குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!-திருச்சி காட்டூர் பாப்பா குறிச்சியில் நடந்த போராட்டம்.

திருச்சி காட்டூர் அருந்ததியர் தெருவில் கடந்த மூன்று மாத காலமாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, திருச்சி மாநகராட்சி ஆணையரது காரை முற்றுகையிட பொதுமக்கள் முயற்சித்தனர். இதையறிந்த திருச்சி மாநகராட்சி ஆணையர் எஸ்.சிவசுப்ரமணியன் மாற்றுப்பாதையில் சென்றதால், இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காட்டூர் – பாப்பா குறிச்சி சாலையில் காலி குடங்களுடன், விறகுகளை போட்டு சாலை மறியல் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி பொறியாளர் மதிவாணன், போராட்டகாரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரை முற்றுகையிட்டு அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், அடைப்பு ஏற்பட்டிருக்கும் பகுதியில் பள்ளம் தோண்டி பார்ப்பதாகவும், மாநகராட்சி பொறியாளர் மதிவாணன் உறுதியளித்தார். அதனை நம்ப மறுத்த பொதுமக்கள், அவருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் காவல்நிலைய ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையிலான போலீசார், திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுடன் சேர்ந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பகுதியில் விரைவில் குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் அளித்த உறுதியையடுத்து, சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

-ஆர்.சிராசுதீன்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply