‘கோவிஷீல்டு’ என்ற ஒரே தடுப்பூசிக்கு மூன்று வெவ்வேறான விலைகள் எப்படி இருக்க முடியும்?!- பிரதமர் நரேந்திர மோதியிடம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி.

File Photo.

சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மத்திய அரசுக்கு ரூ.150-க்கும், மாநில அரசுக்கு ரூ.400 -க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600-க்கும் விலை நிர்ணயம் செய்துள்ளது. ஒரே நிறுவனத்தால் தயாரிக்கப்படும் அதே தடுப்பூசிக்கு மூன்று வெவ்வேறான விலைகள் எப்படி இருக்க முடியும்?!-என, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அக்கடிதத்தின் உண்மை நகலை, நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவு செய்துள்ளோம்.

புதிய தடுப்பூசி கொள்கையால், மக்கள் இடையே ஏற்பட்டுள்ள கோபத்தை உங்களுக்கு தெரியப்படுத்தவே இந்த கடிதத்தை எழுதி உள்ளேன். கடந்த ஆண்டில் கடுமையான பாடங்களை கற்று கொண்ட போதும், நமது மக்களுக்கு வேதனை இருந்த போதிலும், மத்திய அரசானது பாரபட்சமான மற்றும் தன்னிச்சையான கொள்கையை பின்பற்றுகிறது. இது தற்போதைய சவால்களை அதிகரிக்கவே செய்யும்.

மத்திய அரசின் கொள்கையானது, 18 முதல் 45 வயதுடையவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற அரசின் கடமையில் இருந்து விலக செய்கிறது. இதன் மூலம் நாட்டின் இளைஞர்களுக்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதியை கைவிட்டு உள்ளது.

இந்த கொள்கையின் விளைவாக, கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும், சீரம் இந்தியா நிறுவனமானது, 3 விதமான விலை கொள்கையை கடைபிடிக்கிறது. ஒரு டோஸ் மருந்தின் விலை, மத்திய அரசுக்கு ரூ.150 ஆகவும், மாநில அரசுக்கு ரூ.400 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 ஆகவும் நிர்ணயம் செய்து உள்ளது. இதன் மூலம், தடுப்பூசிக்கு பொது மக்கள் அதிகபட்ச விலையை செலுத்த வேண்டியுள்ளது. மாநில அரசின் நிதி நிலைமையில் கடுமையான சிக்கல் ஏற்படும்.

ஒரே நிறுவனத்தால் தயாரிக்கப்படும் அதே தடுப்பூசிக்கு 3 வெவ்வேறான விலைகள் எப்படி இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. இதுபோன்ற தன்னிச்சையான வேறுபாட்டை அனுமதிக்கும் முடிவு நியாயமானது இல்லை. கணிக்க முடியாத தற்போதைய சூழ்நிலையில், துயரங்களில் இருக்கும் மக்களிடம், லாபத்தை சம்பாதிக்க இந்திய அரசு அனுமதிப்பது ஏன்? மருத்துவ வளங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. போதிய அளவு ஆக்சிஜன் இல்லை., மருத்துவ உபகரணங்கள் தேவை நாளுக்கும் நாள் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில், மத்திய அரசு ஏன் இதுபோன்ற கொள்கையை கடைபிடிக்கிறது. மத்திய அரசிடம் 50 சதவீதம் தடுப்பு மருந்துகள் இருந்தாலும், கூட்டாட்சி தத்துவத்தை மனதில் கொண்டு, அதனை ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத்தன்மை மற்றும் சமநிலையை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

-Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN April 24, 2021 7:08 pm

Leave a Reply