அஞ்சாதீர்கள்; கலங்காதீர்கள்; விழிப்பாக இருங்கள்….!
‘கொரோனா’ பெருந்தொற்று ஏழை, பணக்காரன், நல்லவன், கெட்டவன், நகரம், கிராமம்…!- இப்படி எந்த பேதமும் இல்லாமல், இந்தியாவில் பல மாநிலங்களில் காட்டு தீயைப் போல பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த கவலைக்கும், அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.
ஆம், ‘கொரோனா’ நோய் குறித்த அச்சமும், கவலையும், பதட்டமும், நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே போகிறது. இதனால், மக்கள் மனதளவிலும், உடல் அளவிலும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி நிம்மதி இழந்து வருகின்றனர். இதனால் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தானாகவே குறைந்து விடும் ஆபத்து உள்ளது.
ஒரு மாத கால கடின உழைப்பைவிட; ஒரு நிமிட பயமும், கவலையும், மனிதனை பெரிதும் பாதிக்கும் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை.
பொதுவாக 1.பட்டினி கிடப்பது; 2.கவலைப்படுவது; 3.தூங்காமல் இருப்பது!- இந்த மூன்று பிரச்சனைகளும் ஒரு மனிதனுக்கு இல்லாமல் பார்த்துக் கொண்டால், அவனது உடலும், மனதும் நிச்சயம் ஆரோக்கியமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால், கொரோனா தொற்றைப் பொருத்தவரை மேற்காணும் இந்த மூன்று பிரச்சனைகளும், மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும், மிகப்பெரிய சவாலாகவும் இருந்து வருகிறது.
எனவே, மத்திய, மாநில அரசுகள் உள்பட, நலமாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும்; நாட்டு மக்களின் பசியையும்; பட்டினியையும் போக்கி, அவர்கள் மனதில் உள்ள அச்சத்தையும், கவலைகளையும் நீக்கி, அவர்களுக்கு நம்பிக்கையை முதலில் உருவாக்க வேண்டும்.
அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்?!
1.உண்ணும் உணவு, 2.குடிக்கும் நீர், 3.சுவாசிக்கும் காற்று, 4.உடுத்தும் உடைகள், 5.நோய் குறித்த விழிப்புணர்வு!-இவை ஐந்தும் தூய்மையாக இருந்தால், நம்மை ‘கொரோனா’ மட்டுமல்ல; வேறு எந்த நோய்களுமே அண்டாது.
மேலும், பரபரப்பிற்காகவும், மக்கள் மனதில் பதட்டத்தை உருவாக்குவதற்காகவும், ‘கொரோனா’ நோய் குறித்த எதிர்மறையான தகவல்களை செய்தியாக பரப்புவதை விடுத்து; ‘கொரோனா’ நோய் குறித்த நேர்மறையான விழிப்புணர்வு தகவல்களை, நாட்டு மக்களின் கவனத்திற்கு செய்தியாக கொண்டு சேர்ப்பதற்கு, உலகில் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் அனைத்தும் முதலில் முன்வர வேண்டும்.
இந்தியாவை பொருத்தவரை ‘கொரோனா’ நோய் குறித்த நேர்மறையான விழிப்புணர்வு பிரசாரங்களை, நாடு முழுவதும் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் அனைத்தும் தினந்தோறும் கட்டாயம் இலவசமாக வெளியிட வேண்டும் என்ற ஒரு சிறப்பு உத்தரவை பேரிடர் விதிகளின் கீழ் பிறப்பித்து, அதை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில், ஊடக நிறுவனங்களுக்கு உடனே அறிவுறுத்த வேண்டும்.
இதை ஒழுங்காகச் செய்தாலே, ‘கொரோனா’ நோய் குறித்த வதந்திகளுக்கு 100 சதவீதம் முற்றுபுள்ளி வைத்துவிடலாம்.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com