மகாராஷ்டிர மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாசிக் நகரத்தில் உள்ள டாக்டர் ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் டேங்கரில் ஏற்பட்ட கசிவின் விளைவாக, நோயாளிகளுக்கு தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போனதால், 11 ஆண்கள் மற்றும் 11 பெண்கள் உள்பட 22 கொரானோ நோயாளிகள் இன்று (21.04.2021) பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொரானோ வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களை விட ; கொரானோ சிகிச்சையின் போது இதுப்போன்ற கவனக் குறைவுகளால் ஏற்படும் உயிரிழப்புகள், உண்மையிலுமே கவலை அளிக்கிறது.
சில வாரங்களுக்கு முன்பாக இதே மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில், ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, அந்த வணிக வளாகத்தின் மேல் தளத்தில் இயங்கி வந்த கொரானோ சிகிச்சை பிரிவுக்கு தீ பரவி, அங்கு சிகிச்சையில் இருந்த கொரானோ நோயாளிகள் பரிதாபமாக பலியானார்கள் என்பதையும், இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாடு முழுவதும் கொரானோ நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவ பிரிவுகளையும் மற்றும் அதைச் சுற்றியுள்ள கட்டிட வளாகங்களையும், கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி, கட்டுப்பாட்டு மையங்களை அமைத்து, இரவு, பகல் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட வேண்டும்.
இப்பணியில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை, அவசியம் ஏற்பட்டால் துணை இராணுவத்தினரையும் இப்பணியில் ஈடுப்படுத்தலாம்.
இதை மத்திய, மாநில ஆட்சியாளர்கள் போர் கால அடிப்படையில் உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஏனென்றால், ‘Prevention is better than cure-வரும் முன் காப்பதே சிறந்தது.’
அதனால்தான்,
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.(திருக்குறள்: 435)
இதன் அர்த்தம் என்ன தெரியுமா?!
தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்! –என்கிறார் நமது திருவள்ளுவப் பெருந்தகை.
-Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com