11-வது தேசிய வாக்காளர் தினத்தை, இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 25-ம் தேதி கொண்டாடுகிறது. தில்லி அசோக் ஓட்டலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந், ராஷ்டிரபதி பவனில் இருந்து காணொலி காட்சி மூலம் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
நமது வாக்காளர்களை அதிகாரமிக்கவர்களாகவும், விழிப்புணர்வு மிக்கவர்களாகவும், பாதுகாப்பு மற்றும் தகவல் அறிந்தவர்களாகவும் ஆக்குவதே இந்தாண்டு தேசிய வாக்காளர் தினத்தின் கருப் பொருள். தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்பதை இது எதிர்நோக்குகிறது.
கொரோனா (கொவிட்-19) தொற்று காலத்தில், தேர்தல்களை பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் உறுதிப்பாட்டிலும் இது கவனம் செலுத்துகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதை குறிக்கும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கம், வாக்காளர்கள் குறிப்பாக புதிய வாக்காளர்களின் பதிவை ஊக்குவிப்பதுதான்.
நாட்டின் வாக்காளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாள், வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேர்தல் நடைமுறையில் தகலறிந்த பங்கேற்பை ஊக்குவிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தில், புதிய வாக்காளர்களுக்கு போட்டோ அடையாள அட்டை வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் 2020-21-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை வழங்குவார். ‘ஹலோ வாக்காளர்கள்’ என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள ரேடியோவையும் அவர் தொடங்கி வைக்கிறார். சிறந்த தேர்தல் நடைமுறைக்கான தேசிய விருதுகள், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தகவல் தொழில்நுட்ப நடவடிக்கைகள், பாதுகாப்பு மேலாண்மை, கொரோனா (கொவிட்-19) நேரத்தில் தேர்தல் மேலாண்மை, தேர்தல் விழிப்புணர்வு போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.
மேலும், மொபைல் எண்ணுடன் விண்ணப்பித்துள்ள புதிய வாக்காளர்கள் அனைவருக்கும், ஜனவரி 25 முதல் 31 வரை, ‘இ – இபிக்’ எனப்படும் மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். இதில், புகைப்படம், வரிசை எண், பகுதி எண் உள்ளிட்ட விபரங்களுடன் பாதுகாப்பான ‘க்யூஆர் கோடு’ வசதி இருக்கும். இதை வலைதளம் மூலம் மொபைல் போன் அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
புதிய வாக்காளர்கள் அளிக்கும் மொபைல் போன் எண் இதற்கு முன் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது. இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 1 முதல் அனைத்து வாக்காளர்களுக்கும், ‘இ – இபிக்’ பதிவிறக்கிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.
இவ்வாறு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com