உத்தர பிரதேச மாநிலத்தில் ‘கொரோனா’ பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும்; அதைக் கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டதாகவும்; அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கு நீதிபதிகள் சித்தார்த்த வர்மா, அஜித் குமார் ஆகியோர் முன்பு நேற்று (19.04.2021) விசாரணைக்கு வந்தது.
அப்போது அதிகரித்து வரும் ‘கொரோனா’ பாதிப்புகளை உத்தரபிரதேச மாநில மருத்துவ கட்டமைப்புகளால் கையாள இயலாது என கூறி, கொரோனா தொற்று அதிகம் உள்ள பிரயாக்ராஜ், லக்னோ, வாரணாசி, கான்பூர் மற்றும் கோரக்பூர் ஆகிய 5 நகரங்களுக்கு, ஏப்ரல் 26 வரை முழு ஊரடங்கு பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை ஏற்க மறுத்த உத்தர பிரதேச மாநில அரசு, அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவு மிகப்பெரிய நிர்வாக சிக்கல்களை உருவாக்கும்; ஊரடங்கு சரியான அணுகுமுறை இல்லை. உயிர்களையும் காக்க வேண்டும்; வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும். எனவே இந்த உத்தரவை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.
இதனை அவசர மனுவாக ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இன்று (20.04.2021) தடை விதித்தது. மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த இதுவரை எடுக்கப்பட்ட முன் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, ஒரு வாரத்திற்குள் அறிக்கையாக அளிக்க உத்தர பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
10862_2021_31_11_27753_Order_20-Apr-2021
-Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com