சுங்கச்சாவடி ஊழியரைத் தாக்கிய பெண் அரசியல்வாதி!-ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.

ஆந்திரா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் தேவல்லா ரேவதி.

ஆந்திராவில் ஜெகன்மோகன்ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் தேவல்லா ரேவதி.

ஆந்திர மாநிலம் ஜெகன்மோகன்ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் குண்டூர் பகுதி பிரமுகர் தேவல்லா ரேவதி. இவர் தனது தயாரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக குண்டூரில் இருந்து விஜயவாடாவிற்கு நேற்று AP 39 AA 5678 என்ற ஸ்கார்பியோ காரில் சென்றார். காஜா அருகே உள்ள சுங்கச் சாவடியில் இவரின் காருக்கு சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என, அங்கிருந்த ஊழியர்கள் அவர் காருக்கு முன் தடுப்புகளை குறுக்கேப் போட்டு அவரது காரை முன்நோக்கி செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர்.

இதனால் கோபம் அடைந்த தேவல்லா ரேவதி, நான் அவசரமாக செல்ல வேண்டும் தடுப்புகளை அகற்றுங்கள் என்று சுங்கச் சாவடி ஊழியர்களிடம் கூறினார். இவரது பேச்சை அங்கிருந்த ஊழியர்கள் யாரும் கேட்கவில்லை. இதனால் சுங்கச் சாவடி ஊழியர்களுக்கும், தேவல்லா ரேவதிக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து காரில் இருந்து கீழே இறங்கிய தேவல்லா ரேவதி, தன் காருக்கு முன் இருந்த இரும்புத் தடுப்புகளை தானே அகற்றியதுடன், அதைத் தடுக்க முயன்ற ஆண் ஊழியர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதோடு, ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டிக்கு அரசியல் ரீதியாக தர்மச் சங்கடத்தையும் உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள தேவல்லா ரேவதி, எனது தயாரை விஜயவாடாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். என்னிடம் உள்ளூர் பதிவு அட்டை மற்றும் இலவச பாஸ் உள்ளது. அவசரநிலை என்பதால் எனக்கு விலக்கு அளிக்குமாறு டோல் பிளாசா ஊழியர்களிடம் நான் கேட்டேன் அவ்வளவுதான். நான் கட்டணம் செலுத்தவில்லை என்று எனக்கு எதிரான பிரச்சாரம் செய்யப்படுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவசரகால வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறுகிறது. மேலும், இதில் உண்மையான சம்பவம் மறைக்கப்பட்டுள்ளது, ஐந்து வினாடி கிளிப்பிங் மட்டும் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்படுகிறது என்று கூறி உள்ளார்.

ஆயிரம்தான் இருந்தாலும் சுங்கச் சாவடி ஊழியரை தேவல்லா ரேவதி கை நீட்டி அடித்தது தவறு! பதிலுக்கு அந்த சுங்கச் சாவடி ஊழியரும் திருப்பி அடித்திருந்தால் உங்கள் நிலமை என்ன ஆகியிருக்கும்?! சற்று மனச்சாட்சியோடு யோசித்துப் பாருங்கள்.

தேவல்லா ரேவதி, ஹைதராபாத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சட்டக் கல்லூரியில் (எல்.எல்.பி.) சட்டம் பயின்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சுங்கச் சாவடியில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் அரசு முறையானப் பயிற்சி அளிக்க வேண்டும்; வாகனத்தில் வரும் நபர்கள் கூறும் விபரங்களை காதுக்கொடுத்து கேட்க வேண்டும்; வாகனத்தில் வருபவர்களிடம் எக்காரணத்தைக் கொண்டும் வாக்கு வாதத்தில் ஈடுப்படுவதைத் தவிர்க்க வேண்டும்; சுங்கக் கட்டணம் செலுத்த மறுப்பவர்களின் வாகன எண்ணை பதிவு செய்து காவல்துறை மூலமாகவோ (அல்லது) நீதித்துறை மூலமாகவோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதை விட்டுவிட்டு சாலையில் நின்றுக்கொண்டு இப்படி இருத்தரப்பும் பிடிவாதமாக குடுமிப் பிடி சண்டையில் ஈடுப்படுவது சட்டம்- ஒழுங்கு பிரச்சனைகளைதான் உருவாக்கும்.

எது எப்படியோ நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடியால் நாள்தோறும் இதுப்போன்ற விரும்பத் தகாதச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு என்றுதான் விடிவு காலம் பிறக்குமோ?!காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில், யார் யாருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்திருக்கிறது என்ற விபரத்தை, நம் வாசகர்களின் பார்வைக்காகாக இங்கு பதிவுச் செய்துள்ளோம்.

toll

குடியரசுத்தலைவர், துணைக்குடியரசுத்தலைவர், தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பிரதமர், மக்களவை சபாநாயகர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள்,
மாநில அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், முப்படை தளபதிகள், சட்டப்பேரவை சபாநாயகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராணுவ கமாண்டர், தலைமைச் செயலாளர்கள், மத்திய துறைச் செயலாளர்கள், மக்களவை & சட்டசபை செயலாளர்கள்,
இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு தலைவர்கள்,
சட்டமன்ற மேலவை & சட்டப்பேரவை உறுப்பினர்கள், பரம் வீர் சக்ரா, அசோக் சக்ரா, மஹா வீர் சக்ரா, கீர்தி சக்ரா, வீர் சக்ரா விருது வென்றவர்கள் (அடையாள அட்டை அவசியம்)
பாரா மிலிட்டரி படைகள், மாஜிஸ்திரேட், தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய பணி வாகனம், சடலங்களை எடுத்துச் செல்லும் வாகனம்,
மாற்றுத்திறனாளிகளுக்கான வடிவமைக்கப்பட்ட வாகனம்.

இவர்களை தவிர கார், வேன் உள்பட இலகுரக மற்றும் கனரக வாகனங்களில் செல்லும் அனைவரும் அவசியம் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்த பட்டியலில் அச்சு மற்றும் காட்சி ஊடகத்துறையில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு கூட இந்த சலுகை வழங்கப்படவில்லை என்பது உண்மையிலுமே வருந்தத்தக்கது.

மத்திய அரசு இந்த முடிவை மறு பரிசீலனை செய்யுமா?-பொறுத்திருந்துப் பார்ப்போம்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply