
நாமென்ன போர்முனையில் துப்பாக்கி தூக்கிக் கொண்டு ரத்தமும் குண்டு சிதறலுமாக அலைந்தோமா?
போராட்டங்களில் முன்வரிசையில் நின்று மண்டையடி வாங்கினோமா?
அண்ணனைக் காணோம் அக்காவைக் காணோம் அம்மாவை சாகக் கொடுத்தோம் என்று பைத்தியமாக தெருக்களில் அலைந்தோமா?? இசைப்பிரியாக்களின் ஒரு துண்டுத் துணியாகவாவது இருந்திருப்போமா? இல்லை அங்கு காயம் பட்டுக் கதறிய எம்குலக் குழந்தைகளுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தோமா?
ஒரு பாடலை எழுத மறுக்கிறோம், ஒரு படத்தில் நடிக்க மறுக்கிறோம் அவ்வளவுதானே? என்ன ‘நட்டம்’?
நமக்குத் தெரிந்தவகையில் ‘பங்களி’க்கிறோம், அவ்வளவுதானே??
நான் மறைந்தாலும் வரலாறு என்னை, தலைநிமிர்ந்த தமிழச்சியாகவே கொண்டாடும், நீங்கள் மறைந்தாலும் தமிழனுக்காக தடுத்தாடிய வீரனாகவே மகுடம் சூடும்.
தமிழர்களாகப் பிறந்து விட்டு, இந்தத் தன்மானம்கூட இல்லையென்றால் அப்புறமென்ன நமக்கு அகம்,புறம், அடுப்படி, மூன்றுவேளை சோறு ????
தமிழன் தாழ்ந்திருக்கும் காலம் இது! காலக்கோளாறு இது!தமிழன் தாழலாம்; ஆனால் வீழக்கூடாது.
வீழ்த்த முனைபவர்கள் பலவேடமிட்டு வரத்தான் செய்வார்கள், ஏமாந்து விடக்கூடாது. நம் கையை எடுத்து நம் கண்ணையே குத்துவார்கள், தூங்கிவிடக் கூடாது.
முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில்! அதை நாம்தான் துப்ப வேண்டும். அது நம்மை நனைத்து விடக்கூடாது!.
மக்கள் செல்வன் விஜயசேதுபதி அவர்களே, நல்ல முடிவாக எடுங்கள்.
என்ன ஆகிவிடும் என்று பார்க்கலாம் ! உலகத்தமிழர் நம்பக்கம் இருக்கிறார்கள்.
பி.கு : சிறந்த நடிப்புக் கலைஞரான உங்களுடைய தோற்றப் பொருத்தம் இன்னொருவருக்கானது !. அதை ஏற்று நடியுங்கள், வரலாறு உங்களை என்னவாக எழுதுகிறது என்று பார்ப்போம் !
தேசியத் தலைவர் மாவீரன் பிரபாகரன் வாழ்க்கை படமாகும் நாள் தொலைவிலில்லை! படம் வெளியிட்டிருக்கிறேன், கண்ணாடி முன்நின்று ஆயத்தப்படுத்திக்கொள்ளுங்கள்!
இவ்வாறு கவிஞர் தாமரை, நடிகர் விஜய்சேதுபதிக்கு தெரிவித்துள்ளார்.
-கே.பி சுகுமார்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
Sarithiram solvathai, Actor sethupathi purinthu kondu, padaththai Kai Vida vendum…..