மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினரும், அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழுவின் தேசிய தலைவருமான பூபிந்தர் சிங் மான், வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இது தொடர்பாக பூபிந்தர் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகள் போராட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவும், மத்திய அரசும் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண அமைத்த நிபுணர் குழுவில் என்னை நியமித்ததற்கு உச்ச நீதிமன்றத்திற்கு நான் நன்றி கூறுகிறேன்.
வேளாண் சட்டங்கள் குறித்து விவாசய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலவும் அச்ச உணர்வை கருத்தில் கொண்டு, ஒரு விவசாயி மற்றும் விவசாய சங்கத் தலைவர் என்ற முறையில், பஞ்சாப் மற்றும் இந்திய விவசாய பெருமக்களின் நலன்களைப் பாதுகாக்க எந்தவொரு பதவியையும் நான் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன்; உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். விவசாயிகள் மற்றும் பஞ்சாப் மாநில மக்களுடன் என்றும் துணை நிற்பேன்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் பூபிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த திடீர் குழப்பத்திற்கு என்ன காரணம்?!
பஞ்சாபின் படாலா மாவட்டத்தில் வசிக்கும் பூபிந்தர் சிங் 1990 முதல் 1996 வரை மாநிலங்களவையில் சுயாதீன உறுப்பினராக இருந்தார். 2012, 2017-களில் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்களிலும், 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடை வெளிபடுத்தினார்.
இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் பூபிந்தர் சிங் ஆதரித்தார்.
பூபிந்தர் சிங் மகன் 2018-ம் ஆண்டு முதல் பஞ்சாப் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். மேலும், முதல்வர் அமரீந்தர் ஆட்சியின் போது பஞ்சாப் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய உறுப்பினராகவும் சில காலங்கள் செயல்பட்டு வந்தார்.
தொடக்கத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் ஆதரித்த பூபிந்தர் சிங், விவசாயிகளும் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளும் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டதையடுத்து, வேறு வழியின்றி பூபிந்தர் சிங் களமிறங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில், கடந்த (மாதம்) டிசம்பர் 14-ந்தேதி திருத்தங்களுடன் புதிய வேளாண் சட்டங்களை ஏற்றுக்கொள்வதாக, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு, அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பூபிந்தர் சிங், தனது சங்க லெட்டர் பேடில் இந்தியில் 2 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். அதில் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேட்டவலம் மணிகண்டன் உள்பட 5 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
அக்கடிதத்தின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
இப்படி புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த மற்றும் ஆதரவான நபர்கள்தான் உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவில் இடம்பெற்று உள்ளனர். இவர்களால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் நடக்காது. அதனால்தான் வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவில் உள்ள அனைவரையும் மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், வேறு வழியின்றி உச்சநீதிமன்ற நிபுணர் குழுவில் இருந்து அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பூபிந்தர் சிங் விலகியுள்ளார்.
உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவில் இருந்து பூபிந்தர் சிங் விலகியுள்ள நிலையில், மற்ற மூவரையும் மாற்ற வேண்டும் என, விவசாயிகள் தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
எது எப்படியோ, விவசாய சங்க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்குள் ஒற்றுமை இல்லை; மேலும், விவசாயிகள் போராட்டத்தில் அரசியல் நுளைந்துவிட்டது என்பதை அப்பட்டமாக உணர முடிகிறது.
இவ்விவகாரத்தில், அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
இதுத் தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.