இந்திரா காந்தி காலில் கலைஞர் மு.கருணாநிதி விழுந்ததாக அவதூறு பரப்பிய அதிமுக பேச்சாளர் கோவை சத்யனுக்கும், புதியதலைமுறை தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும், திமுக சார்பில் நோட்டிஸ்.

அதிமுக பேச்சாளர் கோவை சத்யன்.

அக்டோபர் 19-ம் தேதி புதியதலைமுறை தொலைக்காட்சியில் நடைபெற்ற ‘நேர்பட பேசு’ என்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக பேச்சாளர் கோவை சத்யன் என்பவர், ‘மு.கருணாநிதி இந்திரா காந்தி காலில் விழுந்து வணங்குகிறார் என’ சமூக வலைதளத்தில் பரவிய வீடியோவை ஒன்றைக் காண்பித்து பேசினார்.

கோவை சத்யன் வீடியோவைக் காண்பித்து கூறிய குற்றச்சாட்டை, திமுக சார்பில் கலந்து கொண்ட பேராசிரியர்.கான்ஸ்டன்டைன் வன்மையாக மறுத்தார். மேலும், புதியதலைமுறை தொலைக்காட்சி நெறியாளர் ச.கார்த்திகைச்செல்வன் அந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்கிற தகவலை வழங்குமாறு கேட்ட போது, கோவை சத்யன் அதற்கான தகவலை அளிக்கவில்லை.

மேலும், கோவை சத்யன் காண்பித்த அந்த வீடியோவில் கலைஞர் மு.கருணாநிதி வயதான பெண்மணி ஒருவருக்கு மாலை அணிவித்து அவர் காலில் விழுந்து வணங்குகிறார். வெறும் 3 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவில் கலைஞர் மு.கருணாநிதி காலில் விழுந்து வணங்குபவரின் உயரம், உருவத்தோற்றம் போன்றவை, இந்திரா காந்தியைப் போல் இல்லை. கலைஞர் மு.கருணாநிதியை விட உயரம் குறைவானவராக அந்த வயதான பெண்மணி தோற்றமளிக்கிறார்.

1987-ம் ஆண்டு சென்னை அறிவாலயத் திறப்பு விழாவில் பேரறிஞர் அண்ணாவின் மனைவி ராணி கலந்து கொண்ட போது, அவரிடம் கலைஞர் மு.கருணாநிதி ஆசீர்வாதம் வாங்கிய காட்சி என திமுகவினர் கூறுகின்றனர்.

இந்திரா காந்தி அம்மையார் அறிவாலயம் திறப்பு விழாவிற்கு முன்பாகவே அதாவது 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் நாள் காலை 09:20 மணியளவில், புது தில்லி, சப்தர்ஜங் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் சத்வந்த் சிங், பீண்ட் சிங் என்ற அவரது இரு பாதுகாவலர்களால் இந்திரா காந்தி அம்மையார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், சென்னை அறிவாலயத் திறப்பு விழா 16-09-1987 அன்று நடைப்பெற்றது.

அண்ணா அறிவாலயம் திறப்பு விழாவின்போது பேரறிஞர் அண்ணாவின் மனைவி ராணியம்மையார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சோனியா காந்தியும் வருகை தந்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் பேசிய கலைஞர் மு.கருணாநிதி, ”அண்ணன் நமக்குப் பலமான அடித்தளம் அமைத்து தந்திருக்கிற காரணத்தினால்தான் எதிர்ப்புக் கணைகளை முறியடித்து கழகம் வானளாவ உயர்ந்து நிற்கிறது. கழக உடன்பிறப்புகளின் உழைப்பும், தியாகமும்தான் இங்கு அண்ணா அறிவாலயமாக அழகுற மிளிர்கிறது” இதைக் கண்டு நெகிழ்ந்துபோய் நிற்கிறேன்; மகிழ்ந்துபோய் நிற்கிறேன். என்றாலும், அண்ணன் இல்லை. அந்த அண்ணனுக்காக… அந்த அண்ணன் பெயரால் ஓர் அறிவாலயம் காணுகிற இந்த நிகழ்ச்சியில், நம்முடைய அண்ணியார் அவர்கள் வருகை தந்து எங்களுடைய முயற்சியை வாழ்த்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்” என்று கலைஞர் மு.கருணாநிதி கூறினார்.

ஆக, கோவை சத்யன் சொல்வதைப்போல கலைஞர் மு.கருணாநிதி, இந்திரா காந்தி அம்மையார் காலில் விழுந்து வணங்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இந்நிலையில், கலைஞர் மு.கருணாநிதி குறித்து அவதூறு பரப்பி, அவரது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தியதாக, அதிமுக பேச்சாளர் கோவை சத்யனுக்கும். புதியதலைமுறை தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும், திமுக சார்பில் வழக்கறிஞர் ஜே.ரவீந்தரன் என்பவர் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

உலகம் முழுவதும் ஒளிப்பரப்பாகும் வெகுஜன ஊடகங்களில் பேசும் கோவை சத்யன் போன்ற நபர்கள், ஒரு செய்தியைச் சொல்வதற்கு முன்பு, அவற்றின் உண்மைத் தன்மையை நன்கு தெரிந்துக் கொண்டு பேச வேண்டும். இல்லையென்றால், பொதுவெளியில் அவமானத்தைச் சந்திக்க நேரிடும். இது அவருக்குமட்டுமல்ல; அவர் பேசிய ஊடகத் தலைமைக்கும், அவர் சார்ந்திருக்கும் கட்சித் தலைமைக்கும் தர்ம சங்கடத்தை உருவாக்கும்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply