சேற்றில் மலர்ந்தாலும் சேறுபடாமல் தன்னைக் காத்துக்கொள்ளும் தாமரையைப்போல் வாழ்ந்து வருகிறேன்! -விகடன் குழுமத்தை வெளுத்து வாங்கிய தமிழருவி மணியன்!-மீண்டும் அரசியலில் களமிறங்க தயாராகி வருகிறார்.

தமிழருவி மணியன்.

அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை; என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்!-என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தப் பிறகு, விரக்தியின் விளிம்பிற்கே சென்ற தமிழருவி மணியன், மாணிக்கத்துக்கும் கூழாங்கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. என் நேர்மையும், தூய்மையும், வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்படாத அரசியல் களத்திலிருந்து முற்றாக நான் விலகி நிற்பதே விவேகமானது. எந்தக் கைமாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோத்த காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடைபெற்றுக்கொள்கிறேன். இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்துவைக்க மாட்டேன்!- நான் போகிறேன்; இனி வர மாட்டேன் என, கீழ்காணும் அறிக்கையை தமிழருவி மணியன் வெளியிட்டார்.

இந்நிலையில், தமிழருவி மணியன் குறித்து ஜீனியர் விகடனில் வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, கழுகார் பகுதியில் வெளிவந்த பதில், தமிழருவி மணியனை ரொம்பவும் காயப்படுத்தியது. வேறு ஏதாவது ஊடகங்கள் இதுபோன்று வெளியிட்டால் கூட, பொறுத்துக் கொள்ளலாம்; ஆனால், என்னைப் பற்றி முழுமையாக தெரிந்த விகடன் குழுமமே இப்படி வெளியிடலாமா?! என்று கொந்தளித்த தமிழருவி மணியன், கீழ்காணும் அறிக்கையின் மூலம் விகடன் குழுமத்தை வெளுத்து வாங்கினார்.

தமிழருவி மணியன் அரசியலில் ஈடுபட்டு இதுவரை என்ன செய்தார்? என்பது ஒரு வாசகரின் விவரமறியாத விடலைக் கேள்வி. கடந்த கால அரசியல் வரலாற்றை ஒரு பருந்துப் பார்வையில்கூடப் பார்க்கத் தெரியாத கழுகார் ‘ இதே கேள்வி அவருக்கும் எழுந்ததாலோ என்னமோ போகிறேன்.. வரமாட்டேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்’என்று எள்ளல் தன்மையோடு பதில் அளித்திருக்கிறார்.

ஐம்பதாண்டுகளுக்கு மேல் சில மேலான இலட்சியங்களுக்காக ஒரு முழு வாழ்க்கையையும் வீணாக்கிவிட்டவனின் வலி கழுகறிய வாய்ப்பில்லை. வானத்தில் வட்டமிட்டாலும் கழுகின் பார்வை மண்ணில் கிடக்கும் அழுகிப்போன மாமிசத்தின் மீதுதான் படிந்து கிடக்கும்.

ஐம்பதாண்டுகளுக்கு மேல் அரசியலில் தமிழருவி மணியன் என்ன செய்தான்? கல்லூரிப் பருவத்திலேயே படிப்பில் சிந்தை செலுத்தாமல் இந்தி எதிர்ப்பு வேள்வியில் மிகத் தீவிரமாகக் களமாடியவன் தமிழருவி மணியன். இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தபோது இளம் பருவத்தில் மாநிலம் முழுவதும் ஒற்றை மனிதனாக நெருக்கடி காலக் கொடுமைகளை எதிர்த்து நான்கு சுவர்களுக்கு நடுவில் எந்த அச்சமுமின்றி நாக்கு யாகம் நடத்தியவன் தமிழருவி மணியன்.

ஜனநாயகம் பெற்றுத் தந்த அடிப்படை உரிமைகள் அனைத்தையும் 42 வது சட்ட திருத்தத்தின் மூலம் இந்திராகாந்தி பறித்தெடுத்தபோது அதை எதிர்க்க அனைவரும் தயங்கிய நிலையில் , ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ என்று ஆண்மையுடன் கருத்தரங்கத் தலைமையேற்று மிகக் கடுமையாகப் போர்க்குரல் கொடுத்தவன் தமிழருவி மணியன். அப்போது கேள்வி கேட்ட வாசகரும், நையாண்டி செய்த கழுகாரும் பிறந்திருக்க வாய்ப்பில்லை.

அண்ணாவின் மறைவுக்குப் பின்பு சுயநலத்தில் சுருங்கி, பொதுவாழ்க்கைப் பண்பு நலன்களைப் பாழ்படுத்தி, எவ்வித சமூகக் கூச்சமுமின்றி மக்கள் சொத்தைக் கொள்ளை அடிப்பதையே வாழ்வியலாகக் கொண்டு வலம் வரும் இரண்டு திராவிட கட்சிகளின் சுயமுகங்களைத் தொடர்ந்து தோலுரித்துக் காட்டி மக்களை விழிப்படையச் செய்ய முயன்று பார்ப்பதே அரசியலில் ஆக்கபூர்வமான பங்களிப்பு இல்லையா?

வாழ்வை வளமாக்கிக் கொள்வதற்கு ஒரு நாள் தி.மு.கவிலும் மறுநாள் அ.தி.மு.க. விலும் மாறிமாறிப் பயணிக்காமல் ஐம்பதாண்டுகளுக்கு மேல் சுதர்மத்தையும், சுயாபிமானத்தையும் இழந்துவிடாமல் ஒரு சிறிய வாடகை வீட்டில் வறுமையோடு வாழ்க்கை நடத்துவது மக்கள் நலன் சார்ந்த அரசியல் தவம் இல்லையா?

உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும் எள்ளளவும் பழுதுபடாமல் சேற்றில் மலர்ந்தாலும் அந்தச் சேறுபடாமல் தன்னைக் காத்துக்கொள்ளும் தாமரையைப்போல் வாழ்வதே அரசியலில் ஒரு பெருமைக்குரிய சிறப்பில்லையா?

இலக்கிய மேடைகளில் பேசுவதற்கு வழங்கப்படும் பணத்தைத் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளின் கல்விக்கும், வறுமையில் வாடும் இளம்பெண்களின் திருமணத்திற்கும் பயன்படுத்துவது ஓர் உயரிய சமூகப் பங்களிப்பில்லையா?

மதுவிலக்கிற்காக மாநிலம் முழுவதும் என்னுடைய காந்திய மக்கள் இயக்கம் நடத்திய போராட்டங்கள், கருத்தரங்கங்கள், மாநாடுகள், வருவாய் இழப்பை ஈடுசெய்ய முதல்வர் ஜெயலலிதாவிடம் சமர்ப்பித்த நிதியாதாரம் பெருக்கும் மாற்றுத் திட்டம் பற்றி ஏதாவது உங்கள் இருவருக்கும் தெரியுமா?

மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் என்ற கொள்கைப் பதாகைகளைச் சுமந்தபடி நாங்கள் தொடர்ந்து நடத்திய வேள்வியை அறியாமல் நீங்கள் இதுவரை வானத்துத் தேவர்களாய் வாழ்ந்து வந்தீர்களா?

இப்போதைய கழுகார் விகடன் குழுமத்திற்குப் புதியவரா? உங்கள் இதழில் ‘எங்கே போகிறோம் நாம்?’ என்று தொடர் கட்டுரைகளையும், அரசியல் திறனாய்வுக் கட்டுரைகளையும், ஒவ்வொரு தலைவர்களின் முரண்பாடுகளையும் பகிரங்க மடல்களின் வடிவில் அறச்சீற்றத்துடன் வெளிப்படுத்திய கட்டுரைகளையும் தமிழருவி மணியன் எழுதியதெல்லாம் நேரிய அரசியலுக்கான பங்களிப்பு இல்லையா?

கஜா புயலில் கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்ட போது ஒற்றை மனிதனாய்க் கல்லூரிகளில் பேசித் துண்டேந்தி 16 லட்சம் ரூபாய்க்கு மேல் ‘ஆனந்த விகடன்’ அறக்கட்டளைக்கு வழங்கிய தமிழருவி மணியனைப் பற்றி உங்களுக்கு என்னதான் தெரியும்?

கலைஞரின் அழைப்பை ஏற்றுத் திட்டக் குழுவில் பணியாற்றியதும், வைகோவை ஆதரித்ததும், 2014-ல் நாடாளுமன்றத் தேர்தலில் இரு திராவிட கட்சிகளுக்கு எதிராகக் கூட்டணியமைத்ததும் விமர்சிக்கப்படலாம். ரஜினியைத் தேர்தல் களத்தில் முன் நிறுத்த முயன்றது கொச்சைப் படுத்தப்படலாம். ஆனால், இவற்றின் மூலம் பழியையும் பகையையும் அன்றி வேறெந்தப் பயனையும் தமிழருவி மணியன் பெற்றுவிடவில்லை.

சுய ஆதாயத்திற்காக எந்த நிலையிலும் செயற்பட்டவனில்லை தமிழருவி மணியன். உங்கள் இருவர் அகராதியில் அமைச்சர்களாக வலம் வருவதும், சாதியைச் சொல்லிக் கட்டப் பஞ்சாயத்து செய்வதும், மதத்தைக் காட்டி மக்களைப் பிரிப்பதும், இனம், மொழி என்று இளைஞர்களை ஏமாற்றுவதும்,கொள்கை பேசிக் கொள்ளை அடிப்பதும் மட்டுமே அரசியல் பங்களிப்பு என்றால் அதைத் தமிழருவி மணியன் எந்நாளும் செயததில்லை என்பது உண்மைதான்.

– தமிழருவி மணியன்.

கோபத்திலும், வெறுப்பிலும் எடுக்கப்படும் முடிவுகள் நீண்ட காலம் நீடிக்காது” என்பதற்கு தமிழருவி மணியன் மிகச் சிறந்த உதாரணம். ஆம், மீண்டும் அரசியலில் களமிறங்க தமிழருவி மணியன் தயாராகி வருகிறார். திமுக – அதிமுகவுக்கு மாற்றாக 3 -வது ஒரு அணியை உருவாக்கும் முயற்சியில் அவர் மறைமுகமாக ஈடுப்பட்டு வருகிறார். அது யார் தலைமையில் என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வரும்.

‘கத்தரிக்காய் முற்றிவிட்டால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்’. அதுவரை காத்திருப்போம்...!

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply